| 197. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவன் சோழன் கரிகாற் பெருவளத்தானைத் திருமா வளவன் என்றும் சான்றோர் கூறுபவாதலின் இவ் வளவன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவ னெனச் சிறப்பிக்கப்படுகின்றான். இவன் காலத்தே, சேர நாட்டில் சேரமான் குட்டுவன் கோதையும் பாண்டி நாட்டில் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஆட்சி புரிந்தனர். சேரமான் குட்டுவன் கோதையையும், சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னியையும், பாடிச் சிறப்புற்ற கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார், நலங்கிள்ளி சேட்சென்னிக்குப் பின் தோன்றிய இப் பெருந்திருமா வளவனை ஒருகால் காணப்போந்தார். இவரது மனப் பண்பை யறியாது, செல்வச் செருக்கால் கண் மூடியிருந்த வளவன் தான் தரவிருந்த பரிசிலை நீட்டித்தான். அதனால் குமரனார்க்கு வருத்த முண்டாகவே, தமது மனக்கோளைப் புலப்படுத்தும் இந்த அழகிய பாட்டைப் பாடினார். இதன்கண், வேந்தே! யாங்கள் அரசர் நெடுந்தோர்களை யுடையரென்றோ, கடல் போலும் படையினையுடைய ரென்றோ, மேற்சென்ற போர்க ளனைத்தினும் வென்றி மிகுபவரென்றோ கருதி, அவர்களை வியந்து பாராட்டும் பண்பினோ மல்லோம். எம்மால் வியந்து பாராட்டப்படுபவர் சீறூர் மன்னராயினும் எம் பாடறிந்தொழுகும் பண்புடையாரே யாவர். எத்துணைத் துன்பம் வந்தெய்தினும், உண்மை யுணர்வும் நல்லறிவும் இல்லாதவர் எவரோ, அவருடைய செல்வத்தைச் சிறிதும் வேண்டேம்; நல்லறிவுடையவர் மிக்க வறுமை யுற்றாராயினும், அவ்வறுமை பயன்படுவதாகலின், அதனைப் பெரிதும் மதித்துப் பாராட்டுவேம்என்று குறித்தார். பெருந்திருமா வளவன், நல்லிசைப் புலவர் பெருமானுடைய மனக்கோளும் அறிவு கொளுத்தும் ஆண்மையும் நினைந்து, அவர்க்குப் பெரும் பரிசில் நல்கிச் சிறப்பித்தான்.
மதுரைக் குமரனார் இப் பாட்டின்கண், பாடறிந் தொழுகும் பண்பில்லாத வேந்தர் எத்துணைப் பெரியாராயினும், அவர்களைப் பொருளாகக் கொள்ளே மெனச் செம்மாந்து கூறும் இக் கூற்று, பெருந்திருமா வளவன் தொடக்கத்தில், தன் பொருளும் படையும் பெருமையுமெண்ணி இறுமாந்திருந்தமையும், அதனால் அவன் அவர்க்குப் பரிசில் தர நீட்டித்தமையும் தோற்றுவிக்கின்றது. இவரோரன்ன மனத்திட்ப மமைந்த தமிழ்ப் பெரும் புலவர்கள் இன்றும் தோன்றற்குரிய வாய்ப் புக்கள் நாட்டில் உண்டாவது கண்டு தமிழகம் இறும்பூது கொள்கின்றது.
| வளிநடந் தன்ன வாச்செல லிவுளியொடு கொடிநுடங்கு மிசைய தேரின ரெனாஅக் கடல்கண் டன்ன வொண்படைத் தானையொடு மலைமாறு மலைக்குங் களிற்றின ரெனாஅ | 5 | உருமுரற் றன்ன வுட்குவரு முரசமொடு | | செருமேம் படூஉம் வென்றிய ரெனாஅ மண்கெழு தானை யொண்பூண் வேந்தர் வெண்குடைச் செல்வம் வியத்தலோ விலேமே |
|