| கேள் - கேட்பாயாக; இனி - நீ இப்பொழுது; எம் போல் ஒருத்தி நலன் நயந்து - எம்மை யொப்பாள் ஒருத்தியுடைய அழகைக் காதலித்து என்றும் வரூஉம் என்ப (என்றாள்) - எந்நாளும் வருமென்று பலரும் சொல்லுவரென்று கூறினாள்; வயங்கு புகழ் பேகன் - விளங்கிய புகழையுடைய பேகன்; ஒல்லென ஒலிக்கும் தேரொடு - ஒல்லென முழங்கும் தேருடனே; முல்லை வேலி நல்லூரான் - முல்லை வேலியையுடைய நல்லூரின்கன் எ-று.
கிளையையோ வென ஓகாரமும் என்றாளென ஒரு சொல்லும் வருவித்துரைக்கப்பட்டன. நின் கானம் பாடினேமாக, இனைதலானாளாக, யாம் தற்றொழுதனம் வினவ, தன் கண்ணீர் துடைத்து, பேகன் ஒருத்தி நலன்நயந்து நல்லூரின்கண் என்றும் வரூஉ மென்ப என்றாள்; அவளை அருளாயாதல் கொடிதெனக் கூட்டி வினைமுடிவு செய்க.
எம்போ லொருத்தி யென்றது, உவமை கருதாது வன்மை யுரைதோன்ற நின்றது; எம்மைப்போலும் பொதுமக ளொருத்தி யென அவளை யிழித்துக் கூறியவாறுமாம். இனி, யாம் தற்றொழுதனம் வினவினேமாக, அவளாயத்தார் தம் விரலால் அவள் கண்ணீரை துடைத்து, யாம் அவன் கிளைஞரே மல்லேம்; இது புகுந்தவாறு யாம் கூறக் கேளென முன்பு கூறி, பின் பேகன் எம்போ லொருத்தி நலனயந்து நல்லூரின்கட் சென்று வருமென்று சொன்னார்கள்; இவ்வாறு இளையோரும் ஆயத்தோரும் உறும் துன்புறவு தீர்த்து அருளாயாதல் கொடிதென வுரைப்பினு மமையும்.
விளக்கம் : கண்ணகியாரை அருளவேண்டுமென முகம் புகுகின்றாராதலின், தொடக்கத்தே, அருளா யாகலோ கொடிதே யென்றார். அருளாவழிக் கண்ணகியார் உயிரிழத்தலும் பேகனுக்குப் பழியுண்டாதலும் கொடுமையாய் முடியும். கார்காலத்து மழையால் கானம் இனிய காட்சி வழங்கிப் பிரிந்த காதலர் கூடி யின்புறுதற்கு இனிய செவ்வி பயத்தலின், காரெதிர் கானம் என்றார். அரசன் தேவியாவது விளங்க, யாம் தன்னைத் தொழுது வினவினேம் என்றார். எம்போல் ஒருத்தி யென்று கண்ணகி கூறியது கற்புவழிப் பட்டவள் பரத்தை யேத்தினும், உள்ளத் தூடலுண்டென மொழிப (தொல். பொருள். 39) என்பதனால் உடற்குறிப்புணர நின்றது. அவனால் துறக்கப்பட்ட தனது தனிமையை வெறுத்துக் கூறும் குறிப்புடையதாதல் பற்றி, எம்போல் ஒருத்தி யென்றதை ஆசிரியர் கொண்டெடுத்து மொழிந்தார். பரத்தையது நலம் கண்ணகியின் நலத்தின் மிக்கதன்று, ஒத்திருப்பதே; அவ்வாறாக ஒருபாற்கோடல் முறைமையாகாதெனத் தெருட்டுமாறு தோன்ற, எம்மைப்போலும் பொதுமக ளொருத்தியென இழித்துக் கூறியவாறுமாம் என்றார். என்ப என்றது, கண்ணகியார்க்குப் பாங்காயினார் உரைத்தமை பெறப்படும். என்றாள் என முடிக்குஞ் சொல் கூறிற்றிலர், கண்ணகியார் கூற்று முடியு முன்னே தாம் இடையற்று விரைந்து போந்தமையும், முடியுங் காறும் இருந்து கேட்டற்குத் தாம் மனங் கொள்ளாமையும் பேகன் அறியப் புலப்படுத்தற்கு. இதனைக் கைக்கிளைவகைப் பாடாண் பாட் டென்பர் நச்சினார்க்கினியர். |