பக்கம் எண் :

271

     

பெற்றோர்க்குச் செயற்குரிய கடனாம், உற்றார்க்குத்
தம் மகளைக்  கொடுத்து உரியராக்குவது  பெற்றோர்க்குக்  கடனாதலின்,
அதனைச் செய்யாது தாழ்ப்பது குறித்து, “கடவன கழிப்பிவள் தந்தையும்
செய்யான்” என்றார். களிறுகளும் காவல் மறவரும் போர்க்கு உடன்பட்டு
நிற்குமாறு தோன்ற, “களிறுகளும் கடிமரஞ் சேரா சேர்ந்த ஒளிறுவேன்
மறவரும்  வாய்  மூழ்த்தனர்” என்றும்  கூறினார். மூழ்த்தல் - மூடுதல்.
இயங்களின் பன்மை மிகுத்தற்கு “இயவரு மறியாப்  பல்லியம்” என்றார்.
பேதறவு,  கலக்கம்;  மயக்குமாம்.  மகட்கொடையை  விரும்பித் தந்தை
தன்னையரை  அதற்குடன்படச் சேய்யாமையும்  போர்க்குரியராதலைத்
தடாமையும் “அறனிலள்”  என்றற்கு  ஏதுவாயின. அறப்பண்பில்லாது
மறப்பண்பேயுடையளென்றற்குப் “பண்பில் தாய்” என்றார். வேங் கைமலை,
தமிழ் நாட்டிலுள்ள மலைகளுள் ஒன்று; “அருவி வேங்கைப் பெருமலை”
(குறுந். 94) என்று அள்ளூர் நன்முல்லையாரும் கூறுவர். வேங்கை மரங்கள்
மிக   வளர்தலாலும், வேங்கைப்  புலிகள்   வாழ்வதாலும்  இம் மலை
வேங்கைமலை  யெனப்பட்டதெனக்  கருதுதலுமுண்டு. முற்றா  இளமுலை
யென்றது, பெதும்பைப் பருவமெய்திய அணிமைச் செவ்வியுடையளென்பதைத்
தோற்றுவித்து நிற்கிறது; இஃது அன்மொழித்தொகை. மகளழகு கதிர்த்துத்
தோன்றிக் காண்பார்க்கு மகிழ்ச்சி மிகுவித்தலின் “வகை வளர்த்தெடுத்த
நகை” யென்றார். வளர்த்தென்னும் வினையெச்சம் முன்னது காரணப்
பொருட்டு; பின்னது காரியப் பொருட்டு.

    விளக்கம்: மகட்பாற் காஞ்சியாவது, “ஏந்திழையாள்  தருகென்னும்,
வேந்தனொடு வேறு நின்றன்று” (பு. வெ. மா. 4:24) என  வரும். “வேட்ட
வேந்தனும்  வெஞ்சினத்தினன்”  என்றது, மகண்  மறுத்த வழி, வெவ்விய
சினங்கொண்டு போர்செய்தல் ஒருதலையென்பது குறித்து நின்றது. போர்க்குச்
செல்லும் களிற்றின் மருப்புக்குத்  தொடியணிதல்,  செயற்கை வலியூட்டற்கு.
தந்தையும், களிறும் மறவரும் இருக்கும் நிலையினை விதந்தோதியது மகண்
மறுக்கும் தந்தையும் போர்க்குச் சமைந்திருக்கின்றா னென்பதை யுணர்த்தி
நின்றது. பகைவளர்த்திருந்தாளென்றற்கேற்பப் பண்பில் தாய் என்றார். இம்
மகளைப்    பெறாதிருந்தாளாயின், இப்  போர்   நிகழ்ச்சிக்கேதுவின்றா
மென்பதுபற்றி இவ்வாறு  கூறின   ராதலின்   பண்பில்   தாய்   என்றது
குறிப்புமொழியாயிற்று.

337. கபிலர்

     ஆசிரியர் கபிலர் இப் பாட்டின்கண் சோழநாட்டுத் தலைவன் ஒருவன்
ஊருக்குச்  செல்லுகின்றார். அவனுடைய  அருமை  மகள்  தன்  பேதைப்
பருவங்கடந்து   பெதும்பைப்   பருவமெய்தி   இற்செறிக்கப்படும் இயல்
பினளாகின்றாள். அச் செய்தி ஊர் முழுவதும் பரவுகிறது. சூழவுள்ள
நாட்டிலும் படர்கிறது. அவளுடை குடிநலனும் மெய்ந்நலனும் அறிவு நலனும்
யாவராலும் புகழ்ந்து பேசப்படுகின்றன. இச்செய்திகளை ஆசிரியர் கபிலர்
அறிகின்றார். இப் பாட்டின்கண் கபிலர் இப் பெண்ணின் தந்தையின்
இயல்பும் தன்னையர் இயல்பும் கண்டு, “இச் சோணாட்டண்ணல் பேரார
வாரமுடையன்; இவளுடைய தன்னையர் போர் செய்து சிறந்த நெடு வேலைப்
பற்றிக் குருதிபடிந்த தலையினையுடையராய் மறமிக்குள்ளனர்; வேந்தரும்
ஒருவர்பின் ஒருவராய் வந்து மகட்கொடை வேண்டிய வண்ணமிருக்கின்றனர்.
இவளை மணஞ்செய்து கொள்ளும் பேறுடைய வேந்தர் யாவரோ, அது
காண்டற்குரியது என இசைக்கின்றார்.