11. சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ

     இச்சேரமான் முடிவேந்தர் மூவருள் ஒருவனாதலேயன்றி, நல்லிசைச்
செய்யுள் பாடும் சான்றோர்  கூட்டத்தும்  ஒருவனாவன்.  இவன்  பாடிய
பாட்டுக்கள் பலவும் பாலைத் திணைக்குரியனவாகும். பாலைக்கலி முற்றும்
இவன்  பாடியனவே.  நற்றிணை,  குறுந்தொகை, அகம் முதலிய தொகை
நூல்களுட் காணப்படும் பாலைப்பாட்டுகளுட் பல இவனாற்பாடப்பட்டவை.
இப்பாட்டுக்கள்  அனைத்தும் இலக்கிய வளமும் அறவுணர்வும் நல்லிசை
மாண்பும்  உடையன.  கொண்கானநாடு  பொன்    மிகவுடையதென்றும்,
அதனை யுடையவன் நன்னன் என்றும், அந்நாட்டிலுள்ள  ஏழிற்  குன்றம்
மிக்க பொருணலமுடையதாகலின் பெறலரிது என்றும் பாராட்டிக் கூறுவன்;
வேனிற்காலத்தில் குயில்கள் மாம்பொழிலிலிருந்து“புணர்ந்தீர் புணர்மினோ”
என இசைக்கும் என்பதும், “கிழவோ ரின்னா  ரென்னாது  பொருள்தான்,
பழவினை மருங்கிற் பெயர்பு பெயர் புறையும்” என்பதும் பிறவும் இவனது
மன மாண்புலமையைப் புலப்படுத்தும். போரில் பகைவர் படையால் உடல்
சிதைந்து உயிர் கெட்ட வீரனை, “அருங்கடன் இறுத்த பெருஞ்செயாளன்”
என்றும், அவன் யாண்டுளன்  எனில்  “சேண்விளங்கு  நல்லிசை  நிறீஇ,
நாநவில்  புலவர்  வாயுளானே” (புறம்.282) என்றும் கூறுவது இவனுடைய
மறப்பண்பை  வலியுறுத்தும்.  இச்சேரமானைப்  பேய்மகள்  இளவெயினி
யென்பார்  பாடியுள்ளார். பேய்மகள் கட்புலனாகாத வடிவுடையளாதலால்,
கட்புலனாமாறு பெண்வடிகொண்டு   இளவெயினியென்னும்   பெயருடன்
நின்று  இதனைப்  பாடினானென்று  இவ்வுரைகாரர்   காலத்தே   சிலர்
கூறியிருக்கின்றனர்.போர்க்களத்துப் பிணந்தின்னும் பேய்மகளிரை வியந்து
விரியப்  பாடிய   சிறப்பால் ,  இளவெயினியார்க்குப்  பேய்மகளென்பது
சிறப்புப்பெயரா  யமைந்ததாகல்  வேண்டும்.  இளவெயினியென்பது இவர்
இயற்பெயர்.   குறமகள்  இளவெயினி  யென்பார்  ஒருவர்   சான்றோர்
குழாத்துட்  காணப்படுதலின்,   அவரின்  வேறுபடுத்த இவரை இவ்வாறு
சிறப்பித்தனர். குறமகள்  என்றதை,  குறிஞ்சிநிலத்து  நன்மகள்   என்று
கொள்ளாது   குறக்குடியிற்     பிறந்த     மகளென்று     பிழைபடக்  
கொண்டது  போல, இவரைப்பேய் மகளென்று கோடல் அறமாகாது.

  அரிமயிர்த் திரண்முன்கை
வாலிழை மடமங்கையர்
வரிமணற் புனைபாவைக்குக்
குலவுச்சினைப் பூக்கொய்து
5. தண்பொருநைப் புனல்பாயும்
 விண்பொருபுகழ் விறல்வஞ்சிப்
பாடல்சான்ற விறல்வேந்தனும்மே
வெப்புடைய வரண்கடந்து
துப்புறுவர் புறம்பெற்றிசினே
10. புறம்பெற்ற வயவேந்தன்
  மறம்பாடிய பாடினியும்மே
ஏருடைய விழுக்கழஞ்சிற்
சீருடைய விழைபெற்றிசினே
இழைபெற்ற பாடினிக்குக்
15.குரல்புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே
  எனவாங்கு
ஒள்ளழல் புரிந்த தாமரை
வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே. (11)

     திணை: - பாடாண்டிணை. துறை - பரிசில்  கடாநிலை.
சேரமான் பாலை  பாடிய  பெருங்கடுங்கோவைப்  பேய்கமள்
இளவெயினி பாடியது.

     உரை: அரிமயிர்த் திரள் முன் கை-ஐய மயிரையுடைய திரண்ட
முன் கையினையும், வாலிழை - தூய ஆபரணத்தையுமுடைய; மட
மங்கையர்  -  பேதை  மகளிர்; வரி மணல் புனை பாவைக்கு -
வண்டலிழைத்த சிற்றிற்கட் செய்த பாவைக்கு; குலவுச் சினைப் பூக்
கொய்து -  வளைந்த  கோட்டுப்பூவைப் பறித்து; தண் பொருநைப்
புனல்  பாயும் -  குளிர்ந்த  ஆன்பொருந்தத்து நீரின்கட் பாய்ந்து
விளையாடும்;  விண்பொரு  புகழ்  விறல்வஞ்சி - வானை முட்டிய
புகழினையும்  வென்றியையுமுடைய  கருவூரின் கண்; பாடல் சான்ற
விறல் வேந்தனும்மே - பாடுதற்கமைந்த வெற்றியையுடைய அரசனும்;
வெப்புடைய  அரண்  கடந்து -  பகை தெறும் வெம்மையையுடைய
அரணை யழித்து;   துப்புறுவர்   புறம்   பெற்றிசின் - வலியோடு
எதிர்ந்தவருடைய   புறக்கொடையைப்  பெற்றான்;  புறம்  பெற்ற
வயவேந்தன் மறம் பாடிய பாடினி யும்மே - அப் புறக்கொடையைப்
பெற்ற வலிய அரசனது வீரத்தைப் பாடிய பாடினியும்; ஏருடைய
விழுக்கழஞ்சின் - தோற்றப் பொலிவுடைய சிறந்த பல கழஞ்சால்
செய்யப்பட்ட; சீருடைய இழை பெற்றிசின் - நன்மையையுடைய
அணிகலத்தைப் பெற்றாள்; இழை பெற்ற
பாடினிக்கு -
அவ்வணிகலத்தைப்   பெற்றாள்;    இழை   பெற்ற பாடினிக்கு-
அவ்வணிகலத்தைப் பெற்ற விறலிக்கு;குரல் புணர் சீர்க்
கொளைவல் பாண் மகனும்மே - முதற் றானமாகிய குரலிலே வந்து
பொருந்தும்   அளவையுடைய  பாட்டைவல்ல பாணனும்; ஒள்ளழல்
புரிந்த தாமரை -   விளங்கிய   தழலின்கண்ணே   ஆக்கப்பட்ட
பொற்றாமரையாகிய; வெள்ளி நாரால்  பூப்பெற்றிசின்  -  வெள்ளி
நாரால் தொடுத்த பூவைப் பெற்றான் எ-று.

     பாடினி  இழை   பெற்றாள்,  பாணன்  பூப்பெற்றான், யான் அது
பெறுகின்றிலேன்   எனப்   பரிசில்   கடாநிலையாயிற்று.  இனி,  இவள்
பேயாயிருக்க,  கட்புலனாயதோர்  வடிவுகொண்டு  பாடினா  ளொருத்தி
யெனவும், “இக்களத்து வந்தோர் யாவரும் பரிசில் பெற்றார்கள்.  ஈண்டு
நின்னோடு எதிர்ந்து பட்டோரில்லாமையான் எனக்கு உணவாகிய  தசை
பெற்றிலேன்”   எனத்   தான்   பேய்மகளானமை  தோன்றப்  பரிசில்
கடாயினாளெனவும் கூறுவாருமுளர். “பாடினிக்குப்......பாண்மகன்”என்பது
அது வெனுருபுகெடக்  குகரம்   வந்தது, உயர்திணையாகலின். பாடினி
பாடலுக்கேற்பக் கொளைவல்  பாண்மகன்  எனினு  மமையும். எனவும்,
ஆங்கும்:  அசைநிலை.  பெற்றிசின் மூன்றும் படர்க்கைக்கண் வந்தன.

     விளக்கம்: அரி-ஐம்மை.ஐம்மையாவது  மென்மை  திரட்சியினைக்
கைக்கேற்றுக.  மங்கை  யென்பது, மங்கைப் பருவத்தராகிய மகளிரைக்
குறியாது  மகளிர்  என்ற  பொதுப்பெயராய்  நிற்றலால், மட மங்கையர்
என்றதற்கு,“பேதை மகளிர்” என்று பொருள் கூறப்பட்டது.பேதை மகளிர்
- விளையாடும் பருவத்து இளமகளிர். வரிமணலிற் புனைந்த பாவையை
வண்டற்பாவை யென்றும் கூறுப. “வண்டற்பாவை வௌவலின், நுண்பொடி
யளைஇக் கடறூர்ப் போளே” (ஐங்.124) எனவருவது காண்க. குலவுச்சினை
யென்புழிக்  குலவுதல்  வளைதல்;  “திருப்புருவ  மென்னச்  சிலைகுலவி”
(திருவா.  திருவெம்.16)  என்புழியும்   குலவுதல்  இப்பொருளில் வருதல்
காண்க.  ஆன்  பொருந்த  மென்னும்  யாறு  வஞ்சிநகரின் புறமதிலைச்
சார்ந்தோடுவது  எனச்   சான்றோர்    (புறம்.387)   கூறுவர்.   அதன்
வெண்மணலில்” மகளிர் விளையாட்டயர்வது  மரபாதலை,  “குறுந்தொடி
மகளிர் பொலஞ் செய் கழங்கிற்  றெற்றியாரும்,  தண்ணான்  பொருநை
வெண்மணல் (புறம். 36) எனப்   பிறரும்   கூறுதலாலும்   அறியலாம்.
வேந்தனுமே   யென்பது செய்யுளின்பங் குறித்து,   “வேந்தனும்மே”
என விகாரமாயிற்று;  “பாடினியும்மே”“பாண் மகனும்மே” என்பவையும்
இது போலவே விகாரம் எனக் கொள்க. வெப்புடைய அரண் என்றவிடத்து
வெம்மை வெப்பென நின்றது; அஃதாவது பகை தெறும் வெம்மை
யென்பர். உறுவர்,ஈண்டுப் போரிடத்தே எதிருறுபவ ரென்றாகிப் 
பகைவர்க்காயிற்று துப்பு,வலி.“மூவருள் ஒருவன் துப்பாகியரென” (புறம்.122)
என்றாற் போலதுப்பென்  பதற்குப் பகை யென்றே கொண்டு, துப்புறுவர்,
பகையுற்றவர்எனினும் பொருந்தும்; “துப்பி னெவனாவர்” (குறள்.1165)
என்பதனால்துப்புப் பகை யாதல் காண்க. ஏர்-தோற்றப் பொலிவு.
விழுக்கழஞ்சென்புழி    கழஞ்சுக்கு    விழுப்பம்    சிறப்பாலும்
பன்மையாலும்உண்டாதலின்,   விழுக்கழஞ்சு   என்றதற்குச் “சிறந்த
பலகழஞ்சு”என  உரைகூறினார்.  இழைகளாவன பொன்னரிமாலை
முத்துமாலை முதலாயின. குரல் முதலிய எழுவகை இசைத் தானங்களுள்,
குரல் முதற்றானமாதலால், “முதற் றானமாகிய குரல்” என்றார்  .சீர், ஒரு
மாத்திரையும் இருமாத்திரையுமாகிய    தாளவளவு.    கொளை  பாட்டு.
பாடினிக்கு என்றவிடத்துக் குவ்வுருபு, சிறப்புப் பொருட்டு. இனி,  உரைகாரர்
பாடினிக்குப்  பாண்மகன்  என  இயைத்து;  பாடினியது  பாண்மகனெனப்
பொருள்கொண்டு உயர்திணையாகலின், அது வென்னும் உருபுகெட, அதன்
பொருண்மை தோன்றக் குகரம் வந்தது என்பர். அதுவென் வேற்றுமைக்கண்
வந்த உயர்திணைத் தொகை விரியு மிடத்து, அதுவென்னும்  உருபுகெடக்
குகரம் வரும் எனத் தொல்காப்பியர் கூறினரேயன்றி,  நான்கனுருபு விரிந்து
தொகாநிலையாய தொடரிடத்தனறாகலின், அவர் கூறுவது  பொருந்தாமை
யறிக.  பாடினிக்கு  என்பதற்குப்  பாடினியது  பாடலுக்கென்று   பொருள்
கொண்டு, அப் பாடற்கேற்பக்  கொளைவல்ல  பாண்மகன்  என்றுரைப்பிற்
பொருத்தமாதலின், “பாடினி பாடலுக் கேற்பக் கொளை வல்ல பாண்மகன்
எனினு  மமையும்”  என்றார்.  இசின்  என்பது முன்னிலைக்குரிய அசைச்
சொல்; ஈண்டு அது படர்க்கைக்கண்  வந்தமையின்,  “பெற்றிசின் மூன்றும்
படர்க்கைக்கண் வந்தன” என்றார்.