144. வையாவிக் கோப்பெரும் பேகன்

     கண்ணகியாரைக்      கை    துறந்தொழுகும்    பேகனுடைய
புறத்தொழுக்கத்தைக் கேள்வியுற்ற பரணர், அக் கண்ணகியார் பொருட்டு
அவன்பாற் போந்து பாணனொருவன் கூற்றில் வைத்து அவன் தெருளுமாறு,
“வயங்கு புகழ்ப்பேக, முன்னாள், யாங்கள் இவண் இருண்மாலைப் போதில்
போந்து நின் கானத்தைப் பாடினேமாக, இளமகளா ரொருவர் கண் கலுழ்ந்து
எம் முன்னே வந்து அழுதுநின்றார்;
உடனே  யாங்கள்  அவரைத் தொழுது
‘நீவிர்  எம் தலைவனாகிய பேகனுக்குக்  கிளைமை  யுடையீரோ’ வென
வினவினேம்; அவர் தம் கண்ணீரைத்  துடைத்துக்  கொண்டு,   ‘யாம்
அவன்  கிளைஞரல்லேம்; எம்போல்வாள் ஒருத்தியின் நலத்தை விழைந்து
நாடோறும்  அவளுறையும் நல்லூர்க்குத் தேரேறி வந்து போகின்றா னெனப்
பலரும் கூறாநிற்பர்’ என்று உரைத்தார். ஆதலால், அவரை, நீ அருளாயாதல்
கொடிதுகாண்” என்ற பொருளமையப் பாடியுள்ளார்.

 அருளா யாகலோ கொடிதே யிருள்வரச்
சீறியாழ் செவ்வழி பண்ணி யாழநின்
காரெதிர் கானம் பாடினே மாக
நீனறு நெய்தலிற் பொலிந்த வுண்கண்
5கலுழ்ந்துவா ரரிப்பனிபூணக நனைப்ப
 இனைத லானா ளாக இளையோய்
கிளையை மன்னெங் கேள்வெய் யோற்கென
யாந்தற் றொழுதலும் வினவக் காந்தள்
முகைபுரை விரலிற் கண்ணீர் துடையா
10யாமவன் கிளைஞரே மல்லேங் கேளினி
 எம்போ லொருத்தி நலனயந் தென்றும்
வரூஉ மென்ப வயங்குபுகழ்ப் பேகன்
ஒல்லென வொலிக்குந் தேரொடு
முல்லை வேலி நல்லூ ரானே.
    (144)

     திணையுந் துறையும் அவை. அவனை யவள் காரணமாகப்
பரணர் பாடியது.

     உரை : அருளா யாகல் கொடிது - அருள் பண்ணாயாதல்
கொடிது; இருள் வர - மாலைக் காலம் வந்த அளவிலே; சீறியாழ்
செவ்வழி பண்ணி - சிறிய யாழை இரங்கற் பண்ணாகிய செவ்வழி
யென்னும்  பண்ணிலே  வாசிக்கும்  பரிசு  பண்ணி;  நின் காரெதிர்
கானம் பாடினேமாக - நினது மழையை யேற்றுக் கொண்ட
காட்டைப் பாடினேமாக;    நீல்நறு  நெய்தலிற்  பொலிந்த
உன்கண் - நீல நறுநெய்தல்போன்று  பொலிந்த மையுண்ட கண்கள்;
கலுழ்ந்து வார் அரிப் பனி பூண் அகம் நனைப்ப - கலங்கி வீழ்ந்த
இடைவிட்ட துளிகள் பூணையுடைய மார்பை நனைப்ப; இனைதல்
ஆனாளாக - வருந்துதல் அமையா ளாக; இளையோய் கிளையை
மன் எம் கேள் வெய்யோற்கு என - இளையோய்,
கிளைமையையுடையையோ எம்முடைய கேண்மையை
விரும்புவோனுக்கென; யாம் தன் தொழுதனம் வினவ - யாங்கள்
தன்னை வணங்கிக் கேட்டேமாக; காந்தள் புரை விரலின் கண்ணீர்
துடையா - அவள் காந்தள் மொட்டுப்போலும்  விரலாலே தன்
கண்ணீரைத் துடைத்து; யாம் அவன்  கிளைஞரேம்  அல்லேம் -
நாங்கள்   அவனுடைய கிளைஞரேமல்லேம்; கேள் - கேட்பாயாக;
இனி - நீ  இப்பொழுது; எம் போல் ஒருத்தி நலன் நயந்து - எம்மை
யொப்பாள் ஒருத்தியுடைய அழகைக் காதலித்து என்றும் வரூஉம்
என்ப (என்றாள்) - எந்நாளும் வருமென்று பலரும் சொல்லுவரென்று
கூறினாள்; வயங்கு    புகழ்  பேகன் - விளங்கிய  புகழையுடைய
பேகன்; ஒல்லென ஒலிக்கும் தேரொடு - ஒல்லென முழங்கும்
தேருடனே; முல்லை வேலி நல்லூரான் - முல்லை வேலியையுடைய
நல்லூரின்கன் எ-று.

     கிளையையோ வென ஓகாரமும் என்றாளென ஒரு சொல்லும்
வருவித்துரைக்கப்பட்டன. நின் கானம் பாடினேமாக, இனைதலானாளாக,
யாம் தற்றொழுதனம் வினவ, தன் கண்ணீர் துடைத்து, பேகன் ஒருத்தி
நலன்நயந்து நல்லூரின்கண் என்றும் வரூஉ மென்ப என்றாள்; அவளை
அருளாயாதல் கொடிதெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

     எம்போ லொருத்தி யென்றது, உவமை கருதாது வன்மை யுரைதோன்ற
நின்றது; எம்மைப்போலும் பொதுமக ளொருத்தி யென அவளை யிழித்துக்
கூறியவாறுமாம். இனி, யாம் தற்றொழுதனம் வினவினேமாக, அவளாயத்தார்
தம் விரலால் அவள் கண்ணீரை துடைத்து, யாம் அவன் கிளைஞரே
மல்லேம்; இது புகுந்தவாறு யாம் கூறக் கேளென முன்பு கூறி, பின் பேகன்
எம்போ லொருத்தி நலனயந்து நல்லூரின்கட் சென்று வருமென்று
சொன்னார்கள்; இவ்வாறு இளையோரும் ஆயத்தோரும் உறும் துன்புறவு
தீர்த்து அருளாயாதல் கொடிதென வுரைப்பினு மமையும்.

     விளக்கம் : கண்ணகியாரை அருளவேண்டுமென முகம்
புகுகின்றாராதலின், தொடக்கத்தே, “அருளா யாகலோ கொடிதே”
யென்றார். அருளாவழிக் கண்ணகியார் உயிரிழத்தலும் பேகனுக்குப்
பழியுண்டாதலும் கொடுமையாய் முடியும். கார்காலத்து மழையால் கானம்
இனிய காட்சி வழங்கிப் பிரிந்த காதலர் கூடி யின்புறுதற்கு இனிய செவ்வி
பயத்தலின், “காரெதிர் கானம்” என்றார். அரசன் தேவியாவது விளங்க,
“யாம் தன்னைத் தொழுது வினவினேம்” என்றார். “எம்போல் ஒருத்தி”
யென்று கண்ணகி கூறியது “கற்புவழிப் பட்டவள் பரத்தை யேத்தினும்,
உள்ளத் தூடலுண்டென மொழிப” (தொல். பொருள். 39) என்பதனால்
உடற்குறிப்புணர நின்றது. அவனால் துறக்கப்பட்ட தனது தனிமையை
வெறுத்துக் கூறும் குறிப்புடையதாதல் பற்றி, எம்போல் ஒருத்தி யென்றதை
ஆசிரியர் கொண்டெடுத்து மொழிந்தார். பரத்தையது நலம் கண்ணகியின்
நலத்தின் மிக்கதன்று, ஒத்திருப்பதே; அவ்வாறாக ஒருபாற்கோடல்
முறைமையாகாதெனத் தெருட்டுமாறு தோன்ற, “எம்மைப்போலும் பொதுமக
ளொருத்தியென இழித்துக் கூறியவாறுமாம்” என்றார். “என்ப” என்றது,
கண்ணகியார்க்குப் பாங்காயினார் உரைத்தமை பெறப்படும். என்றாள் என
முடிக்குஞ் சொல் கூறிற்றிலர், கண்ணகியார் கூற்று முடியு முன்னே தாம்
இடையற்று விரைந்து போந்தமையும், முடியுங் காறும் இருந்து கேட்டற்குத்
தாம் மனங் கொள்ளாமையும் பேகன் அறியப் புலப்படுத்தற்கு. இதனைக்
கைக்கிளைவகைப் பாடாண் பாட் டென்பர் நச்சினார்க்கினியர்.