பக்கம் எண் :

229

     

317. வேம்பற்றூர்க் குமரனார்

     வேம்பற்றூர் என்ற பெயருடைய ஊர்கள் சோழநாட்டிலுமுள்ளன.
பாண்டிநாட்டு வேம்பற்றூர் இன்றவரையும் நல்ல புலவர்கள் பிறந்து சிறக்கும்
ஊராக  இருந்து  வருகிறது.  சான்றோராகிய  குமரனார் பாண்டி நாட்டு
வேம்பற்றூரினர் எனத் துணிந்துரைப் போருமுளர், வேம்பற்றூரிற் பிறந்தது
பற்றி    இவர்    வேம்பற்றூர்க்குமரனார்    எனச்    சான்றோரால்
வழங்கப்படுவாராயினர். தன் உயிர்க்காதலனைப் பிரிந்திருக்கும் தலைமகள்,
அவன் பிரிவாற்றாது மேனி வேறுபட்டிருக்கும் திறத்தை “பெயலுற நெகிழ்ந்து
வெயிலுறச்  சாஅய்,  வினையிற  பாவை” யை  (அகம். 157) உவமங் கூறி
விளக்குவது இவரது புலமை நலத்தைச் சிறப்பித்துக் காட்டுகிறது. போர்வீரரை
“செருவேட்டுச் சிலைக்கும் செங்கண்ணாடவர்” எனத் திருந்த மொழிகின்றார்.
இவர்  பாடினவாக  அகத்தில்  ஒன்றும்  புறத்தில் இப் பாட்டொன்றுமே
கிடைத்துள்ளன.   போரில்  வென்றி  பெற்று  வாகைசூடி   மேம்படும்
வீரனொருவன்  வல்லாண்மையை   இப்பாட்டில்  குறித்துள்ளார்.  இதன்
முழுவடிவும் தோன்றாதவாறு சிதைந்துளது.

 வென்வேல்.......................வந்து
முன்றிற் கிடந்த பெருங்களி யாளற்
கதளுண் டாயினும் பாயுண் டாயினும்
யாதுண் டாயினுங் கொடுமின் வல்லே
5. வேட்கை மீளப.....................
 .............குமெமக்கும் பிறர்க்கும்
யார்க்கு மீய்ந்து துயிலேற் பினனே.

     திணையும் துறையுமவை. வேம்பற்றூர்க் குமரனார் பாடியது.

     உரை: வென் வேல் - வென்றி பயக்கும் வேல்;...வந்து முன்றில் கிடந்த
பெருங் களியாளற்க - வந்து முற்றத்தேயுள்ள பெரிய களிப்பேறிய இவனுக்கு;
அதளுண்டாயினும் - மான் தோல் இருக்குமாயினும்; பாய் உண்டாயினும் -
ஓலையால்  செய்யப்பட்ட  பாயிருக்குமாயினும்;  யாதுண்டாயினும் வல்லே
கொடுமின் - யாதிருப்பினும் விரையக் கொடுப்பீர்களாக; வேட்கை மீள
எமக்குப் பொருள்மேற் சென்ற விருப்பம் மீண்டொழிய;...எமக்கும் பிறர்க்கும்
யார்க்கும் ஈய்ந்து துயிலேற்பினன் - பாணராகிய எங்கட்கும் பிற
இரவலர்க்கும்்எல்லோருக்கும் பொருள் மிகத் தந்து உறங்குதலை மேற்
கொள்வானாயினன்; எ - று.


     கள்ளுண்டு பெருமயக்குற்று வந்தவன் நம்மைக் கேளாதே முற்றத்திற்
கிடந்து உறங்கக்கருதுகின்றானென்பார், “முன்றிற் கிடந்த பெருங்களி
யாளற்கு” என்றும், அவனை வெறிதே தரையில் உறங்கச் செய்வது நன்றன்
றென்பார், “யாதுண்டாயினும் கொடுமின் வல்லே” என்றும் கூறினார்.
“யாதுண்டாயினும் கொடுமின்” என்றது, போர்க்களத்தினும் தன் தோல்
(பரிசை) மேல் கிடக்கும் இயல்பினன் என்பது குறித்த நின்றது.