173
யான்வாழு நாளும் பண்ணன் வாழிய
பாணர் காண்கிவன் கடும்பின திடும்பை
யாணர்ப் பழுமரம் புள்ளிமிழ்ந் தன்ன
ஊணொலி யரவந் தானுங் கேட்கும்
5பொய்யா வெழிலி பெய்விட நோக்கி
முட்டை கொண்டு வற்புலஞ் சேரும்
சிறுநுண் ணெறும்பின் சில்லொழுக் கேய்ப்பச்
சோறுடைக் கையர் வீறுவீ றியங்கும்
இருங்கிளைச் சிறாஅர்க் காண்டுங் கண்டும்
10மற்று மற்றும் வினவுதுந் தெற்றெனப்
பசிப்பிணி மருத்துவ னில்லம்
அணித்தோ சேய்த்தோ கூறுமி னெமக்கே.

(பி - ம்.) 8 ‘வீற்றுவீற்’

திணையும் துறையும் அவை.

சிறுகுடிகிழான் பண்ணனைச் சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் பாடியது.

(இ - ள்.) யான் உயிர்வாழும்நாளையும் பெற்றுப் பண்ணன் வாழ்வானாக; பாணரே!காண்பீராக, இந்தப் பரிசிலனது சுற்றத்தின்வறுமையை. புதுவருவாயை யுடைத்தாகிப் பழுத்த மரத்தின்கண்ணேபுள்ளினம் ஒலித்தாற் போன்ற ஊணாலுண்டாகிய ஆரவாரந்தானும்கேட்கும்; காலம் தப்பாத மழை பெய்யுங்காலத்தைப்பார்த்துத் தம் முட்டைகளைக் கொண்டு மேட்டுநிலத்தினையடையும்மிகச் சிறிய எறும்பினது சிலவாகிய ஒழுக்கத்தை யொப்பச்சோறுடைக் கையினராய் வேறு வேறு போகின்ற பெரியசுற்றத்தோடும் கூடிய பிள்ளைகளைக் காண்பேம்; கண்டுவைத்தும்எம் பசிவருத்தத்தானும் வழிவரல் வருத்தத்தானும்பின்னரும் பின்னரும் விதுப்புற்று (மனத்தின்விரைவுற்று)க் கேளாநின்றேம், தெளிய. பசிநோய்தீர்க்கும் மருத்துவனது மனை அணித்தோ? தூரிதோ? எங்களுக்குநீர் சொல்லுமின்-எ - று.

காண்க இவனென்பது, காண்கிவன்எனக் கடைக்குறைந்து நின்றது. தானென்பது அசைநிலை.

இது, பரிசில்பெறப் போகின்றான்வருகின்றவரைக் கண்டு வினவுவான் பண்ணனது இயல்பு கூறிவாழ்த்தியவாறு.

இனி, பரிசிலன்றான், ‘அரவமுங் கேட்கும்;சிறாரைக் காண்டும்; கண்டும் மற்றும் மற்றும்வினவுதும்; நீர் எமக்குப் பசிப்பிணி மருத்துவ னில்லம்அணித்தோ சேய்த்தோ கூறுமின்’ என்னாநின்றான்;இவன் கடும்பினது இடும்பையைப் பாணர் காண்க; இங்ஙனம்எம்போலும் இரவலர் வறுமையைத் தீர்க்கின்ற பண்ணன்வாழியவென்று பெறப் போகின்றானைக் கண்டு பெற்றுவருகின்றான் பக்கப்பாணரை நோக்கிக் கூறியதாகஉரைப்பினும் அமையும். இதற்கு என்னாநின்றானென ஒருசொல் வருவித்து உரைக்கப்பட்டது.

அன்றியும், பரிசிற்குச் செல்கின்றான்,பசிப்பிணி மருத்துவ னில்லம் அணித்தோ சேய்த்தோவென்றுபலகாலும் வினவ, அதனை உட்கொண்டு ஊணொலி யரவமுங்கேட்கும்; இருங்கிளைச் சிறார்க் காண்டும்; கண்டும்மற்றும் மற்றும் வினவுதுமெனச் சாதியொருமையாலுளப்படுத்திக்கூறிப் பின்பு இங்ஙனம் காணவும் கேட்கவும் படுவதுநுமக்கு ஏற அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கென்றுஅவரை நோக்கிக் கூறி, பின்பு இங்ஙனம் என் வறுமையும்தீர்த்து இவன் வறுமையுந் தீர்க்கவிருக்கின்ற பண்ணன்யான் வாழுநாளும் பெற்று வாழ்வானாகவெனப் பரிசில்பெற்று வருகின்றான் தன் பக்கப்பாணரை நோக்கிக்கூறியவாறாக உரைப்பாரும் உளர்.

இனி, செல்கின்றான் பக்கப்பாணருள்ஒருவன் ஆண்டு நிற்கின்ற பாணன் பக்கப்பாணரைநோக்கிக் கூறியதாக உரைப்பாரும் உளர்.

ஈண்டும் இவனென்றது பரிசிலனை.

‘மற்று மற்றும் வினவுந் தெற்றென’என்று பாடமோதுவாரும் உளர்.


(கு - ரை.) 1. “மைந்தநீ கோடியெங்கள் வாழ்க்கைநாள் யாவு மென்பார்” (கம்ப.கைகேசிசூழ்வினை. 88)

பண்ணன் : புறநா. 70 : 13, 181 : 6, 388: 10.

வாழிய : வாழ்த்துதற் பொருண்மைக்கண்வந்த யகரவீற்று வியங்கோள் வினைமுற்றிற்கு மேற்கோள்;நன். சூ. 337, மயிலை; இ. வி. சூ. 239, உரை.

4. ஊணொலியரவம் : புறநா. 334 : 7;மணி. 17 : 97; “முட்டாது நடாஅ மட்டூண் கம்பலும்”(பெருங். 2. 2 : 87); “அட்டூண் டுழனி” (நன்.சூ. 211, சங்கர. மேற்.)

3 - 4. புறநா. 47 : 1, 370 : 11.

5 - 7. கருத்து : ‘இனித் தெளிவு என்பது,எறும்பு முட்டை கொண்டு தெற்றியேறின் மழை பெய்ததுமழை பெய்யு மென்பது’ (தொல். வினை. சூ. 45, இளம்.);‘எறும்பு முட்டைகொண்டு தெற்றியேறின் மழைபெய்தல்நூலாற்றெளிந்தான் அவை முட்டைகொண்டு தெற்றி யேறியவழி,மழை பெய்யாமுன்னும் மழை பெய்தது, மழை பெய்யும் என்னும்;ஆண்டு எதிர்காலத்திற்குரிய பொருள் இறந்தகாலத்தானும்நிகழ்காலத்தானும் தோன்றியவாறு கண்டுகொள்க’,‘எறும்பு முட்டைகொண்டு திட்டை யேறியது கண்டுழிமழை பெய்வதாமென்னாது மழைபெய்தது பெய்கின்றதெனக்கூறுதல் தெளிவு’ (தொல். வினை. சூ. 48, சே; கல்;ந; நன். சூ. 383, மயிலை; நன். வி. சூ. 384)

11. “பசிப்பிணி யென்னும் பாவியதுதீர்த்தோர், இசைச்சொலளவைக் கென்னா நிமிராது”,“பசிப்பிணி மருந்து” (மணி. 11 : 80, 81, 28 : 217)

12. வினைக்குறிப்புச்சொல்,பிறிதின் கிழமையாகிய உடைமைப் பொருள்பட நிற்றற்குமேற்கோள்; தொல். வினை. சூ. 23, சேகல்; ந.

(173)