174. மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன்

     இத்   திருக்கண்ணன்    மலையமான்    திருமுடிக்காரியின்
வழிவந்தோனாவன்.    இவனைக்    காரியின் மக்களுள் ஒருவனாகவும்
கருதுகின்றனர். சோழவேந்தர்கட்குத் துணைபுரிந்து அதனால் ஏனாதி
யென்னும் மாராயம் பெற்றதுபற்றி, இவனைச் சான்றோர் “சோழிய வேனாதி
திருக்கண்ணன்” என்று  குறிக்கின்றனர். மலையமான் திருமுடிக்காரி
இறந்தபின் இவனே அவனது நாட்டுக்கரசனாகிச் சிறந்தான். இவனுடைய
முன்னோர்கள்,ஒருகால் சோழநாட்டு வேந்தன் ஒருவன் தன் பகைவரொடு
பொருது வெல்லும் வலியழிந்து அஞ்சி யோடி மலையமான்களுக்குரிய
முள்ளூரின் கண் ஒளித்திருந்தானாக, சோழநாடு ஞாயிற்றை யிழந்த
உலகம்போல அரசனை யிழந்து வருந்துவதாயிற்று. அதனை யறிந்த
மலையமான் முள்ளூர்க்குச் சென்று சோழனைக் கொணர்ந்து சோழ
நாட்டு வேந்தனாக்கி அவனது வெண் குடையும் அரசும் நிலைபெறச்
செய்தனன்.   இத்தகைய   சீரியோர் வழிவந்தவனாகலின்,
திருமுடிக்காரியிறந்ததனால் பொலிவிழந்து வருந்திய குடிகட்கு இவன்
வேந்தனாகி நலம் புரிந்தான். இவ்வாறு வேந்தாகியபோது இவனை
மாறோக்கத்து நப்பசலையார் கண்டு இப் பாட்டைப் பாடி இதன்கண்,
“காவிரி நாடு அரசின்றி அல்லலுற்ற காலத்து முள்ளூரில் இருந்த
சோழ வேந்தனைக் கொணர்ந்து சோழ நாட்டவர்க்கு வேந்தனாகிய
உரவோர் வழி வந்தோனே, நின் முன்னோனாகிய திருமுடிக்காரி
உயர்ந்தோருலகம் பெயர்ந்தானாக, நாடு மழையின்மையால் கோடையில்
உயிர்கள் எய்தும் வருத்தம் போல  மிக்க வருத்தத்தை எய்திற்று.கோடை
வெப்பத்தைப் பெருமழை  பெய்து  போக்கிக் குளிர்ச்சியைச்
செய்வதுபோல, நீ தோன்றி நாட்டவர்க்கு இன்பத்தைச் செய்தாய்;ஆதலால்,
நின்னாட்டவர்க்குக் குறையொன்றும் இல்லையாம்”என்று கூறியுள்ளார்.

 அணங்குடை யவுணர் கணங்கொண் 
                         டொளித்தெனச்
சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணா
திருள்கண் கெடுத்த பருதி ஞாலத்
திடும்பைகொள் பருவர றீரக் கடுந்திறல்
5 அஞ்சன வுருவன் றந்து நிறுத்தாங்
 கரசிழந் திருந்த வல்லற் காலை
முரசெழுந் திரங்கு முற்றமொடு கரைபொரு
திரங்குபுன் னெரிதரு மிகுபெருங் காவிரி
மல்ல னன்னாட் டல்ல றீரப்
10பொய்யா நாவிற் கபிலன் பாடிய
 மையணி நெடுவரை யாங்க ணொய்யெனச்
செருப்புகன் மறவர் செல்புறங் கண்ட
எள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசை
அருவழி யிருந்த பெருவிறல் வளவன்
15மதிமருள் வெண்குடை காட்டி யக்குடை
 புதமையி னிறுத்த புகழ்மேம் படுந
விடர்ப்புலி பொறித்த கோட்டைச் சுடர்ப்பூட்
சுரும்பார் கண்ணிப் பெரும்பெயர் நும்முன்
ஈண்டுச்செய் நல்வினை யாண்டுச்சென் றுணீஇயர்
20உயர்ந்தோ ருலகத்துப் பெயர்ந்தன னாகலின்
 ஆறுகொன் மருங்கின் மாதிரந் துழவும்
கவலை நெஞ்சத் தவலந் தீர
நீதோன் றினையே நிரைத்தா ரண்ணல்
கல்கண் பொடியக் கானம் வெம்ப
25மல்குநீர் வரைப்பிற் கயம்பல வுணங்கக்
 கோடை நீடிய பைதறு காலை
இருநில நெளிய வீண்டி
உருமுரறு கருவிய மழைபொழிந் தாங்கே.
(174)

     திணை: வாகை. துறை: அரசவாகை. மலையமான் சோழிய
வேனாதி * திருக்கண்ணனை மாறோக்கத்து நப்பசலையார்பாடியது.

     உரை: அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித் தென -
பிறரை வருத்தும் அச்சத்தினையுடைய அசுரர் திரள் கொண்டுபோய்
மறைத்தார்களாக; சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது -
சேய்மைக்கண்ணே விளங்காநின்ற தலைமையினையுடைய ஞாயிற்றைக்
காணாமையால்; இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து - இருளானது
உலகத்தாரது கண்ணை மறைத்த வட்டமாகிய உலகத்தினது; இடும்பை
கொள் பருவரல் தீர - நோய் கொண்ட துன்பம் நீங்கும் பரிசு; கடுந்
திறல் அஞ்சன உருவன் - மிக்க வலியை யுடைய அஞ்சனம்போலும்
நிறத்தையுடைய திருமேனியையுடைய கண்ணன்; தந்து நிறுத் தாங்கு -
அந்த ஞாயிற்றைக் கொண்டுவந்து இவ் வுலகத்தின்கண் அந்த காரம்
நீங்கும் பரிசு ஆகாயத்தின்கண்ணே நிறுத்தினாற்போல; அரசிழந்
திருந்த அல்லற்காலை - பகை வேந்தரோடு பொருது உடைந்து
போதலால் தம் வேந்தனையிழந்துழலும் இன்னாமையையுடைய
பொழுதின்கண்; முரசு எழுந் திரங்கும் முற்றமொடு - முரசு கிளர்ந்து
முழங்கும் செண்டு வெளியையுடைய கோயிலுடனே; கரையைப் பொருது
இரங்கு புனல் நெரி தரு மிகு பெருங் காவிரி - கரையைப் பொருது
முழங்கும் நீராரே யுடைந்து ஆழ்ந்தோடுகின்ற மிக்க பெரிய
காவிரியையுடைய; மல்லல் நன்னாட்டு அல்லல் தீர - வளவிய நல்ல
நாட்டினது துயரம் கெட; பொய்யா நாவின் கபிலன் பாடிய -
பொய்யாத நாவினையுடைய கபிலனாற் பாடப்பட்ட; மை யணி
நெடுவரை ஆங்கண் - முகி லணிந்த பெரிய மலையிடத்து; ஒய்யென -
விரைய; செருப்புகல் மறவர் - செல்புறங் கண்ட - போரை விரும்பும்
மறவர் ஓடு புறங் கண்ட; எள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசை -
இகழ்ச்சியற்ற தலைமையினை யுடைய முள்ளூரின் மலையுச்சியின்கண்;
அரு வழி இருந்த பெருவிறல் வளவன் - பிறரால் காண்டற்கரிய
இடத்தின் கண் இருந்த பெரிய வென்றியையுடைய சோழனது; மதி
மருள் வெண்குடை காட்டி - திங்கள் போலும் வெண்குடையைத்
தோற்றுவித்து; அக் குடை புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந -
அக்குடையைப் புதுமையுண்டாக நிலைபெறுவித்த புகழ் மேம்படுந;
விடர்ப்புலி    பொறித்த  கோட்டை - வரை  முழைஞ்சில் வாழும்  
புலியை யெழுதப்பட்ட   இலாஞ்சனையுடைய கோட்டையையும்;
சுடர்ப் பூண் - விளங்குதலையுடைய அணிகலத்தினையும்; சுரும்
பார் கண்ணி பெரும் பெயர்   நும்   முன் - வண்டார்க்கப்பட்ட  
கண்ணியையும்  பெரிய புகழினையுமுடைய  நும்முன்னாகிய  தந்தை;
ஈண்டுச் செய் நல்வினை ஆண்டு  உயர்ந்தோர் உலகத்துச் சென்று
உணீஇயர் - இவ்வுலகத்துச் செய்யப்பட்ட நல்ல அறத்தின் பயனை  
ஆண்டாகிய தெய்வ லோகத்துப்போய்    நுகரவேண்டி;  
பெயர்ந்தனன் ஆகலின் - போனானாதலின்; ஆறு கொல் மருங்கின்
மாதிரம்  துழவும் - நல்ல நெறியைக் கொன்ற  பக்கத்தினையுடைய
திசை யெங்கும் சூழ் வரும்; கவலை    நெஞ்சத்து    அவலம்  தீர
- கவலையுற்ற  மனத்தின்கண் வருத்தம் கெட; நீ தோன்றினை - நீ
வந்து தோன்றினாய்; நிரைத்தார்அண்ணல் - இணைந்த
மாலையையுடைய தலைவ; கல் கண் பொடிய -மலையிடம்   பொடிய;
கானம்   வெம்ப - காடு தீ மிக; மல்கு நீர் வரைப்பில்  கயம்  
பலஉணங்க - மிக்க    நீரெல்லையையுடைய நீர்நிலைகள்;   பலவும்
முளிய; கோடை  நீடிய  பைதறு  காலை - இவ்வாறு  கோடை
நீடப்பட்ட பசுமையற்ற காலத்து; இரு நிலம் நெளிய- பெரிய நிலங்
குழியும் பரிசு; ஈண்டி - திரண்டு; உரும் உரறு கருவிய மழை
பொழிந் தாங்கு - உருமேறு முழங்கும் மின் முதலாயின
தொகுதியையுடைய மழைசொரிந்தாற் போல எ-று.

     முற்ற மென்றது, அதனையுடைய கோயிலை. வெளி முற்றமொடு
வெண்குடை காட்டி யென இயைப்பினு மமையும். கோட்டை வெளியாகிய
சுடர்ப்பூ ணென்றுமாம். ஞாயிற்றை அஞ்சன வுருவன் தந்து நிறுத்தாங்கு
முற்றமொடு நாட்டு அல்லல் தீர, வளவன் வெண்குடை காட்டி அக்குடை
நிறுத்த புகழ் மேம்படுந, நிரைத்தார் அண்ணல், நும்முன் பெயர்ந்தன
னாகலின், நெஞ்சத்து அவலம் தீர, பைதறு காலை மழை பொழிந் தாங்கு நீ
தோன்றினை; ஆதலால், இவ் வுலகத்திற்குக் குறையென்னை எனக் கூட்டி
வினை முடிவு செய்க.

     அவுணர் கணங்கொண் டொளித்தென ஞாயிறு காணாத பருவரல் தீர
அஞ்சன வுருவன் தந்து நிறுத்தாங் கென்பது, தேவர்களும் அசுரர்களும்
பொருவழிப் பகலும் இராப்போல இயங்கித் தாம் போர் செய்தற்பொருட்டு
அசுரர் ஞாயிற்றைக் கரந்தார்கள்; ஞாலம் அதனால் உள்ள பருவரால் தீரத்
திருமால் அதைக் கொண்டு வந்து விட்டதொரு கதை.

     விடர்ப்புலி பொறித்த கோட்டை யென்றதனால், சோழனொடு
தொடர்புபட்டு அவனுக்குத் துப்பாதல் தோன்றி நின்றது. ஆறு கொள்
மருங்கின் என்று பாடமோதுவாரு முளர்.

     விளக்கம்: சோழனுக்கு ஞாயிறும், சோழனில்லாத காவிரி நாட்டிற்கு
இருள் சூழ்ந்த வுலகும், சோழனைக் கொணர்ந்த மலையமானுக்குத் திருமாலும்
உவமை. சோழன் இல்லாதபோது அவனது தலைநகரும் வளஞ்சிறந்த நாடும்
அல்லலுற்ற செய்தியை, “முரசெழுந் திரங்கு முற்றமொடு”என்றும், “புனல்
நெரிதரு மிகுபெருங் காவிரி மல்லல் நன்னா”டென்றும் குறித்தார்.
மலையமானுடைய மள்ளூர் மலையைக் கபிலர் “பயன்கெழு முள்ளூர்
மீமிசை”(புறம்.123) என்று பாடியுள்ளார். முள்ளூர்மலையை அவர் சிறப்புற
வெடுத்துப் பாடிய பாட்டுக் கிடைத்திலது. இம் மூள்ளூர் மிக்க காவலும்
பகைவர்க்குக் கொள்ளற் கருமையும் உடைய தென்றற்கு, “செருப்புகல்
மறவர் செல்புறங் கண்ட, எள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசை”யென்றார்.
சோழன் ஒளித்திருந்த இடத்தை “அருவழி”யென்று குறித்துள்ளார்.
வளஞ்சிறந்த நாடு முற்றும் தான் அடைதற்குரிய வகையில் வந்திருப்பவும்,
அதனை நினையாது சோழற்கே யுரித்தாக்கி அவனையே அரசனாக்கிச்
சிறப்பித்தமையின், “புகழ் மேம்படுந”என்றார். சோழர்க்குரிய
துணைவனாதலின், திருமுடிக்காரி தன் கோட்டையில் புலிப்பொறி
வைத்திருந்தானாகலின், “விடர்ப் புலி பொறித்த கோட்டை”யென்றார்.
இவ்வுலகத்தே செய்யப்படும் நல்வினைக்குரிய இன்பம் மறுமையில்
மேலுலகத்துத் தோன்றி நுகரப் படும் என்பதுபற்றி, “ஈண்டுச்செய் நல்வினை
ஆண்டுச்சென்று றுணீஇயர், உயர்ந்தோ ருலகத்துப் பெயர்ந்தனன்”என்றார்.
காரி இறந்தபின் நாட்டுக்குண்டாகிய நிலை “கோடை நீடிய பைதறு காலை”
யாகவும்,     திருக்கண்ணன் தோன்றியது  மழைபோல்வதாகவும், அவன்
தலையளி மழை நீராகவும் குறிக்கின்றார். முற்றமென்றது, ஆகுபெயரால்
அரசன் கோயிற்காகித் தலைநகரைக் குறித்துநின்றது.   பண்டேபோல் தலை
நகரையும்    வெண்குடையையும்    காட்டிப்    புதுமையின்    நிறுத்த
வெனவுரைப்பினும் அமையும் என்றற்கு, “வெளிமுற்றமொடு வெண்குடை
காட்டி யென இயைப்பினு மமையு”மென்றார். பெரும்பெய ரென்ற விடத்துப்
பெயர் புகழ் குறிப்பது.


* திருக்கண்ணனுக்கு மாறாகத் திருக்கிள்ளி யென்று பாடங்கூறுவதும் உண்டு. அப் பாடல் பொருந்துவதன்று.