53
முதிர்வா ரிப்பி முத்த வார்மணற்
கதிர்விடு மணியிற் கண்பொரு மாடத்
திலங்குவளை மகளிர் தெற்றி யாடும்
விளங்குசீர் விளங்கில் விழுமங் கொன்ற
5களங்கொள் யானைக் கடுமான் பொறைய
விரிப்பி னகலுந் தொகுப்பி னெஞ்சும்
மம்மர் நெஞ்சத் தெம்மனோர்க் கொருதலை
கைம்முற் றலநின் புகழே யென்றும்
ஒளியோர் பிறந்தவிம் மலர்தலை யுலகத்து
10வாழே மென்றலு மரிதே தாழாது
செறுத்த செய்யுட் செய்செந் நாவின்
வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்
இன்றுள னாயி னன்றும னென்றநின்
ஆடுகொள் வரிசைக் கொப்பப்
15பாடுவன் மன்னாற் பகைவரைக் கடப்பே.

(பி - ம்.) 7 ‘தெமக்கோவொருநினை’ 14 ‘கேற்பப்’

திணையும் துறையும் அவை.

சேரன் 1மாந்தரஞ்சேரலிரும் பொறையைப் பொருந்திலிளங்கீரனார் பாடியது.

(இ - ள்.) முற்றி நீண்ட சிப்பிக்கண் முத்துப்போலும் வெளிய ஒழுங்குபட்ட மணற்கண்ணே ஒளிவிடுகின்ற மணிகளாற் கண்ணைப் பொருகின்ற மாடத்திடத்து விளங்கிய வளையையுடைய மகளிர் வேதி கைக்கண்ணே விளையாடும் விளங்கிய சீர்மையையுடைய விளங்கிற்குப் பகைவரான் வந்த இடும்பையைத்தீர்த்த, போர்க்களத்தைத் தனதாக்கிக் கொண்ட, யானையையும் விரைந்த குதிரையையுமுடைய பொறைய! விரித்துச்சொல்லிற் பரக்கும்; தொகுத்துச்சொல்லிற் பொருள் ஒழிவுபடும்; ஆதலான், மயக்கம்பொருந்திய நெஞ்சையுடைய எங்களுக்கு ஒருதலையாக முடியா, நினதுபுகழ் எந்நாளும்; கல்வியால் விளக்கமுடையோர் பிறந்த இப்பெரிய இடத்தையுடைய உலகத்தின்கண்ணே வாழேமென்றிருத்தலும் கூடாது; விரைய, பல பொருளையும் அடக்கிய செய்யுளைச் செய்யும் செவ்விய நாவினையும் மிக்ககேள்வியையும் விளங்கிய புகழையுமுடைய கபிலன் இன்று உளனாகப்பெறின் நன்று; அது பெற்றிலேனென்று சொல்லிய நினது வென்றிகொண்ட சிறப்பிற்குப் பொருந்தப் பாடுவேன், நீ பகைவரை வென்ற வெற்றியை-எ - று.

மாடத்துமகளிர் மணலிடத்துத் தெற்றிக்கண் ஆடும் விளங்கிலென்க.

தெற்றியென்பதனைக் கைகோத்தாடும் குரவையென்பாரும் உளர்.

பொறைய! கபிலன் இன்று உளனாயின், நன்றுமனென்ற நின் ஆடு கொள்வரிசைக்கொப்பப் பகைவரைக்கடப்பை யான் தாழாது பாடுவேன்; நின்புகழ் விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்; ஆதலான், எமக்குக் கைம்முற்றல; ஒளியோர் பிறந்த இம்மலர்தலையுலகத்து வாழே மென்றலும் அரிதென மாறிக்கூட்டுக.

தாழாது செய்யுட்செய் செந்நாவென இயைப்பினும் அமையும்.

‘ஒளியோர்’ என்றது கபிலன் முதலாயினோரை.

வாழேமென்றலும் அரிதென்றகருத்து, பாடாதிருத்தலும் அரி தென்றதாக்கி யாமும் 2வல்லபடி பாடிப்போதுவேமென்றதாகக் கொள்க.

நன்றுமன் என்பது கழிவின்கண் வந்தது.

பாடுவன்மன்னாலென்றவழி, மன்னும் ஆலும் அசைநிலை.

பாடுவன்மன்னென்பதனை அல்லீற்றுத் தனித்தன்மைவினையாக்கி, நின்வரிசைக்கொப்ப, நின்பகைவரைக்கடப்பைப் பாடுவேன்; அதனால், விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்; மம்மர்நெஞ்சத்து எமக்கு நின்புகழ் கைம்முற்றலவென அவன்புகழை மேம்படுத்துக் கூறியவாறாக உரைப்பினுமமையும். இப்பொருட்குப் பாடுவன்மனென்றதனை ஒழியிசையாகக் கொள்க.

‘சிறந்தசெய்யுள்’ என்றும், ‘செய்யுட்செய்தசெந்நா’ என்றும் பாடம்.


(கு - ரை.) 1. முதிர் முத்தம் : “விளைந்துமுதிர்ந்த விழுமுத்தின்” (மதுரைக். 135). முத்தவார்மணல் : பெரும்பாண். 335; கலித். 136 : 5; பெருங். 1. 48 : 88, 2. 7 : 142, 5. 6 : 41.

1 - 3. புறநா. 36 : 3 - 5.

3. தெற்றி, வேதிகை - திண்ணை ; குரவை யென்னும் பொருளில், ‘தெற்றி’ என்பதற்குப் பின்னியாடுவது என்க; தெற்றல் - பின்னல்.

4. விளங்கில் - மிக்க வளமுள்ளதொரு நகரம்; “மாவண் கடலன் விளங்கி லன்னவெம், மையெழி லுண்கண்” (அகநா. 81)

5. பொறையன் - மலைநாட்டின் தலைவன் ; சேரன் ; பொறை - மலை. ‘களங்கொள் பொறைய’ என்றது போர்க்களம் வென்ற வேந்தர்க்குரித் தாதலான்; புறநா. 4 : 3, 62 : 12; சிலப். 28 : 104 - 5; “ஏந்துவாட்டானை யிரிய வுறைகழித்துப், போந்துவாண் மின்னும் பொருசமத்து - வேந்தர், இருங்களி யானை யினமிரிந் தோடக், கருங்கழலான் கொண்டான் களம்”, “வென்று களங்கொண்ட வேல்வேந்தே” (பு. வெ. 180, 225); “தேன்மிடைந்த தாரினான் செங்களஞ் சிறந்ததே” (சீவக. 279); “கொன்று களங்கொள்ளுங் கொல்யானை வேந்தனை, வென்றுகளங் கொள்ளுமேல் வேந்து” (தொல். புறத். சூ. 5, ந. மேற்.)

8. கைம்முற்றல : இதுபோன்ற மொழிகளிலுள்ள கையென்பதை வினைச்சொல்லோடு வந்த உபஸர்க்கம் என்பர் பிரயோகவிவேக நூலு டையார்.

12. வெறுப்பென்னும் உரிச்சொல் செறிவென்னும்பொருளில் வந்ததற்கும் (தொல். உரி. சூ. 51, சே,; சூ. 49, ந.; இ. வி. சூ. 211, உரை), ‘வெறுப்பு’ என்பது புறப்பொருட்கண் வந்ததற்கும் (தொல். பொருளியல், சூ. 53, ந.) மேற்கோள்.

11 - 2. “மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின், உவலை கூராக் கவலையி னெஞ்சின், நனவிற் பாடிய நல்லிசைக் கபிலன்” (பதிற். 85 : 10-13)

13 - 5. பழிகரப்பு அங்கதத்திற்கு மேற்கோள்; தொல். செய். சூ. 126, பேர்.

15. கடப்பு - கடந்ததனாலாகிய வெற்றி. ‘பாடுவன்மன்’ என்பது முதலிய பகுதி வேறொரு பழைய உரை.

(53)


1. “பலர்மேஎந் தோன்றிய கவிகை வள்ளல், நிறையருந் தானை வெல்போர் மாந்தரன், பொறையன்” (அகநா. 142 : 3 - 5)