73
மெல்ல வந்தென் னல்லடி பொருந்தி
ஈயென விரக்குவ ராயிற் சீருடை
முரசுகெழு தாயத் தரசோ தஞ்சம்
இன்னுயி ராயினுங் கொடுக்குவெ னிந்நிலத்
5தாற்ற லுடையோ ராற்றல் போற்றாதென்
உள்ள மெள்ளிய மடவோன் றெள்ளிதிற்
றுஞ்சுபுலி யிடறிய சிதடன் போல
உய்ந்தனன் பெயர்தலோ வரிதே மைந்துடைக்
கழைதின் யானைக் காலகப் பட்ட
10வன்றிணி நீண்முளை போலச் சென்றவண்
வருந்தப் பொரேஎ னாயிற் பொருந்திய
தீதி னெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல்லிருங் கூந்தன் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைகவென் றாரே.

(பி - ம்.) 3 ‘தரசே’ 11 ‘வருந்தவொற்றேனாயிற்’

திணையும் துறையும் அவை.

சோழன் நலங்கிள்ளி (பி - ம். நல்லுருத்திரன்)பாட்டு.

(இ - ள்.) மெல்ல வந்து எனது நல்லஅடியையடைந்து எமக்கு ஈயவேண்டுமென்று தாழ்ந்திரப்பாராயின்,அவர்க்குச் சீர்மையையுடைய முரசு பொருந்திய பழையதாய்வருகின்றஉரிமையையுடைய எனது அரசாட்சி கொடுத்தலோ எளியது;இனிய உயிரேயாயினும் கொடுப்பேன், இந்நிலத்தின்கண்;அமைச்சர் படைத்தலைவர்முதலாகிய வலியையுடையோரதுவலியைப் பாதுகாவாது என்னுள்ளத்தை இகழ்ந்த அறிவில்லாதோன்யாவர்க்கும் விளங்கத் துயில்கின்ற புலியை இடறினகுருடன்போலப் பிழைத்துபோதலோ அரிது; மூங்கிலைத்தின்னும் வலியையுடைய யானையினது காலின்கண் அகப்பட்டவலிய திண்ணிய (பி-ம். திணிய) மூங்கிலது நீண்டமுளையையொப்ப மேற்சென்று 1 அவ்விடத்துவருந்தும்படி பொருதிலேனாயின், கூடிய தீதில்லாதநெஞ்சத்தாற் காதல் கொள்ளாத பலவகைப்பட்ட கரியகூந்தலையுடைய பொதுப்பெண்டிரது பொருந்தாதபுணர்ச்சியிடை என் மாலை துவள்வதாக-எ - று.

‘இரக்குவிராயின்’ என்றுபாடமோதுவாரும் உளர்.

தீதில்காதல்கொள்ளாவென இயைப்பினும்அமையும்.
உள்ளமென்பது உள்ளத்தாற் சூழும் சூழ்ச்சியை.

தன்மேம்பாடு கூறுகின்ற இடமாதலின்,நல்லடியென்பது தற்புகழ்தலென்னும் குற்றமாகாது.


(கு - ரை.) 3. புறநா. 75 : 12.

‘முரசுகெழு தாயத் தரசோ தஞ்சமெனத்தஞ்சக்கிளவி அரசு கொடுத்தலெளிதென எண்மைப்பொருளுணர்த்தியவாறுகண்டுகொள்க’ (தொல். இடை. சூ. 18, சே: ந.; தெய்வச்.இ - வி. சூ. 271, உரை)

1-4. இவ்வடியிலுள்ள மொழிகளால்,சோழன் நலங்கிள்ளியின் மேம்பாடும் வீரமும் வண்மையும்விளங்குகின்றன; புறநா. 10 : 5 - 6 ஆம் அடிகளின்குறிப்புரையும், “தனாதுமேம் பாடுரைத்த றானொடுமொழி”,“தன்னுடை யாற்ற லுணரா ரிடையினும், தன்னை மறுதலைபழித்த காலையும், தன்னைப் புகழ்தலுந் தகும்”, “ஈயென்கிளவி யிழிந்தோன் கூற்றே”, “கொடுவென்கிளவியுயர்ந்தோன் கூற்றே” என்பவைகளும் இங்கே அறியற்பாலன.

7. இந்த அடியும்,“எழுப்புபவோ,துஞ்சு புலியைத் துயில்” (பழமொழி, 33) என்பதும்ஒரு பொருளன.

10. ‘அவண்’ என்றது பகைவருடைய இடத்தை.

9-11. புறநா. 80 : 7. “நெற்கொணெடுவெதிர்க் கணந்த யானை” (குறிஞ்சிப்.35); “சேயுயர் பணைமிசை யெழில் வேழம்” (பரி.1 : 4); “வார்முகின் முழக்கின் மழகளிறு மிகீஇத்தன்,கான்முளை மூங்கிற் கவர்கிளை போல, உய்தல்யாவதுநின் னுடற்றி யோரே” (பதிற். 84 : 11 - 3)

13-4. “முகைவாய்த்த முலைபாயக் குழைந்தநின்றார்”,“கூருகிர் சாடிய மார்புங் குழைந்தநின் றாரும்”,“சாயலின் மார்பிற் கமழ்தார் குழைத்தநின்......தடமென்றோள்” (கலித். 68 : 14, 91 : 11 - 2, 112: 23); “செழுந்தார் குழையைச் சேர்ந்தார்”, “புல்லி.......... குழைந்து தார் திவண்ட தன்றே” (சீவக.2034, 2062); பு. வெ. 317.

12-4. “அன்பின் விழையார் பொருள்விழையுமாய்தொடியார், இன்சொ லிழுக்குத் தரும்” (குறள்.911). ஒல்லாமுயக்கு : “வேளாமுயக்கம்” (கலித்.68)

காமம்பற்றியும் பெருமிதம் பிறக்குமென்பதற்கு,‘பல்லிருங்கூந்தல்....தாரே’ என்பது மேற்கோள்; தொல்.மெய்ப்பாடு. சூ, 9, பேர்.

மு. காஞ்சித்திணையுள் இன்னதுபிழைப்பின் இதுவாகியரெனத் துன்னருஞ் சிறப்பின்வஞ்சினங்கூறியதற்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 24, ந.

(73)


1 அவ்விடம் - பகைவரூர;் புறநா.78 : 9 - 12