அமலன் (அபலன்) என்பான் பிரமகுண்டிகையென்றும் ஆறு கடலொடு கலக்குமிடத்திலுள்ள கோசம்பி நகரத்து வேதியர்களுக்கு நிலம் வழங்கினானென அவ்வூர்க் கல்வெட்டொன்று. (Nel. Ins. O.55pp 988-90) கூறுகிறது. கொண்டவீட ரெட்டி வேந்தருள் அன்னவேமன் என்னும் வேந்தன் தன் உடன்பிறந்தவளும் நல்லன் நுங்கண் என்னும் வேந்தனுடைய பட்டத்தரசியுமான வேமசானி யென்பவட்கு நன்றாக நடுப்பூராண வேமாயுரத்தைப்பிரமதாயமாகச் செப்பேடு நல்கியுள்ளான். (Ep. Ind. Vol. III. பக். 286-92)
இப் பாட்டிற்கூறப்பட்ட குன்றகநல்லூர் என்ற தொடர்நலங் கண்ட சான்றோர் புழற்கோட்டத்தூ ரொன்றற்குக் குன்றகநல்லூர் என்று பெயரிட்டு வழங்கினரெனவும் அதுவே பின்பு புழற்கோட்டத்துக் குன்றக நாட்டுக்குத் தலைமையூராகக் கொள்ளப்பட்டதெனவும், பின்னர் அக்குன்றகநல்லூர் குன்றிகை நாடெனக் கல்வெட்டுக்களில் குறிக்கப்படுவ தாயிற்றெனவும் கருதுதற் கிடனுண்டு. நல்லேர் முதியன் காலத்தே ஆதனுங்கனும் பிறிதோரிடத்தில் வாழ்ந்து சிறந்திருந்தானாயின், அவனை உவமங்கூறுவது வேற்றுமையுணர்வுக் கிடந்தந்து ந்மை விளைவியாதெனத் தெரிதல் வேண்டும். பிடியினையக்கன்றைக்கொணர்ந்து மன்றத்துப் பிணிக்கும் செயலைக் கல்லாடனாரும் கறைடிய மடப்பிடி காணத்தலறக் களிற்றுக் கன்றொழித்தவுவகையர் கலி சிறந்த கருங்கான் மராஅத்துக் கொழுங்கொம்பு பிளந்து, பெரும் பொளி நறவுநொடை நல்லிற்புதவு முதல் பிணிக்கும், கல்லர் விளையர் பெருமகன் புல்லி, வியன்றலை நன்னாட்டு வேங்கடம் (அகம். 83) என்று கூறுவது ஒப்புநோக்கத் தக்கது. கல்லாடனாரும் வேங்கட நாட்டவரென்பது தண்டுளிபலமொழிந் (புறம். 391) தெனவரும் அவர் பாட்டால் தெளியப்படுகிறது. ---
390. அதியமான் நெடுமான் அஞ்சி இப் பாட்டினால் ஒளவையார் அதியமானது கொடைநலத்தைக் கிணைப்பொருநன் ஒருவன் கூற்றில்வைத்துச் சிற்பபிக்கின்றார். இதன் கண் பொருநன் ஒருவன், முல்லை நிலத்து ஆயர் தம்மிற் கூடியெடுக்கும் விழவுக்களம்போல் அணிசிறந்து விளங்கும் அதியமான் பெருமனையை அவன்பால் அன்புடையார் எளிது சென்றடைதல் கூடுமேயன்றி வேறு பட்ட வேந்தர் சேறல் அரிது; அது மிக்க காவலுடையதென்று கூறுகின்றான். ஒருநாள் அவன் அதியமானது தகடூர்க்குச் சென்று அன்றிரவு அவனுடைய மனைமுற்றத்தே நின்று தன் தடாரிப் பறையைக் கொட்டி அதியமானுடைய புகழைப் பாடி நின்றானாக, அதியமான் அப்பொருநனுடைய அழுக்கேறிப் பீறிய உடையைக் களைந்து கள்ளும் அடிசிலும் வெண்கலத்திற்றந்து உண்பித்தான்; பின்பு அவ்வதியமான் அவனுக்கும் அவனுடன் வந்த சுற்றத்தார்க்கும் நெல்லும் பொன்னும் கொடுத்தான். அவற்றைப்பெற்று மகிழ்ந்த அப் பொருநன், பலபொருநர் எம்பால் நின்று வருத்தும் பசித்துன்பத்தை வானமும் அறித்தில என்று வருந்துகின்றனர்; வேந்தனாகிய அதியமான் உளனாதலை அவர் அறிந்திலராதல் அவனைக் கண்டறிந்திலராதல் வேண்டும் என்று இப் பாட்டின்கட் கூறுகின்றான். இப் பாட்டின் இடையே சில அடிகள் சிதைந்துவிட்டன. |