109.வேள் பாரி வேள் பாரிபால் மகட்கொடை வேண்டி மறுக்கப்பட்ட தமிழ் வேந்தர் அதுவே வாயிலாக அவன்பால் பகைமை மிக்கனர். மூவேந்தரும் ஒருவர் ஒருவராக அவனொடு பொருதற்குவந்து தோல்வி யெய்தினர். அதுகண்ட கபிலர், தமிழ் வேந்தர்களே, ஒருவரேயன்றி மூன்று பேரும் ஒருங்கு கூடி நின்று இப் பறம்பினை முற்றுகையிட்டுக் கொள்ளினும் வேள் பாரியை வெல்லுதலும் அரிது; பாரியது இப் பறம்பினைக் கைப் பற்றலும் அரிது; பறம்பு நாட்டவர்க்கு வேண்டும் உணவு வகையில், உழவரது உழவினை வேண்டாதே இப் பறம்புமலை நால்வகை யுணவுப் பொருளை நல்கும்; அகலநீள வுயர வகையில் பறம்பு வானத்தை யொக்கும்; அதிலுள்ள சுனைகளோ வானத்துள்ள விண்மீன்களை யொக்கும்; ஆகவே நீவிர் மரந்தோறும் களிறுகளைப் பிணித்து நிறுத்தி, இடந்தோறும் தேர்களை நிறுத்தி, உங்கள்மெய்ம்முயற்சியாலும் வாட்படையாலும் பறம்பினைப் பெறக் கருதுவது முடியாத செயல் எனத் தெளி மின்; அவ்வாறு கொள்ளக் கருதுவதும் அறியாமை. எனக்குத் தெரியும் அதனைக் கொள்ளும் வழி. அஃதோர் அரியசெயலன்று. நீவிர் நும் வேந்தர் வடிவினை மாற்றிக் கூத்தர் வேடமும், நும்முடைய மகளிர் விறலியர் வேடமும் கொண்டு வேள்பாரியின் திருமுன் சென்று ஆடலும் பாடலும் செய்வீராயின், அவன் அவற்றிற்கு வியந்து தன்னாட்டையும் மலையையும், ஒருங்கே யளிப்பன்என இப்பாட்டின்கண் கூறியுள்ளார். | | அளிதோ தானே பாரியது பறம்பே நளிகொண் முரசின் மூவிரு முற்றினும் உழவ ருழாதன நான்குபய னுடைத்தே ஒன்றே, சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே | | 5 | இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க்கும்மே நான்கே, அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து திணிநெடுங் குன்றந் தேன்சொரி யும்மே வான்க ணற்றவன் மலையே வானத்து | | 10 | மீன்க ணற்றதன் சுனையே யாங்கு மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும் புலந்தொறும் பரப்பிய தேரினி ராயினும் தாளிற் கொள்ளலிர் வாளிற் றாரலன் யானறி குவனது கொள்ளு மாறே | | 15 | சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி விரையொலி கூந்தனும் விறலியர் பின்வர ஆடினிர் பாடினிர் செலினே நாடுங் குன்று மொருங்கீ யும்மே. |
திணை: நொச்சி. துறை: மகண் மறுத்தல். அவனை அவர் பாடியது.
உரை:அளிது பாரியது பறம்பு - இரங்கத்தக்கது பாரியுடைய பறம்பு; நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும் - பெருமையைக்கொண்ட முரசினையுடைய நீயிர் மூவேந்தரும் சூழினும்; உழவர் உழாதன நான்கு பயன் உடைத்து - உழவரால் உழுது விளைக்கப்படாதன நான்கு விளையுளை யுடைத்து; ஒன்று - அவற்றுள் முதலாவது; சிறி இலை வெதிரின் நெல் விளையும் - சிறிய இலையையுடைய மூங்கிலினது நெல் விளையும்; இரண்டு - இரண்டாவது; தீஞ்சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும் - இனிய சுளையையுடைய பலாவினது பழம் ஊழ்க்கும்; மூன்று - மூன்றாவது; கொழுங் கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும் - கொழுவிய கொடியையுடைய வள்ளிக் கிழங்கு தாழ விருக்கும்; நான்கு - நான்காவது; அணி நிற ஓரி பாய்தலின் - அழகிய நிறத்தையுடைய ஓரி பாய்தலான்; மீ தழிந்து - அதன் மேற் பவர் அழிந்து; திணி நெடுங் குன்றம் தேன் சொரியும் - கனத்த நெடியமலை தேனைப் பொழியும்; வான் கண் அற்று அவன் மலை - அகல நீள வுயரத்தால் வானிடத்தை யொக்கும் அவனது மலை; வானத்து மீன் கண் அற்று அதன் சுனை - அவ்வானத்தின்கண் மீனை யொக்கும் அம்மலையின்கட் சுனை; ஆங்கு அவ்விடத்து; மரந் தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும் - மரந்தோறும் கட்டப்பட்ட யானையை யுடையீராயினும்; புலந் தொறும் பரப்பிய தேரினிராயினும் - இடந்தோறும் பரப்பப்பட்ட தேரை யுடையீராயினும்; தாளில் கொள்ளலிர் - உங்கள் முயற்சியாற் கொள்ளமாட்டீர்; வாளில் தாரலன் - நுமது வாள் வலியால் அவன் தாரான்; யான் அறிகுவன் - அது கொள்ளுமாறு யான் அறிவேன் அதனைக் கொள்ளும் பரிசை; சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி - வடித்து முறுக்கப்பட்ட நரம்பினையுடைய சிறிய யாழைப் பண்ணி வாசித்து; விரை யொலி கூந்தல் நும் விறலியர் பின் வர - நறு நாற்றத்தையுடைய தழைத்த கூந்தலையுடைய நும் விறலியர் பின்னே வர; ஆடினிர் பாடினிர் செலின் - ஆடினிராய்ப் பாடினிராய்ச் செல்லின்; நாடும் குன்றும் ஒருங்கு ஈயும் - அவன் நுமக்கு நாட்டையும் மலையையும் கூடத் தருவன் எ-று.
அளிதோ வென்பது, ஈண்டு வியப்பின்கண் வந்தது. ஓரி யென்பது தேன் முதிர்ந்தாற் பரக்கும் நீல நிறம்; முசுக்கலை யெனினு மமையும். குன்றம் தேன் சொரியு மென இடத்துநிகழ் பொருளின் தொழில் இடத்துமேல் ஏறிநின்றது. நான்கு பயனுடைத்தென்று வைத்து, நெல் விளையும், பழம் ஊழ்க்கும், கிழங்கு வீழ்க்கும், தேன் சொரியும் என்று அவற்றின் செய்கை தோன்றக் கூறினா ரெனினும், கருதியது நெல்லும் பழமும் கிழங்கும் தேனுமாகக் கொள்க. வான்கணற்று அணிமலையே யென்று பாடமோதுவாருமுளர். வான்கணற் றென்றது மலையினோக்கமும் பரப்பும். மீன்கணற்றென்றது, சுனையினது பன்மையும், தெளிவும் சிறுமையும் ஈண்டுக் கண்ணென்ப தசைநிலை. தாளென்றது, படையறுத்தலும் அழித்தற்கு வேண்டும் கருவி முதலாயின வியற்றலும். விறலிய ரென்றது, அவர் உரிமை மகளிரை. விளக்கம் : நாட்பட்ட தேன் நிறம் மாறியது கண்டு தேன் ஓரி பாய்ந்து விட்டதென இக்காலத்தும் குறவர் வழங்குகின்றனர். சொரிதல் தேனுக்குரிய வினையாயினும் குன்றம் தேன் சொரியுமெனக் குன்றத்துக் குரித்தாய் நிற்பதுபற்றி, இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்துமேல் ஏறி நின்றதென்றார். தாளிற் கொள்ளலாவது படை வலி யழித்தலும் அழித்தற்கு வேண்டும் கருவி முதலாயின இயற்றிக் கோடலும் ஆகிய செயல்களால் வென்று கொள்ளுதல். உரிமை மகளிர் விறலியராக, வேந்தர் பரிசிலராக வரின், பாரி நாடும் குன்றும் ஒருங்கேயீயும் என்றார். அவ்வாறு செய்ய அவர் மனங் கொள்ளார் என்று கருதிச் செலின்என்றார். யான் அறிகுவன் அது கொள்ளுமாறுஎன்றது, நீவிர் கொள்ளும் திறம் அறியாது களிறும் தேரும் முதலாயின கொண்டு போருடற்றக் கருதினீர்; அச் செயல் நுமக்குப் பயன் தாராது என்பது பட நின்றது. யானறிகுவன் என்புழி அன்னீறு தன்மைக்கண் வந்தது. வீழ்க்கும் - நிலத்திற்குள்ளே ஆழச் சென்றிருக்கும். கீழ் நோக்கிச் செல்வது பற்றி வீழ்க்கும்என்றார்; வீழ்ந்து வீழ் என்பனவும் இக்குறிப்பே யுடையவாதல் காண்க. |