112.வேள் பாரி

     மூவேந்தருடைய சூழ்ச்சியால் வேள்பாரி இறந்தபின், சான்றோராகிய
கபிலர், அவன் மகளிரை வேறொரு நல்ல காப்புள்ள இடத்தே சேர்த்துவிட,
ஆங்கே ஒரு திங்கட்குமேல் அம் மகளிர் அவர் பாதுகாப்பில் இருந்து
வந்தனர. ஆயினும், அம் மகளிர்க்குப் பாரியை யிழந்த துயரும் பறம்பினைத்
துறந்த வருத்தமும் பெருங்கலக்கத்தைத் தந்தன. ஒருநாளிரவு முழுத்திங்கள்
தன் பானிலவைப் பொழிந்து கொண்டு வானத்தே திகழ்ந்தது; அதுகண்ட
அம் மகளிர்க்கு வருத்தம் கையிகப்பதாயிற்று. அஃதொரு பாட்டாய்
வெளிவந்தது. அஃது இப்பாட்டு.

 
 அற்றைத் திங்க ளவ்வெண் ணிலவின்
எந்தையு முடையேமெங் குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்க ளிவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசில் வேந்தரெம்
5குன்றுங் கொண்டார்யா மெந்தையு மிலமே.  (112)

     திணை பொதுவியல். துறை: கையறுநிலை. பாரிமகளிர் பாடியது.

     உரை: அற்றைத் திங்கள் - மூவேந்தரும் முற்றியிருந்த
அற்றைத் திங்களின்; அவ் வெண்ணிலவில் - அவ் வெள்ளிய
நிலாவின்கண்; எந்தையும் உடையேம் - எம்முடைய தந்தையையு
முடையேம்; எம் குன்றும் பிறர் கொளார் - எம்முடைய மலையையும்
பிறர் கொள்ளார்; இற்றைத் திங்கள் இவ் வெண்ணிலவில் -
இற்றைத் திங்களது இவ் வெள்ளிய நிலவின்கண்; வென்று எறி
முரசின் வேந்தர்- வென்றறைந்த முரசினையுடைய அரசர்; எம்
குன்றும் கொண்டார் - எம்முடைய மலையையும் கொண்டார்; யாம்
எந்தையும் இலம் - யாம் எம்முடைய தந்தையையு மிழந்தேம் எ-று.

      திங்களை மாத மென்பாரு முளர். ஒருவனை மூவேந்தரும்
முற்றியிருந்தும், வஞ்சித்துக் கொன்றமையின் “வென்றெறி முரசின் வேந்த”
ரென்றது, ஈண்டு இகழ்ச்சிக் குறிப்பு.

      விளக்கம்:தந்தையையுங் குன்றையு மிழந்து தனிமைத் துயருழக்கு
மகளிர், இழவாமுன் இருந்த நிலையினையும் உடன் நினைந்து வருந்துமாறு
தோன்ற, “அற்றைத் திங்கள்.....கொளார்”என்றார். “வென்றெறி முரசின்
வேந்தர்”என்றது, நல்வழியால் வென்று முழக்குதற்குரிய முரசினை,
அல்வழியால் பாரியைக் கொன்று முழக்குகின்றமை தோன்ற நின்றமையின்,
இகழ்ச்சிக் குறிப்பினை யுடையதாயிற்று.