98
முனைத்தெவ்வர் முரணவியப்
பொரக்குறுகிய நுதிமருப்பினின்
இனக்களிறு செலக்கண்டவர்
மதிற்கதவ மெழுச்செல்லவும்
5பிணனழுங்கக் களனுழக்கிச்
செலவசைஇய மறுக்குளம்பினின்
இனநன்மாச் செலக்கண்டவர்
கவைமுள்ளிற் புழையடைப்பவும்
மார்புறச் சேர்ந்தொல்காத்
10தோல்செறிப்பினின் வேல்கண்டவர்
தோல்கழியொடு பிடிசெறிப்பவும்
வாள்வாய்த்த வடுப்பரந்தநின்
மறமைந்தர் மைந்துகண்டவர்
புண்படுகுருதி யம்பொடுக்கவும்
15நீயே, ஐயவி புகைப்பவுந் தாங்கா தொய்யென
உறுமுறை மரபிற் புறநின் றுய்க்கும்
கூற்றத் தனையை யாகலிற் போற்றார்
இரங்க விளிவது கொல்லோ வரம்பணைந்
திறங்குகதி ரலம்வரு கழனிப்
20பெரும்புனற் படப்பையவ ரகன்றலை நாடே.

திணை - வாகை; துறை - அரசவாகை; திணை - வஞ்சியும், துறை கொற்றவள்ளையுமாம்.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) போர்முனைக்கட்பகைவரது மாறுபாடு அடங்கப்பொருதலால் தேய்ந்து குறைந்த நுனையுடைத்தாகிய கோட்டையுடைய நினது இனமாகிய யானை போகக்கண்ட பகைவர் தமது மதில்வாயிற் கதவங்களும் கணையமரங்களும் புதியனவாக இடுதற்குப் பழையன போக்கவும், பட்டோரது பிணம் உருவழியப் போர்க்களத்தை உழக்கிச்செல்லுதலால் வருந்திய குருதிக்கறைபொருந்திய குளம்பையுடைய நினது இனமாகிய நல்ல குதிரை போகக்கண்ட அப்பகைவர்தாம் கவைத்தவேலமுள்ளாற் காட்டுவாயில்களை அடைப்பவும், நின்பகைவரது மார்பின்கண் எறிந்த வழி ஆண்டுத்தைத்து நில்லாது உருவிப்போன 1உறையின்கட் செறித்தலில்லாத நின்வேலைக்கண்ட பகைவர் தமது கிடுகைக் காம்புடனே கைந்நீட்டுச் செறிக்கவும், வாள்வாய்க்கத் தைத்த வடுப்பரந்த நின்னுடைய மறத்தையுடைய வீரரது வலியைக்கண்ட அப்பகைவர் புண்பட்ட குருதியையுடைய அம்பைத் தூணியகத்து அடக்கிக் கொள்ளவும், நீதான் 2வெண்சிறுகடுகைக் காவலாகப் புகைப்பவும் தரியாது விரைய வந்து பொருந்துதன் முறைமையையுடைய இயல்பிற் புறத்தே நின்று உயிரைக் கொடுபோதும் கூற்றத்தையொப்பை; ஆதலாற் பகைவர் இரங்கக் கெடுவது கொல்லோ! 3வரம்பைச்சேர்ந்து வளையும் நெற்கதிர் சுழலும் கழனியொடு மிக்க நீர்ப்பக்கத்தையுடைய அவரது அகன்ற இடத்தையுடைய நாடு-எ - று.

செல்லவுமென்பது முதலாய செயவெனெச்சங்கள் கூற்றத்தனையை யென்னும் வினைக்குறிப்பொடு முடிந்தன,

நீ கூற்றத்தனையையாகலிற் போற்றார்நாடு அவரிரங்க விளிவது கொல்லெனக் கூட்டுக.

கொல்லும் ஓவும் அசைநிலை,


(கு - ரை.) 5 - 7 புறநா. 97 : 11 - 3; "எறிபிண மிடறிய செம்மறுக் குளம்பிற், பரியுடை நன்மா" (பதிற். 65 : 1 - 2)

8. புழை - சிறியவாயில்.

11. "கழிப்பிணிக் கறைத்தோல்" (அகநா. 24 : 14, 67 : 13)

15. புறநா. 296 : 2.

19. புறநா. 49 : 5; "இறங்குகதிர்க் கழனியும்" (சிலப். 14 : 2)

அரசனது இயல்பின் மிகுதியைக் கூறினமையின் அரசவாகையும் பகைவர் நாட்டின் அழிவைக் கூறினமையின், கொற்றவள்ளையுமாயிற்று இச்செய்யுள்.

(98)


1."உறைகழிப் பறியா வேலோ னூரே" (புறநா. 323 : 7)

2."ஐயவி சிந்தி நறைபுகைத் தாய்மலர் தூஉய்.........யாங்காப்ப" (பு. வெ. 79)

3. "அங்க ணகல்வய லார்பெயற் கலித்த, வண்டோட்டு நெல்லின் வருகதிர் வணங்க" (நெடுநல். 21 - 2)