320
முன்றின் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப்
பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழற்
கைம்மான் வேட்டுவன் கனைதுயின் மடிந்தெனப்
பார்வை மடப்பிணை தழீஇப் பிறிதோர்
5தீர்தொழிற் றனிக்கலை திளைத்துவிளை யாட
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவ னெழுதலு மஞ்சிக் கலையே
பிணைவயிற் றீர்தலு மஞ்சி யாவதும்
இல்வழங் காமையிற் கல்லென வொலித்து
10மானதட் பெய்த வுணங்குதினை வல்சி
கானக் கோழியோ டிதல்கவர்ந் துண்டென
ஆர நெருப்பி னார னாறத்
தடிவார்ந் திட்ட முழுவள் ளூரம்
இரும்பே ரொக்கலொ டொருங்கினி தருந்தித்
15தங்கினை சென்மோ பாண தங்காது
வேந்துதரு விழுக்கூழ் பரிசிலர்க் கென்றும்
அருகா தீயும் வண்மை
உரைசா னெடுந்தகை யோம்பு மூரே.

(பி - ம்.) 5 ‘தினைத்துவிளையாட’6 ‘புணரரநிலை’ 18 ‘உரைசொல்’

திணையும் துறையும் அவை.

வீரை வெளியனார்.


(கு - ரை.) 1. முஞ்ஞை - முன்னை; “தாளிமுதனீடிய சிறுநறு முஞ்ஞை, முயல்வந்து கறிக்கு முன்றில்”(புறநா. 328 : 14 - 5) “முன்றிலாடு

முஞ்ஞை மூதிலை கறிக்கும்” (தொல்.செய். சூ. 31 பேர். மேற்.) முசுண்டை - முசுட்டைக்கொடி.பம்பி - பரவி.

3. கைம்மான் வேட்டுவன் - யானைவேட்டையாடுபவன்:“யானை வேட்டுவன் யானையும் பெறுமே” (புறநா.214 : 4). கனை - மிகுதி. துயில்மடிந்தென - தூங்க.

4. பார்வை - பார்வை மிருகம்;மிருகங்களை வேட்டையில் அகப்படுத்துவதற்காக வளர்த்துப்பழக்கஞ்செய்யப்படுவது; பெரிய. கண்ணப்ப. 3. பிணையை.

5. தொழில் தீர்ந்த ஆண்மான்.

6. மான்களின் சேர்க்கையை.

6 - 9. கணவன் எழுதற்கும் கலை பிணையினின்றுந்தீர்தற்கும் அஞ்சி மனையோள் புடைபெயர்ந்து நடவாமையால்.ஒலித்தல்: கானக் கோழி முதலியவற்றின் றொழில்.

10. மான்றோலில் உலர்த்திய தினையாகியஉணவை.

11. இதல் - ஒருவகைப் பறவை; புறநா.319 : 6, குறிப்புரை.

12. ஆரம் - சந்தனம். ஆரல் -ஒருவகைமீன்.

13. தடிவு - தடிதல், அறுத்தல்; தடி -துண்டமுமாம். வள்ளூரம் - இறைச்சி; “முழுஉவள் ளுரம்”(புறநா. 219 : 2)

14. கரிய பெரிய சுற்றத்தாருடன்ஒருங்குண்டு.

15. தங்கிச்செல்.

16. கூழ் - பொருள்; “படைகுடி கூழமைச்சு”(குறள், 381)

18. உரை - புகழ். ஊர்க்குச் (18) செல்(15)

(320)