| கண்டவர் அருங்கலந் தரீஇப், புலவோர்க்குச் சுரக்கு மவன் ஈகை மாரியும் (மலைபடு.71-2) என்று பிறரும் கூறுதல் காண்க. பரிசிலர்க்கு வழங்கு மிடத்தும் பொதுவுற வழங்காது பரிசிலரது தகுதியறிந்து அதற்கேற்ப வழங்குதல் வேண்டுமென்பதை, வரிசையின் நல்கி என்றார். பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கி, அதுநோக்கி வாழ்வார் பலர் (குறள்.528) என்று சான்றோர் கூறுப. மகளி ரூடுமிடத்துச் சிறிது சினம் நிகழினும், ஊடியவரை உணர்த்துதற்கண் கருத்தைச் செலுத்தாது அவரை வாடப்பண்ணிக் காதலின்பத்தைக் கெடுக்குமாதலால், செலியரத்தை நின் வெகுளி என்றார். ஊடி யவரை யுணராமை வாடிய, வள்ளி முதலரிந் தற்று (1304) என்பது தமிழ்மறை. நான்மறை முனிவர் ஏந்துகை யெதிரே இறைஞ்சுக பெரும என்கின்றாராதலால், முனிவர் முக்கட் செல்வர் என்ற விடத்து முனிவராற் பரவப்படும் முக்கட் செல்வர் என்று உரை கூறினார்; அவராற்பரவப் படும் அருந்தவச் செல்வம் முக்கட் செல்வரிடத் துண்டென்றறிக. 7. சோழன் கரிகாற் பெருவளத்தான் சோழன் கரிகாலன் தமிழ் மக்களால் இன்றுவரை மறக்கப்படாத பெருவேந்தனாவான். சோழநாட்டின் வளத்துக்கும் பெருமைக்கும் முதற்காரணமானவன். இரும்பிடர்த்தலையார்பால் கல்வி கற்று இளமையிலே தன் பகைவரை வென்று புகழ் மேம்பட்டவன். நடுநிலையிலும் அரசியல் முறையிலும் தலைசிறந்தவன். சோழநாட்டின் தலைநகராகிய உறையூரோடு காவிரிப்பூம்பட்டினத்தையும் தலை நகராக்கிச் சிறப்புற்றவன். முடத்தாமக்கண்ணியார், கடியலூர் உருத்திரங்கண்ணனார் முதலிய சான்றோர்களால் பொருநாராற்றுப் படையும் பட்டினப்பாலையும் பாடப்பெற்றவன். இந்நூற்கண் இப்பாட்டினைப் பாடிய கருங்குழலாதனாரேயன்றி வெண்ணிக் குயத்தியார் என்பாரும் இவனைப் பாராட்டிப் பாடியுள்ளார். இப்பாட்டினைப் பாடிய கருங்குழலாதனார் சேரநாட்டுச் சான்றோர். கரிகாலனிடத்து பேரன்பும் பெருமதிப்பும் உடையவர். இவர் கரிகாலனுடைய கொற்றத்தைப் பாடும் கருத்தால், அவனது போரின் கடுமையால் பகைவர் நாடு அழிவுறுதலை யெடுத்தோதி, அவன் மனத்தில் அருள் பிறப்பிப்பது மிக நயமாகவுள்ளது.
இப்பாட்டின்கண் பகைவரின் நாடுகள் புதுவருவாய் நிரம்பிப் பயன் பல திகழ்வனவும், அகன்ற பரப்புடையனவுமாம். நீயோ இரவும் பகலும் அந்நாட்டரசர்களான பகைவரைப் பொருதழிக்கக் கருதி,அவர தம் ஊர்களைச் சுட்டெரித்தலால் நாட்டுமக்கள் அழுது புலம்பும் ஆரவாரக் கொள்ளையை விரும்புகின்றாய்; அதனால் அந்நாடுகள் நலமிழந்து கெட்டன காண் என்று கூறுவது இவ்வாதனாரின் சான்றாண்மையைப் புலப்படுத்துகின்றது. | களிறு கடைஇயதாள் கழலுரீஇய திருந்தடிக் கணைபொருது கவிவண்கையாற் கண்ணொளிர்வரூஉங் கவின்சாபத்து | |