111.வேள் பாரி

     இப் பாட்டின்கண் கபிலர், மூவேந்தரையும் நோக்கிப் பாரியின்
தோளாண்மையைப் புகழ்ந்து, “நுமக்கு இப்பறம்பு கொள்ளற் கரிது”
என்றவர், அவ்வியப்பு நீங்கா வுள்ளத்தோடு அப்பறம்பு மலையை
நோக்கி, “பறம்பு மலையே, நீ பாரியாற் காக்கப்படுதலால் நின்னை வேல்
கொண்டு வென்று கைப்படுத்தல் வேந்தர்கட்கு அரிதே; ஆயினும் கிணை
கொண்டு பாடும் விறலி யொருத்தி வேந்தாகிய பாரியைப் பாடி
வருவாளாயின் அவள்  கொள்ளுதற்கு எளியையாய் உள்ளாய்”என்று
கூறுகின்றார்.

அளிதோ தானே பேரிருங் குன்றே
வேலின் வேறல் வேந்தர்க்கோ வரிதே
நீலத், திணைமலர் புரையு முண்கட்
கிணைமகட் கெளிதாற் பாடினள் வரினே.  
(111)

     திணையுந் துறையு மவை; அவனை அவர் பாடியது.

     உரை;அளிது பேரிருங் குன்று - இரங்கத்தக்கது பெரிய கரிய
குன்றம்; வேலின் வேந்தர்க்கோ அரிது - அது வேலான் வெல்லுதல்
வேந்தர்க்கோ அரிது; நீலத்து இணை மலர் புரையும் - நீலத்தினது
இணைந்த மலரை யொக்கும்; உண்கண் கிணைமகட்கு - மையுண்ட
கண்ணையுடைய
கிணையையுடைய விறலிக்கு; எளிது-; பாடினள்
வரின் - பாடினளாய் வரின் எ-று.

     அளிதோ வென்றது, வியப்பின்கண் வந்தது. பாடினளாய் வரின்
என்ற கருத்து அவட்கும் அவ்வாறன்றித் தன் பெண்மையால் மயக்கி
வென்று கோடல் அரிதென்பதாம்.

     விளக்கம்:உள்ளதன் உண்மை கூறிப் பாராட்டுகின்றாராகலின்,
“பேரிருங் குன்றே”என்றார். கிணை மகட்கும் தன் பெண்மையால் மயக்கி
வென்றுகோடல் அரிதென்றார். இதனால், பாரியை இரந்து ஒன்று கோடல்
எளிதேயன்றி, எவரும் மறைமுகமாகவோ நேர்முகமாகவோ வென்று கோடல்
என்பது அரிதென்றவாறாம்.