146. வையாவிக் கோப்பெரும் பேகன்

     அந்நாளில், சேர மன்னருள் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்
பொறையைப் பாடி, அவன்  தந்த  நாட்டரசைத்  தான்   மேற்கொள்ளாது
அவனையே மேற்கொண்டு ஆட்சி புரியுமாறு இரந்து பின்னின்று வண் புகழ்
பெற்று விளங்கின சான்றோர் அரிசில்கிழார் என்பவர்.  அவரது  ஊராகிய
அரிசில் என்பது அரிசிலாற்றங்கரையில் விளங்கிய ஊராகு மென்று அறிஞர்
கருதுவர். வேளாண்குடித் தோன்றலாகிய இக் கிழார் தகடூரிடத்தே
இரும்பொறையொடு பொருது வீழ்ந்த அதியமான் எழினியிடத்தும் நல்ல
அன்புடையர். தகடூரை வென்றதனாற் சேரனுக்குண்டாகிய சிறப்பைப்
பதிற்றுப்பத்து எட்டாம் பத்தினும், வீழ்ந்த எழியினின் சிறப்பை இத்
தொகை நூற்கண் வரும் “கன்றம ராய”மெனத் தொடங்கும் பாட்டினும்
(230) பாராட்டிப் பாடியுள்ளார். சேரனது பண்பை, “மன்பதை காப்ப அறிவு
வலியுறுத்து, நன்றறியுள்ளத்துச் சான்றோ ரன்ன நின் பண்பு”(பதிற்.72)
என்றும், தான் உணர்வன முழுதுணர்ந்து பிறர்க்குரைத்து நல்வழிப்படுத்தும்
நரைமூதாளனாகிய புரோகிதனைத் தெருட்டிய நலத்தை “வண்மையு
மாண்பும் வளனு மெச்சமும், தெய்வமும் யாவதும் தவமுடை யோர்க் கென,
வேறுபடு நனந்தலைப் பெயரக், கூறினை பெரும” (பதிற். 74) என்றும்
பாராட்டுவர். தகடூரை யெறிதற்கு முன் சேரன்பொருட்டு இவர் அதியமான்
எழினியை யடைந்து சேரனது படைப்பெருமையை யுணர்த்திய
ஞான்று  அவன் கேளாதொழிந்தனன். அதனை, “பொறைய, நின் வளனு
மாண்மையும் கைவண்மையும், மாந்த ரளவிறந்தனவெனப் பன்னாள், யான்
சென்றுரைப்பவுந் தேறார் பிறரும், சான்றோர் உரைப்பத் தெளிகுவர்
கொல்லென, ஆங்குமதி மருளக் காண்குவல், யாங் குரைப்பே னென
வருந்துவல் யானே”(பதிற். 73) என்று கூறுகின்றார். தகடூரை எழினி காத்த
நலத்தை, “வெல்போ ராடவர் மறம் புரிந்து காக்கும், வில்பயில் இறும்பின்
தகடூர்”(பதிற். 78) என்பர். இப் போரில் அதியமான் எழினி வீழ்ந்தது கண்டு
கையற்று வருந்திய அரிசில்கிழர், “பொய்யா எழினி பொருதுகளஞ் சேர,
ஈன்றோள் நீத்த குழவி போல, தன்னமர் சுற்றம் தலைத்தலை இனைய,
கடும்பசி கலக்கிய விடும்பைகூர் நெஞ்சமோடு நோயுழந்து வைகிய
உலகம்”(புறம் 230) என மொழிந்து, கூற்றம், “வீழ்குடி யுழவன் வித்துண்
டாங்கு”எழினியை யுண்டு தனக்கே கேடுசெய்து கொண்டதெனக் கூறினர்.
போரிற் புண்பட்ட வீரனை, மகளிர் புண்ணுக்கு மருந்தும், செவிக்கும்
உள்ளத்துக்கும் இனிய இசையும் வழங்கி யோம்பும் திறனும், புண்பட்டு
விழும் வீரனைச் சான்றோர் பாராட்டுங்கால் அவன் நாணத்தால்
தலையிறைஞ்சும் பண்பும் பிறவும் மிக்க சுவையமைய இவராற்
பாடப்பட்டுள்ளன.

     இவ்வண்ணம் நல்லிசைப் புலமையால் சிறப்புற்று விளங்கும்
அரிசில்கிழார்க்குப் பெரும்பேகன் கண்ணகியாரைத் துறந்து புறத்தொழுகும்
செயல் செவிப்புலனாயிற்று. அவர் அவன்பால் அடைந்து அவன் நலம்
பாராட்டினர். அவனும் இவர்க்குப் பெரும் பரிசில் நல்கினன்; அவர்,
“என்னை நயந்து பரிசில் நல்குவையாயின், யான் வேண்டும் பரிசில் ஈதன்று;
நீ அருளாமையால் அருந்துயருழக்கும் அரிவை, நின் அருட் பேற்றால் தன்
கூந்தலை முடித்துப் பூச்சூடுமாறு நின் தேரும் குதிரையும் பூட்டுற்று அவள்
மனைக்குச் செல்லுதல் வேண்டும்; இதுவே யான் வேண்டும் பரிசில்”என்ற
கருத்தமைந்த இப்பாட்டைப் பாடியுள்ளார்.

 அன்ன வாகநின் னருங்கல வெறுக்கை
அவைபெறல் வேண்டே மடுபோர்ப் பேக
சீறியாழ் செவ்வழி பண்ணிநின் வன்புல
நன்னாடு பாட வென்னை நயந்து
5பரிசி னல்குவை யாயிற் குரிசினீ
 நல்கா மையி னைவரச் சாஅய்
அருந்துய ருழக்குநின் றிருந்திழை யரிவை
கலிமயிற் கலாவங் கால்குவித் தன்ன
ஒலிமென் கூந்தற் கமழ்புகை கொளீஇத்
10தண்கமழ் கோதை புனைய
 வண்பரி நெடுந்தேர் பூண்கநின் மாவே.  (146)

     திணையும் துறையு மவை. அவனை அவள் காரணமாக அரிசில்
கிழார் பாடியது.

     உரை: அன்ன வாக - அத்தன்மையவாக; நின் அருங்கல
வெறுக்கை அவை - நின்னால் தரப்பட்ட பெறுதற்கரிய ஆபரணமும்
செல்வமுமாகிய அவை;பெறல் வேண்டேம் - பெறுதலை விரும்பேம்;
அடுபோர்ப் பேக - கொல்லும் போரையுடைய பேக; சீறி யாழ்
செவ்வழி பண்ணி - சிறிய யாழைச் செவ்வழியாகப்பண்ணி வாசித்து;
நின் வன்புலநன்னாடு பாட - நினது வலிய நிலமாகிய நல்ல
மலைநாட்டைப் பாட; என்னை நயந்து பரிசில் நல்குவை யாயின் -
என்னைக் காதலித்துப் பரிசில் தருகுவையாயின்; குருசில் -
தலைவனே; நீ நல்காமையின் - நீ அருளாமையால்; நைவரச் சாஅய் -
கண்டார் இரங்க மெலிந்து; அருந் துயர் உழக்கும் நின் திருந்திழை
அரிவை - அரிய துயரத்தான் வருந்தும் உன்னுடைய திருந்திய
அணியையுடைய அரிவையது; கலிமயிற் கலாவம் கால்குவித் தன்ன
ஒலிமென் கூந்தல் - தழைத்த மயிலினது பீலியைக் காலொன்றக்
குவித்தாற்போன்ற தழைத்த மெல்லிய கூந்தற்கண்ணே; கமழ் புகை
கொளீஇ - மணம் கமழும் புகையைக் கொள்ளுவித்து; தண் கமழ்
கோதை புனைய - குளிர்ந்த மணங் கமழும் மாலையைச் சூட;
வண்புரி நெடுந் தேர் நின் மா பூண்க - வளவிய செலவையுடைய
உயர்ந்த தேரை நின் குதிரைகள் பூண்பனவாக எ-று.

     அன்னவாக வென்றது, இரவலர்க்கு அருங்கல வெறுக்கைகளை
எளிதிற் கொடுப்பை யன்றே; அவ் வெறுக்கை எமக்கும் எளிதாக
என்றவாறாம்.

     விளக்கம்: இரவலராகிய எம்பால் நீ செய்யும் அருளும் கொடையும்
என்றும் திரியாது எளிதில் அமையும். அத்தன்மையவேயாக இருப்ப, நின்
மனைவிபாற் செய்யும் தலையளியிற்றான் அத்தன்மை சிறிது திரிந்தனை
யென்பதுபட, “அன்னவாக”என்றார். செவ்வழி, இரங்கற் பண். நின்
அரிவைக் குண்டாகிய துயரத்தை அவள் வாய்திறற் துரையாதே மெய்யே
நன்கு புலப்படுமாறு மெலிந்து காட்டுகிற தென்பார், “நைவரச் சாஅய்”
என்றும், அது நீ அருளாமையால் வந்ததென்பார், “நல்காமையின்”என்றும்
கூறினார். மகளிர் கூந்தற்கு மயிற் கலாவத்தை யுவமை கூறுதல் மரபு;
பிறரும், “ஒலிமயிற் கலாவத் தன்ன இவள் ஒலி மென் கூந்தல்”(குறுந்.225)
என்பது காண்க. கணவனைப் பிரிந்த மகளிர் தம்மை ஒப்பனை
செய்துகொள்வதிலராகலின், “கமழ்புகை கொளீஇத் தண்கமழ் கோதை
புனைய”என்றார்.