192
யாது மூரே யாவருங் கேளிர்
தீது நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
5இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னா தென்றலு மிலமே மின்னொடு
வானந் தண்டுளி தலைஇ யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
10முறைவழிப் படூஉ மென்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின்மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே.

திணையும் துறையும் அவை.

கணியன் பூங்குன்றன் பாட்டு.

(இ - ள்.) எமக்கு எல்லாம் ஊர்;எல்லாரும் சுற்றத்தார்; கேடும் ஆக்கமும் தாமே வரினல்லது,பிறர் தர வாரா; நோதலும் அது தீர்தலும் அவற்றையொப்பத்தாமே வருவன; சாதலும் புதிதன்று; கருவிற்றோன்றியநாளே தொடங்கியுள்ளது; வாழ்தலை இனிதென்று உவந்ததுமிலம்;ஒரு வெறுப்பு வந்தவிடத்து இன்னாதென்றிருத்தலுமிலம்;மின்னுடனே மழை குளிர்ந்த துளியைப் பெய்தலான்அமையாது கல்லை யலைத்து ஒலிக்கும் வளவிய பேர்யாற்றுநீரின்வழியே போம் மிதவை (மிதவை - தெப்பம்)போல அரியவுயிர் ஊழின்வழியே படுமென்பது நன்மைக்கூறுபாடறிவோர்கூறிய நூலாலே தெளிந்தேமாகலான், நன்மையான் மிக்கவரைமதித்தலு மிலேம்; சிறியோரைப்பழித்தல் அம்மதித்தலினுமிலேம்-எ- று.

தலைஇயென்பதனைத் தலையவெனத்திரிக்க.

‘முனிவி னின்னா தென்றலு மிலமே’என்றதற்கு முன்னே கூறிய வாழ்தலை வெறுப்பான் இன்னாதென்றுஇகழ்ந்திருத்தலுமில்லேமெனினும் அமையும்.


(கு - ரை.) 1. “யாதானு நாடாமாலூராமா லென்னொருவன், சாந் துணையுங் கல்லாத வாறு”(குறள், 397)
முற்றும்மைக்கு, ‘யாதுமூரே’ என்பது மேற்கோள்; (தொல்.இடை. சூ. 6. கல். ந.)

2. “பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந்தத்தங், கருமமே கட்டளைக் கல்” (குறள், 505);“பெருமையுஞ் சிறுமையுந் தாந்தர வருமே” (வெற்றிவேற்கை)

4. “வருந்து முயிரொன்பான்வாயிலுடம்பிற், பொருந்துதறானே புதுமை” (நன்னெறி,12)

6. இன்னாது - துன்பத்தைத்தருவது.

8. “கல்லலைத் தொழுகுமன்னே”(புறநா. 115 : 4); “கல்பொருதிரங்குங் கதம்வீழருவி” (குறுந். 134 : 5)

9. “செல்யாற்றுத் தீம்புனலிற்சென்மரம் போல” (பரி. 6 : 79); “நீர்வழிப்பட்ட புணை” (நீதிநெறி. 44)

9 - 10. “முன்னே யொருவன் முடித்தான்றன்றுப்பெலாம்” (அறநெறி. 114)

3 - 11. “சாதலும் பிறத்த றானுந்தம்வினைப் பயத்தி னாகு, மாதலு மழிவு மெல்லாமவைபொருட் கியல்பு கண்டாய், நோதலும் பரிவு மெல்லாநுண்ணுணர் வின்மை யன்றே” (சீவக. 269)

13. அதனினும் இலம்: “பிரியின்வாழ்த லதனினு மிலமே” (குறுந். 168:7)

(192)