168. பிட்டங்கொற்றன் பிட்டங்கொற்ற னென்பான் சேரமான் கோதைக்குப் படைத் துணைவன்;பேராண்மையும் கைவண்மையும் ஒருங்குடையவன்; சான்றோர் பலரும் பாராட்டும் தகுதி பெற்றவன். இவன் குதிரை மலையைச் சார்ந்த நாட்டை யுடையவன். வேங்கைப் பூவால் தொடுத்த கண்ணி இவற்குரியதாகும். காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் இவன்பால் மிக்க ஈடுபாடுடையராவர். போருடற்றிப் பெற்ற செல்வ முழுதும் இவன் இரவலர்க் கீத்துப் புகழ் வளர்த்தலிலேயே பயன்படுத்தினான். இவ்வாறிருக்கையில், கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனா ரென்பார், தமிழக முழுதும் உள்ள பரிசிலர் பலரும் இப் பிட்டங்கொற்றன் புகழைப் பெரிதெடுத்துப் பேசுவது கேட்டுப் பிறரை வினவினார்; அவர்களும் சான்றோர் பலரும் பிட்டங்கொற்றனைப் பாடுவதில் பெருவிருப்புடையர்என்றனர். அவர்க்கு இக் கொற்றனைக் காண்டலில் விருப்பமுண்டாக, விரைந்து சென்று கண்டு இப்பாட்டைப் பாடினார். இதன்கண் அவர், குதிரைமலைக் குறவர் விருந்தோம்புந் திறத்தை விரித்தோதி, வில்லோர் பெரும, கொற்ற, இத் தமிழகத்தில் ஈயா மன்னர் கேட்டு நாணுமாறு, பரிசிலர் பலரும் நின் புகழையே பாடுவர் என்று சான்றோர் கூறுகின்றனர்என்று குறித்துள்ளார்.
கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார் பெயர், கருவூர்க் கந்தப்பிள்ளை சாத்தனாரென்றும் காணப்படுகிறது. இவர் சேர வேந்தர்பால் மிக்க அன்புடையவர்; அவரது ஈகைச் சிறப்பை அகப்பாட்டொன்றில் காடு மிக நெடிய வென்னார் கோடியர், பெரும்படைக் குதிரை நற்போர் வானவன், திருந்துகழற் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு(அகம். 309) என்று சிறப்பித்துள்ளார். இவ்வியைபால் சேரர் படைத்துணைவனாகிய பிட்டங்கொற்றனை இவ்வாறு இப்பாட்டில் பாராட்டியுள்ளார். | | அருவி யார்க்குங் கழைபயி னனந்தலைக் கறிவள ரடுக்கத்து மலர்ந்த காந்தட் கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையொடு கடுங்கட் கேழ லுழுத பூழி | | 5 | நன்னாள் வருபத நோக்கிக் குறவர் | | | உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதிணை முந்துவிளை யாணர் நாட்புதி துண்மார் மரையான் கறந்த நுரைகொ டீம்பால் மான்றடி புழுக்கிய புலவுநாறு குழிசி | | 10 | வான்கே ழிரும்புடை கழாஅ தேற்றிச் | | | சாந்த விறகி னுவித்த புன்கம் கூதளங் கவினிய குளவி முன்றிற் செழுங்கோள் வாழை யகலிலைப் பகுக்கும் ஊரலக் குதிரைக் கிழவ கூர்வேல் | | 15 | நறைதார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி | | | வடிநவி லம்பின் வில்லோர் பெரும கைவள் ளீகைக் கடுமான் கொற்ற வையக வரைப்பிற் றமிழகங் கேட்பப் பொய்யாச் செந்நா நெளிய வேத்திப் | | 20 | பாடுப வென்ப பரிசிலர் நாளும் | | | ஈயா மன்னர் நாண வீயாது பரந்தநின் வசையில்வான் புகழே. (168) |
திணை: பாடாண்டிணை. துறை: பரிசிற்றுறை: இயன்மொழியும், அரசவாகையுமாம். பிட்டங்கொற்றனைக் கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார் பாடியது.
உரை: அருவி ஆர்க்கும் கழை பயில் நனந்தலை - அருவி ஒலித்திழியும் வேய் பயின்ற அகன்றவிடத்து; கறி வளர் அடுக்கத்து - மிளகு கொடி வளரும் மலைச்சாரலினிடத்து; மலர்ந்த காந்தள் கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி - மலர்ந்த காந்தளினது கொழுவிய கிழங்கு பிறழக்கிளறி; கிளையொடு - தன் இனத்தோடே கூட; கடுங்கண் கேழல் உழுத பூழி - தறுகண்மையையுடைய கேழல் உழுத புழுதிக்கண்ணே; நன்னாள் வரு பதம் நோக்கி - நல்ல நாள் வந்த செவ்வியைப் பார்த்து; குறவர் உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை - குறவர் அந்நிலம் உழாதே அதுவே யுழவாக வித்திய பரிய தோகையையுடைய சிறிய தினை; முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார் - முற்பட விளைந்த புதுவருவாயாகிய கதிரை நல்ல நாளின்கண்ணே புதிதுண்ண வேண்டி; மரையான் கறந்த நுரை கொள் தீம் பால் - மரையாவைக் கறந்த நுரை கொண்ட இனிய பாலை; மான்தடி புழுக்கிய புலவு நாறு குழிசி - மான் தடி புழுக்கப்பட்ட புலால் நாறும் பானையினது; வான் கேழ் இரும்புடை கழாஅது ஏற்றி - நிணந்தோய்ந்த வெளிய நிறத்தினையுடைய பெரிய புறத்தைக் கழுவாதே உலை நீராக வார்த்து ஏற்றி; சாந்த விறகின் உவித்த புன்கம் - சந்தன விறகான் உவிக்கப்பட்ட சோற்றை; கூதளம் கவினியகுளவி முன்றில் - கூதாளி கவின் பெற்ற மலைமல்லிகை நாறும் முற்றத்து; செழுங் கோள் வாழை அகல் இலை பகுக்கும் - வளவிய குலையையுடைய வாழையினது அகன்ற இலைக்கண்ணே பலருடனே பகுத்துண்ணும்; ஊராக் குதிரைக் கிழவ - ஊரப்படாத குதிரை யென்னும் மலைக்குத் தலைவ; கூர் வேல் - கூரிய வேலையும்; நறை நார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி - நறைக்கொடியின் நாரால் தொடுக்கப்பட்ட வேங்கைப் பூமாலையினையும்; வடி நவில்அம்பின் -வடித்தல் பயின்ற அம்பினையுமுடைய; வில்லோரபெரும - வில்லாட்களுக்குத் தலைவ; கைவள் ஈகைக் கடுமான் கொற்ற - கையான் வழங்கும் வள்ளிய கொடையினையும் கடியகுதிரையையுமுடைய கொற்ற; வையக வரைப்பில் தமிழகம் கேட்ப - உலகத் தெல்லையுள் தமிழ்நாடு கேட்க; பொய்யாச் செந்நா நெளிய ஏத்தி - பொய்யாத செவ்விய நா வருந்தும்படி வாழ்த்தி; நாளும் பாடுப என்ப பரிசிலர் - நாடொறும் பாடுவரென்று சொல்லுவர் பரிசிலர்; ஈயா மன்னர் நாண - கொடாத வேந்தர் நாண; வீயாது பரந்த நின் வசையில் வான் புகழ் - கெடாது பரந்த நினது வசையில்லாத வாலிய புகழை எ-று.
கிழவ, பெரும, கொற்ற, பரிசிலர், நின் புகழை யேத்திப் பாடுபவென்ப; அதனால் யானும் நின்பாற் பரிசில் பெற்றுப் பாடு வேனாக வேண்டுமெனப் பரிசிற்றுறைக் கேற்கக் கூறியதாக்குக. ஊராக்குதிரை, மலைக்கு வெளிப்படை நறை, பச்சிலைக் கொடி,
விளக்கம்: பன்றி நிலத்தைக் கிளறுமிடத்துக் காந்தளினது வெண்மையான கிழங்கு வெளிப்பட்டுத் திகழ்தல்பற்றி, “கிழங்கு மிளிரக் கிண்டி”யென்றார். விதைத்தற்கும் விதைத்தவை முளைத்து விளைந்தபின் அவ்விளைவை யுண்டற்கும் நன்னாள் பார்ப்பது வழக்கமாதலின், “நன்னாள் வருபதம் நோக்கி” யென்றும், “யாணர்நாள் புதி துண்மார்” என்றும் கூறினார். விருந்தூட்டி யுண்ணும் சிறப்புத் தோன்ற “அகலிலையுண்ணு” மென்னாது “பகுக்கும்” என்றார். உவித்தல், சமைத்தல். நறைக் கொடியிலிருந்து நாரெடுத்துக் கண்ணி தொடுத்தலை, “நறைநார் வேங்கைக் கண்ணியன்”(அகம்.282) எனச் சான்றோர் கூறுதலாலறிக. “அதனால் யானும் நின்பாற் பரிசில் பெற்றுப் பாடுவேனாகவேண்டு”மென்பது குறிப்பெச்சம். |