| இனித்தாளாலும் அடியாலும் கையாலும் சாபத்தாலும் மார்பாலும் முன்பாலும் கொள்ளை மேவலையாகலின் என ஆலுருபு விரித்துரைப்பினுமமையும்.
இது, பிறர் அகன்றலை நாடு நல்ல வில்ல வாகுப வென்றமையிற் கொற்ற வள்ளையும், ஊர் சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலை யென்றமையின் மழபுல வஞ்சியுமாயிற்று.
விளக்கம்: யானையின் பிடரிமேலிருந்து அதனைச் செலுத்து வோர்க்குக் காலே பெருங்கருவியாதலால், களிறு கடைஇய தாள் என்றார். கடவிய என்பது கடைஇய வென நின்றது. உறுப்புநூல் வல்லார் கூறும் இலக்கணப்படியே அமைந்த அடியென்றற்குத் திருந்து அடி என்றாராகலின், இலக்கணத்தால் திருந்திய அடி யென உரை கூறப்பட்டது. இனி, இவ்வாறு கொள்ளாது முன் வைத்தது பின் வையாத அடியென்று கொள்ளினும் பொருந்தும் என்பார், பிறக்கிடாத அடி யெனினு மமையும் என்று உரைகாரர் கூறினார். கணைபொருது என்பதற்கு அம்பொடு பொருது என்றுரைத்தார். அம்பொடு பொருதலாவது இதுவென்பார், கணைபொரு தென்றது அதனொடு மருவுதலை என்றார். கவிகை. வினைத்தொகை; பிறர்க்கு வேண்டுவது வழங்குதற்காகக் கவியும் கையென்பது பொருள். நிரம்ப அள்ளிக் கொடுக்கும் இயல்பு தோன்ற வண்கை யென்றார். ஒளிர் வரூஉம் விளங்கும். புனைமறு மார்ப (பரி.4:59) என்றும், திருமறு மார்பு(கலி. 104) என்றும் வந்த இடங்களில் புகழப்படும் மறுவையுடைய மார்ப; திருமகளாதலால் புனைமறு என்றார் என்று பரிமேலழகரும்,திருவாகிய மறுவையுடைத்தாகிய மார்பு என்று நச்சினார்க்கினியரும் கூறியாங்கு, மாமறுத்த மலர்மார்பு என்பதற்குத் திருவாகிய மறுவையுடைய அகன்ற மார்பு என வுரை கூறாது, மறுத்த வென்பதைத் தெரிநிலைப் பெயரெச்சமாகக் கொண்டு,திருமகள் பிறர் மார்பை மறுத்தற் கேதுவாகிய மார்பு என்று கூறுவது குறிக்கத்தக்கது. அழுவிளி யென்பதில் விளி, அழைத்தலும் கூவுதலுமாகிய இருபொருளும் கொண்டு நிற்றலின், இருபொருண்மையும் விளங்க, அழைத்தலுடனே அழுகின்ற கூவுதல் என உரைக்கின்றார். இல்லை யாகுவன நல்லனவாயினும், நாடு இல்ல வாகுப வென நாட்டின் வினையாகக் கூறியதற்குக் காரணம், நாடும் நல்லனவும் இடமும் இடத்து நிகழ்பொருளுமாம் இயைபுடைமை யாதலால். நாடு நல்ல....நின்றது என்றார். இப்பாட்டிற்கு உரைத்துள்ள பொருள் வகையே நோக்கின், நீ கொள்ளை மேவலையாகலின் என்பதற்குக் காரணம் விளங்காமையாலும், அதனைக் காணலுறின், தாளும் அடியும் முதலியவற்றையுடைமை காரணமென்று காணப்படுவதுபற்றி, தாளாலும் அடியாலும்..........உரைப்பினு மமையும் என்றார். 8. சேரமான் கடுங்கோ வாழியாதன் சேரமான் கடுங்கோவாழியாதன், செல்வக் கடுங்கோவாழியாதன் என்றும் கூறப்படுவான். இவனைப் பொறையன் பெருந்தேவி யீன்ற மகன் என்று பதிற்றுப்பத்து ஏழாம்பதிகம் கூறுகிறது. திருமாலிடத்தே இவன் மிக்க ஈடுபாடுடையவன். இவன் கபிலருக்கு நூறாயிரங் காணம் பொன் தந்து நன்றா வென்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் என மேலே காட்டிய பதிகத்தால் அறியலாம். இவன்
|