193. ஓரே ருழவர்

    ஓரே ருழவரது இயற்பெயர் தெரிந்திலது. தேர்கொண்டு சென்ற
வினையை  முடித்த தலைமகனொருவன், வினைமுடிவில்  விளையும்
இன்பத்தினும் மிக்க இன்பந்தரவல்ல தன் காதலியை நினைந்து மீளலுற்றான்.
தன்னைப்  பிரிந்து வருந்தியுறையும் காதலியின் ஆற்றாமையையும் விரைந்து
சென்று  அவனைக்  காண்டற்குப் பெருவிழைவு  கொண்டிருக்கும் தன்
வேட்கை  யுள்ளத்தையும்  மனக்  கண்டு ஆற்றானாய்த் தன் பாகனை
நோக்கிக் கூறுங் கருத்தால்  இவர் ஒரு  பாட்டுப் பாடியுள்ளார். தன்
காதலியிருக்கும்   ஊர்    நெடுந்    தொலைவி    லிருப்பதென்பதை,
“ஆடமைபுரையும்  வனப்பின்  பணைத்தோள், பேரமர்க் கண்ணி இருந்த
ஊர்,நெடுஞ்சே ணாரிடை யதுவே”என்றும், அந் நெடுஞ்சேண் ஆரிடையை
விரையக் கடந்து சென்று பணைத்தேழளும் அமர்க்கண்ணுமுடைய காதலியை
யடைதற்குத் துள்ளித் துடிக்கும் நெஞ்சின் நிலையை, “நெஞ்சே! ஈரம் பட்ட
செவ்விப் பைம்புனத்து, ஓரே ருழவன் போலப், பெருவிதுப்புற் றன்றால்,
நோகோயானே”(குறுந். 131) என்றும் பாடினார். இதன்கண் வினைமுடித்து
மீளும் காதற் றலைமகன் தன் காதலியைக் கூடற்கு விரைந்து துள்ளித்
துடிக்கும் நெஞ்சின் இயல்பு சொல்லப்படுகிறது. ஈரம் பட்ட செவ்வி
வாய்ப்பக் கண்ட உழவன் அச்செவ்வி நீங்குதற்குள் உழுது வித்தற்கு
விரைகின்றான்; அவன்பால் உள்ளது ஓ ரேரே; அதனால் அவன் நெஞ்சு
துடிக்கிறது. அத்துடிப்பினைத் தலைமகன் நெஞ்சத் துடிப்புக்குவமை கூறிய
சிறப்பால் இவரைச் சான்றோர் ஓரே ருழவரென்றே அழைப்பாராயினர்.

     இச் சான்றோர், இல்வாழ்க்கை இடும்பைக்கே கொள்கலமாதலை
நன்குணர்ந்தார்;  வாழ்விலும்  இன்பப்  பகுதியினும்  துன்பப் பகுதியே
மிக்கிருப்பதும்  கண்டார்; இன்பமும் துன்பமும் நண்பகலும் இரவும் போல
மாறிமாறி  வேறுவேறியல்பினவாய்  வந்த  வண்ணமாய்  இருப்பதும்
புலனாகாமல் இல்லை. மனைவி  மக்களும் ஒக்கலும் பிறரும் தம்மை
இன்றியமையாராதலையும்  அறிந்தார்.  துன்பம் வந்துசுடச்சுடத் தாக்குங்
காலத்தில், அவரது உள்ளம் துறவு பூண்டு தாபத நெறியிற் சென்று விடலாமா
வென  எண்ணத் தொடங்கிற்று. சென்றொழிந்தால் தம்மைச் சார்ந்திருக்கும்
பலர்  வருந்த  நேருமென்ற  கவலை  ஒருபால்  வருத்திற்று. ஒக்கலும்
மக்களுமாய் வாழும் வாழ்வின் இன்பம் புலனாயிற்று. அவ் வின்ப வாழ்வும்
நன்னெறியே யென்பது நினைவிற்கு வந்தது. ஒக்கல் வாழ்க்கை
யில்லார்க்கே துறவும் தாபத வொழுக்கும் தகும்; அதனையுடையார்
அந்நெறியில்  ஓடிச் சென்று  உய்தல் என்பது  கூடாது; அஃது  
அவர்கள்  காலைக் கட்டிச் செல்லவொட்டாமல் தடுக்கும் என்ற
கருத்துப்பட இப்பாட்டைப் பாடியுள்ளார்.

 அதளெறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவ னாட்டும் புல்வாய் போல
ஓடி யுய்தலுங் கூடுமன்
ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே.
 (193)

     திணையும் துறையு மவை. ஓரே ருழவர் பாட்டு.

     உரை: அதள் எறிந் தன்ன - தோலைப் புடைத்து வைத்தாற்
போன்ற; நெடு வெண் களரின் - நெடிய வெளிய களரின் கண்;
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல - ஒருவன் அலைக்கும் புலவாய்
ஓடிப் பிழைக்குமாறு போல; ஓடி உய்தலும் கூடும் மன் - யானும்
நன்னெறிக் கண்ணே   யொழுகிப்   பிழைக்கவும் கூடும்; ஒக்கல்
வாழ்க்கை - சுற்றத்தோடு கூடி வாழும் இல்வாழ்க்கை; கால் தட்கும்
-அதன்கட் செல்லவொட்டாது காலைத் தளையா நிற்கும் ஆதலான்
உய்தல் கூடாது எ-று.

     மன், கழிவின்கண் வந்தது. மா: அசைநிலை.

     விளக்கம்: தோலைப் புடைத்துவைத்தலாவது, தோலையுரித்து அதனை
மேல்  கீழாகத்  திருப்பி வைத்தல்.  ஆட்டுதல், அலைத்தல். “முள்ளி
வேரளைக் கள்வனாட்டிப், பூக்குற் றெய்திய புனல்”(ஐங். 23) என்றாற்போல.
புல்வாய் - மான்.  களரில் நின்ற மான் தன்னைத் துரத்தும் ஒருவன், தான்
வழுக்கி வீழ்தற் கிடமுண்மையின், “ஓடியுய்தல் கூடும”என்றார். நன்னெறி
களர்போல்வ தென்றது, ஒக்கல் வாழ்க்கை செல்லவொட்டாது தடுக்கும்
சேறம்  வழுக்குப்  பகுதியுமாத்தளைத்தலின்  எவ்வகையாலும் தன்னை
இன்றியமையாத மனைவாழ்வே ஒருவனுக்கு ஒக்கல் வாழ்க்கை யாதலால்,
அதனை எடுத்தோதினார். இப் பாட்டின்கண் ஆசிரியர், தான் இல்வழி
தாங்குவாரின்றிக் கெட்டுத் தலைத்தலைச் சிதறியோடி, அறமும் பொருளும்
இன்பமும் பெறும்   வகைகெட்டு   அழியத்தக்க   மனைவாழ்க்கையில்
இருப்போனே உய்தல் கூடாத இயல்பினன் என்று குறிக்கப்படுகின்றான்.
ஆசிரியர் தொல்காப்பியர் “காமஞ் சான்ற கடைக்கோட் காலை, ஏமஞ்
சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்,
சிறந்தது  பயிற்றல்  இறந்ததன் பயனே”என்றதும் இக் கருத்தையே
வற்புறுத்துவதை அறிந்து கொள்க. இக் கருத்தையே திருத்தக்கதேவர்,
“காட்டகத் தொருமகன் துரக்கு மாக்கலை, ஓட்டுடைத் தாமெனின் உய்யும்
நங்களை, ஆட்டியி டாருயிர் அளைந்து கூற்றுவன், ஈட்டிய விளைமதுப்
போல உண்ணுமே”(சீவக.1919) என்றார்.