142. வையாவிக் கோப்பெரும் பேகன்

     வையாவிக்  கோப்பெரும்   பேகனது    கொடைநலத்தைப்பற்றிச்
சான்றோரிடையே ஒரு சொல்லாடல் நிகழ்ந்தபோது, அவருட் சிலர் அவன்
மஞ்ஞைக்குப் படாம் ஈத்ததும், தன்பால் வரும் இரவலருள் முன் வந்தோர்
பின்  வந்தோரென  அறியாது  வழங்குவதும்  பற்றி அவற்கு மடம்பட
மொழிந்தனர். அதுகேட்ட பரணர், “கழற்கால் பேகன், வரையாது
வழங்குமுகத்தால் மாரி போலக் கொடைமடம் படுவதன்றி, வேந்தரது படை
மயங்கும் போரின்கண் மடம்படுவதிலன்”என்ற கருத்தமைந்த இப்
பாட்டைப் பாடிக் காட்டியுள்ளார்.

 அறுகுளத் துகுத்து மகல்வயற் பொழிந்தும்
உறுமிடத் துதவா துவர்நில மூட்டியும்
வரையா மரபின் மாரி போலக்
கடாஅ யானைக் கழற்காற்பேகன்
5கொடைமடம் படுத லல்லது
 படைமடம் படான்பிறர் படைமயக் குறினே (142)

     திணை: அது. துறை: இயன்மொழி. அவனை அவர் பாடியது.

     உரை: அறு குளத்து உகுத்தும் - வற்றிய குளத்தின் கண்ணே
பெய்தும்;   அகல்  வயல்  பொழிந்தும் - அகன்ற விளை
நிலத்தின்கண்ணே சொரிந்தும்; உறுமிடத்து உதவாது உவர் நிலம்
ஊட்டியும் - இவ்வாறு    குளத்தும்     விளைநிலத்தும்  பெய்யாது
களர்நிலத்தை    நிறைத்தும்;    வரையா  மரபின் - எவ்விடத்தும்
வரையாதமரபினையுடைய;  மாரிபோல - மழை  போல;   கடாஅ
யானைக்  கழற்கால்  பேகன் - மதமிக்க யானையினையுடைய கழல்
புனைந்த  காலையுடைய   பேகன்;   கொடை மடம் படுதலல்லது
- கொடையிடத்துத்தான்   அறியாமைப்படுதலல்லது;   பிறர்
படைமயக்குறின்- பிறர் படை வந்து கலந்து பொரின்;   படை  
மடம் படான் - அப் படையிடத்துத் தான் அறியாமைப் படான் எ-று.

     படை மட மென்றது, வீரரல்லாதார்மேலும் முதுகிட்டார்மேலும்
புண்பட்டார்மேலும் மூத்தார் இளையார்மேலும் செல்லுதல்.

     விளக்கம் : வேண்டுமிடம் இது, வேண்டாவிடம் இது என்னும்
வரையறையின்றி யாண்டும் வரையாது பொழிவது மாரி யென்றற்கு,
“அறுகுளத் துகுத்தும் அகல் வயல் பொழிந்தும், உறுமிடத் துதவாது
உவர்நில மூட்டியும் வரையா மரபின் மாரி” யென்றார். என்றது பேகனும்
தன்பால் வரும் இரவலர், வல்லாராயினும் மாட்டாராயினும்,
பழையோராயினும் புதியோராயினும் யாவர்மாட்டும் வரையாது
வழங்குவனென்றவாறாம். இவ்வாறு வழங்குதற்கண் வேறுபாடு
நோக்காமையின் “கொடை மடம்படுத லல்லது” என்றார். இனி,
ஞானாமிர்தவுரைகாரர், “கொடை மடம் படுதல் அகாரணத்தாற் கொடை
கொடுத்த” லென்பர். மயங்குதல், கலத்தல். தேற்றா வீகை யென
ஒளவையார்  கூறியதும் இக் கொடைமடத்தையேயாம்.