205
முற்றிய திருவின் மூவ ராயினும்
பெட்பின் றீதல் யாம்வேண் டலமே
விறற்சினந் தணிந்த விரைபரிப் புரவி
உறுவர் செல்சார் வாகிச் செறுவர்
5தாளுளந் தபுத்த வாண்மிகு தானை
வெள்வீ வேலிக் கோடைப் பொருந
சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கிய
மான்கணந் தொலைச்சிய கடுவிசைக் கதநாய்
நோன்சிலை வேட்டுவநோயிலை யாகுக
10ஆர்கலி யாணர்த் தரீஇய கால்வீழ்த்துக்
கடல்வயிற் குழீஇய வண்ணலங் கொண்மூ
நீரின்று பெயரா வாங்குத் தேரொ
டொளிறுமருப் பேந்திய செம்மற்
களிறின்று பெயரல பரிசிலர் கடும்பே.

திணையும் துறையும் அவை.

கடியநெடுவேட்டுவன் பரிசில் நீட்டித்தானைப் பெருந்தலைச்சாத்தனார் பாடியது.

(இ - ள்.) நிறைந்த செல்வத்தையுடைய மூவேந்தராயினும் எம்மைப் பேணுதலின்றி ஈதலை யாங்கள் விரும்பேம்; வென்றியான் உளதாகிய சினம் தீர்ந்த விரைந்த செலவையுடைத்தாகிய குதிரையையுடைய அஞ்சி வந்தடைந்த பகைவர்க்குச் செல்லும் புகலிடமாய் அவ்வாறன்றிப் போர் செய்யும் பகைவருடைய முயற்சியையுடைய கிளர்ந்த உள்ளத்தைக் கெடுத்த வாட்போரின் மிக்க படையினையுடைய வெள்ளிய பூவையுடைத்தாகிய முல்லைவேலியையுடைய (புறநா. 144 : 14) கோடையென்னும் மலைக்குத் தலைவ! சிறியனவும் பெரியனவுமாகிய புழைகளைப் போக்கற விலக்கிய மானினது திரட்சியைத் தொலைத்த கடிய செலவையுடைய சினமிக்க நாயையும் வலியவில்லையுமுடைய வேட்டுவ! நீ நோயின்றி இருப்பாயாக; இடியினது மிக்க ஓசையையுடைய புதுப்பெயலைத் தரவேண்டிக் கால்வீழ்த்துக் கடலிடத்தே திரண்ட தலைமையையுடைய முகில் நீரின்றி மீளாதவாறுபோலத் தேருடன் விளங்கிய கோடுயர்ந்த தலைமையையுடைய களிற்றையின்றி மீளா, பரிசிலரது சுற்றம்-எ - று.

புரவியையுடைய விறற்சினந் தணிந்த உறுவரென இயையும்.

செல்சார்வாகித் தாளுளந்தபுத்த பொருநவென இயையும்.

புழைகெட விலங்கிய நாயென இயையும்.

வெள்வீயென்றது அதனையுடைய முல்லையை.

மூவராயினுமென்ற உம்மை சிறப்பும்மை.

கோடைப்பொருந! வேட்டுவ! பெட்பின்றீதல் யாம் வேண்டலம்; பரிசிலர் கடும்பு களிறின்று பெயரல; நீ நோயிலையாகுகவெனக் கூட்டுக.

யான் களிறின்றிப் பெயராநின்றேனென்பது கருத்தாகலின், நோயிலையாகுகவென்பது இகழ்ச்சிக்குறிப்பு.
‘புழைகெட விலங்கி’ என்பதூஉம் பாடம்.


(கு - ரை.) 1. மூவர் - சேர சோழ பாண்டியர். 2. பெட்பு - விருப்பம். 1-2. புறநா. 159 : 22 - 5.

6. கோடை - கோடைமலை, கோடைமலை என்பது இக்காலத்தில் கோடைக்கானல் என வழங்குகின்றது.

7. புழை - நுழை வழி.

9. புறநா. 209 : 14.8-9. புறநா. 33 : 1 - 2.

11-4. கலித். 50 : 15 - 7.

13. புறநா. 15 : 9.14. புறநா. 164 : 10

(205)