பக்கம் எண் :

417

     

388. சிறுகுடி கிழான் பண்ணன்

     சிறுகுடிகிழான்   பண்ணனை   இப்   பாட்டால்  ஆசிரியர் மதுரை
அளக்கர்ஞாழலார்  மகனார்  மள்ளனார்  என்னும்  சான்றோர்  பாராட்டிப்
பாடியுள்ளார்.  பண்ணனது  சிறுகுடி  சோழநாட்டில்   திருவீழிமிழலைக்கு
அண்மையில்  திருஞான  சம்பந்தரால்  தேவாரம் பாட்ப்பெற்றவூராகும். இப்
பண்ணனைச்  சோழன்  குளமுற்றத்துத்  துஞ்சிய கிள்ளி வளவனும் கோவூர்
கிழாரும்  பாடியுள்ளனர். முடிவேந்தனான கிள்ளி வளவனே வியந்து பாடும்
பாராட்டுப்பெற்றவன்   இப்பண்ணன்   எனின்,   இவனுக்கு  அக்காலத்தில்
தமிழகத்திலிருந்து நன்மதிப்பு மிகப்பெரிதாம். கிள்ளிவளவனை ஒருகாற பாடிப்
போந்த  கோவூர்  கிழார்  அவனால்  பெரிதும் விரும்பப்பெற்ற பண்ணன்
சிறுகுடியில்  உள்ள  பாதிரிமரத்தின்  மணத்தை வியந்து, “கைகவள்ளீகைப்
பண்ணன்  சிறுகுடிப்பாதிரிகமழுமோதி   யொண்ணுதல்   இன்னகை விறலி”
(புறம். 70)   எனச்சொல்லி  அவ் வளவனை மகிழ்வித்தார். முடிவேந்தனும்
சான்றோரும்   பாராட்டும்  சிறப்புடைய  பண்ணனை  ஆசிரியர்மள்ளனார்
இப்பாட்டின்   கண்   பாடுவாராய்,     இவனை   யான்    நாடோறும்
பாடேனாயின்   நன்றி    கொன்றேனென்னும்     குற்றம்பற்றி    என்
பெருஞ்சுற்றத்தாரைப் பாண்டியன் அருள் செய்யாமல்  ஒழிவானாக என்று
கூறுவதுடன் பண்ணன் புலவர்க்கு விளை நிலங்களை வினைப்பகடுகளோடே
நல்குவன் என்றும், கிணைவனொருவன் பண்ணன்பாற்சென்று கிணைதொட்டுப்
பாடிப் பரவினானாக அவனது வறுமைத் துன்பம்   நீங்குமாறு   தன்பால்
உள்ள  செல்வத்தைத் தந்தான் என்றும் குறித்துள்ளார். அளக்கர் ஞாழலார்
என்றபாலது அளக்கர் ஞாழார் எனவும் காணப்படுகிறது.   மள்ளனாருடைய
தந்தையார்  அளக்கர்  ஞாழல் என்று சிறப்பித்துப் பாடியதுகொண்டு அவர்
அளக்கர் ஞாழலாரெனப்பட்டா ரென்றும் அறியலாம்.   மள்ளனாரென்பது
இவரது  இயற்பெயர்.  இவர் பாடியனவாக அகத்தில் ஏழும் குறுந்தொகையில்
இரண்டும் நற்றினணயில் மூன்றும் புறத்தில் ஈது  ஒன்றுமாகப்  பதின்மூன்று
பாட்டுகள்   உள்ளன.   முல்லைக்   காலத்தே பார்ப்பனமகளிர்  முல்லை
மலரைத்தம்     கூந்தலில்    அணிவரென்றும்,   தலைமகளொருத்தியின்
நலத்துக்கு   உவமையாக   “முருகு புணர்ந் தியன்ற வள்ளி”   யென்றும், 
கொல்லிமலையை  “வெல்போர் வானவன் கொல்லி”  யென்றும் குறிப்பர்.
தலைமகன் ஒருவன் பொருள்மேற் சென்ற தன் நெஞ்சை நோக்கி, “நாளது
செலவும் மூப்பினது வரவும், அரிதுபெறு சிறப்பின் காமத்தியற்கையும்” கனவு
போலக் கழியும் என்பதும், இவைபோல்வன பிறவும் இவருடைய புலமைச்
சிறப்பை    விளக்குவனவாம்.   இப்   பாட்டும்   இடையிற் சில அடிகள்
சிதைந்துள்ளது.

 வெள்ளி தென்புலத் துறைய விளைவயற்
பள்ளம் வாடிய பயணில் காலை
இரும்பறைக் கிணைமகன் சென்றவன் பெரும்பெயர்
சிறுகுடி கிழான் பண்ணற் பொருந்தித்
5தன்னிலை யறியுந னாக வந்நிலை
 இடுக்க ணிரியல் போக வுடைய