திணை - அது; துறை - இயன்மொழி. அவனை அவர் பாடியது. (இ - ள்.) யாழோசைபோல இசையால் இன்பமும் செய்யா; காலத்தோடும் கூடியிரா; பொருளும் அறியவாரா; ஆயினும், தந்தையர்க்கு அருளுதல்வந்தன பிள்ளைகளுடைய இளஞ்சொல்; என்னுடைய வாயின்கட்சொல்லும் அத்தன்மையன, பகைவரது காவலையுடைத்தாகிய மதிலையுடைய அரண்பலவற்றையும் வென்ற நெடுமானஞ்சி! நீ அருளுதலால்-எ - று. புதல்வர் மழலை தந்தையர்க்கு அருள்வந்தன; அஞ்சி! நீ அருளுதலால், என் வாய்ச் சொல்லும் அன்னவெனக் கூட்டுக. யாழென்றது யாழிற் பிறந்த ஓசையை. பொருளுமென்னும உம்மை விகாரத்தால் தொக்கது. |
(கு - ரை.) 3. மழலை - எழுத்து வடிவுபெறாது தோற்றும் இளஞ்சொல்; “மெய்பெறா வெழுத்துயிர்க்கு மழலை” (சீவக. 181) 1-3. “அத்தத்தா வென்னுநின், றேமொழி கேட்டலினிது” (கலித். 80 : 14 - 5); “அவர்மழலை கேட்ட லமிழ்தினு மினிதே” (இனியது நாற்பது, 15); “குழலினி தியாழினி தென்பதம் மக்கள், மழலைச்சொற் கேளா தவர்” (குறள், 66); “எழுத்தி னுறழாது வழுத்து பொரு ளின்றிக், குறிப்பொடு படாஅது வெறித்தபுன் சொல்லே ஆயினும் பயந்ததஞ் சேயவர் சொலுமொழி, குழலினும் யாழினு மழகிதாம்” (திருக்கழுமலமும்மணி. 28 : 2 - 5); “செப்ப லுற்ற பொருளின் சிறப்பினால், அப்பொருட் குரை யாவருங் கொள்வரால், இப்பொருட்கென் னுரைசிறி தாயினும், மெய்ப்பொ ருட்குரி யார்கொள்வர் மேன்மையால்” (பெரிய. பாயிரம், 7) (92)
|