136
யாழ்ப்பத்தர்ப் புறங்கடுப்ப
இழைவலந்த பஃறுன்னத்
திடைப்புரைபற்றிப் பிணிவிடாஅ
ஈர்க்குழாத்தோ டிறைகூர்ந்த
5பேஎற்பகையென வொன்றென்கோ
உண்ணாமையி னூன்வாடித்
தெண்ணீரிற் கண்மல்கிக்
கசிவுற்றவென் பல்கிளையொடு
பசியலைக்கும் பகையொன்றென்கோ
10அன்னதன்மையு மறிந்தீயார்
நின்னதுதாவென நிலைதளர
மரம்பிறங்கிய நளிச்சிலம்பிற்
குரங்கன்னபுன் குறுங்கூளியர்
பரந்தலைக்கும் பகையொன்றென்கோ
15ஆஅங், கெனைப்பகையு மறியுநனாய்
எனக்கருதிப் பெயரேத்தி
வாயாரநின் னிசைநம்பிச்
சுடர்சுட்ட சுரத்தேறி
இவண்வந்த பெருநசையேம்
20எமக்கீவோர் பிறர்க்கீவோர்
பிறர்க்கீவோர் தமக்கீபவென
அனைத்துரைத்தனன் யானாக
நினக்கொத்தது நீநாடி
நல்கினை விடுமதி பரிசி லல்கலும்
25தண்புனல் வாயிற் றுறையூர் முன்றுறை
நுண்பல மணலினு மேத்தி
உண்குவம் பெருமநீ நல்கிய வளனே.

திணை - அது; துறை - பரிசில்கடாநிலை.

அவனைத் துறையூர் ஓடைகிழார் (பி - ம். அரிசில்கிழார்)பாடியது.

(இ - ள்.) யாழ்ப்பத்தரினதுபுறத்தையொப்ப இழைசூழ்ந்த பல தையலினது இடைக்கண்உளவாகிய புரைகளைப்பற்றி ஒன்றோடொன்று தொடர்ந்தபிணிப்பு விடாதே கிடக்கின்ற ஈரினது திரளோடு தங்குதல்மிக்க பேனாகிய பகையை ஒரு பகையென்பேனோ? உண்ணாமையின்,உடம்பு புலர்ந்து கண் தெளிந்தநீரால் நிறைந்து வியர்ப்புற்றஎனது பல சுற்றத்தோடு
பசிநோய் வருத்தும் பகையை ஒரு பகையென்பேனோ? அப்பெற்றிப்பட்டஎனது இயல்பையும் அறியாராய் நின்கைப்பொருளைத்தாவென்று சொல்லி எம்முடைய நிலைகள் தளரும்படிமரங்கள் செறிந்த குளிர்ந்த மலையிற் குரங்குபோலப்பறித்துக்கொள்ளும் இயல்பையுடைய புல்லிய குறியஆறலைகள்வர் பரந்து வந்து அலைக்கும் பகையை ஒரு பகைஎன்பேனோ? எல்லாப் பகையும் அறிவான் ஆயேயெனக்கருதி எமது வாக்கினால் மிகவும் நினது பெயரைவாழ்த்தி நின்னுடைய புகழை நச்சி ஞாயிறு சுடப்பட்டசுரத்தின் கண்ணே யேறி இவ்விடத்துவந்த பெரிய நச்சுதலையுடையேம்;இங்ஙனம், 1 வறுமையுற்ற எங்களுக்கு ஒன்றைஇடுவோரன்றோ பயன்கருதாது பிறர்க்கு இடுமவர்களாவாரெனவும்எம்மை யொழிந்த பிறர்க்கு இடுவாரன்றோ பயன்கருதியிடுதலால் தங்களுக்கே இடுவோரெனவும் அவ்வளவாகயான் சொன்னேனாக, 2 நினக்குப் பொருந்தியதுநீ ஆராய்ந்து எமக்குப் பரிசில் தந்தனையாய்விடுவாயாக; நாடோறும், குளிர்ந்த நீர் ஓடும்வாய்த்தலைகளை யுடைய துறையூரின்கண் துறைமுன்னர் 3நுண்ணிய பலமணலினும் பலநாள் வாழ்கவென வாழ்த்திஉண்பேம், பெரும! நீ தந்த செல்வத்தை-எ - று.

பெரும! நீ நல்கிய வளத்தை அல்கலும்ஏத்தி உண்பேம்; நினக்கு ஒத்தது நீ நாடிப் பரிசில்நல்கினை விடுமதியெனக் கூட்டுக.

'ஆயென' என்பதற்கு ஆயென்று பிறர்சொல்லவென்றும், ‘எமக்கீவோர் பிறர்க்கீவோர்'என்பதற்கு எமக்கீவோர் எம் வறுமைகண்டு வருத்தமுறுவோர்யாவர்க்கும் ஈவோரெனவும், 'பிறர்க்கீவோர் தமக்கீப'என்பதற்குப் பிறர்க்குக் கொடுப்போர் அக்கொடுக்கப்படுகின்றோர்தமக்கே கொடுப்போராவரெனவும் உரைப்பாரும் உளர்.

கசிவுற்றவென்பதற்கு இரக்கமுற்றவெனினும்அமையும்.

பேஎற்பகையெனவென்புழி எனவும் ஆங்கெனைப்பகையுமென்புழிஆங்கும் அசைநிலை.

கண் தெண்ணீரின் மல்கியெனவும்,வாயாரப் பெயரேத்தியெனவும் மாற்றப்பட்டன.


(கு - ரை.) 1. பத்தர் - யாழுறுப்பினுளொன்று.

4 - 5. புறநா. 69 : 3 - 4, குறிப்புரை: 138 : 5.

10. 'செய்த' என்பதன் குறிப்பாய் 'அன்ன'என்பது வந்ததற்கு மேற்கோள்; தொல். வினை. சூ.37, ந; இ. வி. சூ. 243, உரை.

13. கூளியர் என்பதற்குச் சேவித்துநிற்போர் என்று திருமுரு காற்றுப்படையிலும்,நாடுகாக்கும் வேடர் என்று மலைபடுகடாத்திலும், வேட்டுவர்என்று மதுரைக்காஞ்சியிலும் பொருள் செய்திருக்கின்றனர்நச்சினார்க்கினியர். "மகாஅ ரன்ன மந்தி" (சிறுபாண்.56); "கடும்பறைக் கோடியர் மகாஅ ரன்ன, நெடுங்கழைக்கொம்பர்க் கடுவனுகளினும்" (மலைபடு. 236 - 7)

11 - 4. "ஒப்போன் கூற்றென்றாரேனும்,சிறுபான்மை வலியாற் கொள்ளுமிடத்தும் தாவென்பதுவருமெனக் கொள்க; 'நின்னது....ஒன்றென்கோ'எனவரும்" (தொல், எச்ச. சூ. 50, ந.)

21 - 2. புறநா. 134 : 1 - 2,குறிப்புரை.

23 : 4. புறநா. 140 : 6 - 8.

25. இச்செய்யுளைப் பாடிய புலவர் துறையூரினராதலின்அவ்வூர்த் துறைமணலைக் கூறினர்.

(136)

1 "வறியார்க்கொன் றீவதேயீகைமற் றெல்லாம், குறியெதிர்ப்பை நீர துடைத்து"(குறள்,221)

2 " இரப்பவ ரென்பெறினுங் கொள்வர்கொடுப்பவர், தாமறிவர் தங் கொடையின் சீர்"(ஒளவையார் பாடல்)
3 புறநா. 9 : 8 - 11. குறிப்புரை; 55 : 17 - 21, குறிப்புரை