198. பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன் வடம வண்ணக்கன் பேரி சாத்தனா ரென்பார், அகப் பாட்டுக்கள் பல பாடிய சான்றோராவர். மதுரைக் குமரனார் போல, அத்துணைப் புலமை வீறு படைத்தவரல்ல ரெனினும், தம் கருத்தை நயமான முறையில் வெளிப்படுக்கும் திறலுடையவர். பொன்னோட்டம் பார்க்கும் தொழியினராதலை வடமவண்ணக்கன் என்ற சிறப்பு இனிது காட்டுகிற தெனினும், இவர் வழங்கும் குறப்புமொழிகள் நல்ல சான்று கூறி வற்புறுத்துகின்றன. இவர், இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய பாண்டியன் நன்மாறனைப் பன்முறை கண்டு பழகியவர். அவர் நெடுந் தொலைவிலுள்ள நாடுகட்குச் செல்லவேண்டி யிருந்தமையின், அவனைக் கண்டு விடை பெற்றுப் போக ஒருகால் வந்தார். அக்காலை, அவன் முதுமையுற்றிருந்தான். அவன் மக்கள் பலரும் நல்ல ஆடவராய்த் தமிழக மெங்கும் திரிந்து, வெற்றிச் செல்வமும் பொருட் செல்வமும் கொணர்ந்தனர். மக்கட் செல்வத்தாலும், அரசியற் செல்வத்தாலும்,நன்மாறன் செருக்குற்றுப் பேரி சாத்தனார்க்குப் பரிசில் தாராது நீட்டித்தான். ஆவூர் மூலங்கிழாரையும் இவ்வாறே இகழ்ந்து, பின்பு அவர் வெகுண்டு பாடக்கேட்டுப் பரிசில் தந்த அந்த மனப் பண்பே இப்போதும் அவன் பால் இருந்தது. ஒரு சில மக்களைப் பெற்று, அவர் இளமைப்பருவ நீங்கா முன்பே அத்துணைச் செருக்குற்ற இவன், அம்மக்கள் மறங் குன்றா ஆடவராய் நாடு முற்றும் சென்று வென்றி நிலைநாட்டி வரும் இந்நாளில், அச்செருக்கு மிகத் தடித்திருப்பதில் வியப்பில்லை யன்றோ? இதனால் நம் வடமவண்ணக்கரான பேரிசாத்தனார் மனம் புழுங்கி இப்பாட்டைப் பாடி விடை பெறலானார். இதன்கண், வேந்தே! ஆலமர் கடவுள் போலும் நின் செல்வத்தைக் கண்டு பாராட்டி, நின் கற்புடைய மனைவி பயந்துள்ள மக்கள் பொலிக என வாழ்த்தி, நீ தரும் பரிசில்மே லெழுந்த வேட்கையால் கனவினும் நனவினும் அரற்றும் என் நெஞ்சம் இன்புற்று மகிழுமாறு இன்று கண்டேன்; இனி விடைபெற்றுக் கொள்கின்றேன்; நின் கண்ணி வாழ்க; தமிழக முழுதும் வென்று பெரும் பொரு ளீட்டிய நின்னைப் போலும் நின் மக்கள், பகைவர் வருந்தவென்று அவர் செல்வம் முற்றும் கொணர்ந்து தொகுத்த நின் முன்னோர் போலக் கண்ணோட்ட முடையராகுக. ஆண்டும் நாளும் மிக்குக் கடல் நீரினும், நீர் கொழிக்கும் மணலினும், நீரைப் பொழியும் மழைத் துளியினும் பெருக; நின் மக்கள் பெறும் மக்களைக் காணுந்தோறும் செல்வமும் புகழும் சிறந்து நீ நீடு வாழ்க; யான் சேய நாட்டிற்குச் செல்கின்றேன்; நின் அடி நிழற் கண் பழகிய யான் வானம்பாடி போல நின் புகழை நச்சி யிருப்பேன்; என்னை மறவா தொழிவாயாகஎன்று குறித்திருப்பது மிக்க உருக்கமானது. | | அருவி தாழ்ந்த பெருவரை போல ஆரமொடு பொலிந்த மார்பிற் றண்டாக் கடவுள் சான்ற கற்பிற் சேயிழை மடவோள் பயந்த மணிமரு ளவ்வாய்க் | | 5 | கிண்கிணிப் புதல்வர் பொலிகென் றேத்தித் | | | திண்டே ரண்ண னிற்பா ராட்டிக் காதல் பெருமையிற் கனவினு மரற்றுமென் காமர் நெஞ்ச மேமாந் துவப்ப ஆலமர் கடவு ளன்னநின் செல்வம் | | 10 | வேல்கெழு குருசில் கண்டே னாதலின் | | | விடுத்தனென் வாழ்கநின் கண்ணி தொடுத்த தண்டமிழ் வரைப்பகங் கொண்டி யாகப் பணித்துக்கூட் டுண்ணுந் தணிப்பருங் கடுந்திறல் நின்னோ ரன்னநின் புதல்வ ரென்றும் | | 15 | ஒன்னார் வாட வருங்கலந் தந்து நும் | | | பொன்னுடை நெடுநகர் நிறைய வைத்தநின் முன்னோர் போல்கிவர் பெருங்கண் ணோட்டம் யாண்டு நாளும் பெருகி யீண்டுதிரைப் பெருங்கட னீரினு மக்கடன் மணலினும் | | 20 | நீண்டுயர் வானத் துறையினு நன்றும் | | | இவர்பெறும் புதல்வர்க் காண்டொறு நீயும் புகன்ற செல்வமொடு புகழினிது விளங்கி | | | நீடு வாழிய நெடுந்தகை யானும் கேளில் சேஎய் நாட்டினெந் நாளும் | | 25 | துளிநசைப் புள்ளினின் னளிநசைக் கிரங்கிநின் | | | அடிநிழற்பழகிய வடியுறை கடுமான் மாற மறவா தீமே. (198) |
திணையுந் துறையு மவை. பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன் பரிசில் நீட்டித்தானை வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் பாடியது.
உரை: அருவி தாழ்ந்த பெரு வரை போல - அருவி தாழ்ந்த பெரிய மலை போல; ஆரமொடு பொலிந்த மார்பின் - ஆரத்தோடு பொலிந்த மார்பின்கண்; தண்டா வேட்கை தணியாத; கடவுள் சான்ற கற்பின் - தெய்வத்தன்மை யமைந்த கற்பினையும்; சேயிழை மடவோள் பயந்த - செய்ய ஆபரணத்தையுமுடைய உன்னுடைய மடவோள் பெறப்பட்ட; மணி மருள் அவ் வாய்க் கிண்கிணிப் புதல்வர் - பவழ மணிபோன்ற அழகிய வாயையும் கிண்கிணியையு முடைய புதல்வர்; பொலிக என்றேத்தி - பொலிக வென்று வாழ்த்தி; திண் தேர் அண்ணல் - திண்ணிய தேரையுடைய வேந்தே; நிற் பாராட்டி - நின்னைப் புகழ்ந்து; காதல் பெருமையின் கனவிலும் அரற்றும் - பரிசிலின் மேல் அன்பு பெரிதாகலின் கனவின்கண்ணும் நின் புகழையே கூறும்; என் காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப - எனது விருப்பத்தையுடைய நெஞ்சம் இன்புற்று மகிழ; ஆலமர் கடவுள் அன்ன நின் செல்வம் - ஆலிலையின்கண் மேவிய திருமால்போலும் நின்னுடைய செல்வத்தை யெல்லாம்; வேல் கெழு குருசில் - வேலையுடைய தலைவ; கண்டேனாதலின் - கண்டே னாதலால்; விடுத்த னென் - விடை கொண்டேன்; வாழ்க நின் கண்ணி - வாழ்க நினது கண்ணி; தொடுத்த தண் தமிழ் வரைப்பகம் - தொடர்புபட்ட குளிர்ந்த தமிழ்நாட் டெல்லை முழுதும்; கொண்டியாகப் பணித்துக் கூட்டுண்ணும் - கொள்ளையாகக்கொண்டு நின்பகைவரைத் தாழ்த்து அவர்கள் பொருள்களையும் வாங்கிக் கொண்டு உண்ணும்; தணிப் பருங் கடுந் திறல் நின்னோ ரன்ன நின் புதல்வர் - தணித்தற்கரிய மிக்க வலியையுடைய நின்னை யொக்கும் வலியையுடைய நின்னுடைய மைந்தர்; என்றும் ஒன்னார் வாட - எந்நாளும் பகைவர் தேய; அருங் கலம் தந்து - அவருடைய பெறுதற்கரிய அணிகலத்தைக் கொண்டுவந்து; நும் பொன்னுடை நெடு நகர் நிறைய வைத்த - நும்முடைய பொன்னுடைய நெடிய நகரின்கண் பொலிய வைத்த; நின் முன்னோர் போல்க இவர் பெருங் கண்ணோட்டம் - நின்னுடைய முன்னுள்ளோரைப் போல்க இவருடைய பெரிய கண்ணோட்டம்; யாண்டும் நாளும் பெருகி - யாண்டும் நாளும் மிக்கு; ஈண்டு திரைப்பெருங் கடல் நீரினும் - செறிந்த திரையையுடைய பெரிய கடனீரினும்; அக் கடல் மணலினும் - அக் கடல் கொழித்திடப்பட்ட மணலினும்; நீண்டு உயர் வானத்துறையினும் - நீண்டுயர்ந்த மழையின் துளியினும்; நன்றும் - பெரிதும்; இவர் பெறும் புதல்வர்க் காண்டொறும் - இவர் பெறும் பிள்ளைகளைக் காணுந்தோறும்; நீயும் புகன்ற செல்வமொடு புகழ் இனிது விளங்கி - நீயும் வாழிய நெடுங் காலம் வாழ்க; நெடுந்தகை - பெருந்தகாய்; யானும் கேளில் சேஎய் நாட்டின் - யானும் உறவில்லாத தூரிய நாட்டின்கண்ணே; எந்நாளும் - நாடோறும்; துளி நசைப் புள்ளின் - துளியை நச்சு தலையுடைய வானம்பாடி யென்னும் புட்போல; நின் அளி நசைக்கு இரங்கி - நின்னுடைய வண்மை நசையான் இரங்கி; நின் அடி நிழல் பழகிய அடியுறை - நினது அடிநிழற்கண் பழகிய அடியின் வாழ்வேன்; கடு மான் மாற - விரைந்த செலவையுடைய குதிரையையுடைய மாறனே; மறவா தீயே - நீ செய்த செயலை மறவா தொழிவாயாக எ-று.
புதல்வர் மார்பிற் பொலிகெனக் கூட்டினுமமையும். ஆலமர் கடவுளன்னநின்என்பதற்கு, ஆலின் கீழமர்ந்த முக்கட் செல்வனாகிய கடவுளை யொப்ப என்றும், நிலைபெற்றிருப்பே னென்றிருக்கின்ற நின்னென்றுரைப்பினு மமையும். நின் முன்னோர் போல்கிவர் பெருங் கண்ணோட்டமென்றது, அவரும் வழங்காது வைத்தலின் கண்ணோட்ட மிலர்; இவரும் அவரை யொக்கக் கண்ணோட்ட மிலராத வென்பதாயிற்று. முன்னோர் போல்கிவர்பெருங் கண்ணோட்ட மெனவும், வாழ்க நின் கண்ணியெனவும், ீடு வாழியரெனவும் நின்றவை குறிப்பு மொழி; அன்றி, என்னிடத்து நீ செய்த கொடுமையால் நினக்குத் தீங்கு வரும்; அது வாராதொழிகவென வாழ்த்தியதூஉமாம். மறவாதீமேஎன்றது, என் அளவில் நீ செய்த செய்தியை மறவா தொழி யென்பதாயிற்று. யாண்டும் நாளும் பெருதி யென்பதற்கு, நின்னாளே திங்களனையவாக; அத்திங்கள் யாண்டோ ரனையவாக; ஆண்டே ஊழி யனைய வரம்பினவாக என்பது கருத்தாகக் கொள்க.
விளக்கம்: அருவியை ஆரமாக உருவகஞ் செய்தல்போல, ஈண்டு, ஆரம் அருவியாகக் கூறப்பட்டது. தெய்வம்போலப் பெய்யென மழை பெய்யும் கற்பு மாண்புடைய ளென்றதற்குக் கடவுள் சான்ற கற்பின் சேயிழை மடவோள்என்றார்; கடவுட் கற்பின் மடவோள்(அகம்.314) எனப் பிறரும் கூறுவர். பவழமணிபோலும் சிவந்த வாய் என்றற்கு மணிமருள் அவ்வாய் என்றார்; சான்றோரும், மணிபுரை செவ்வாய்(அகம்.66) என்று சிறப்பித்தல் காண்க. நனவு முற்றும் பரிசிலையே நினைந்தும் பேசியும் இருத்தலின், கனவிலும் அரற்றும் என்காமர் நெஞ்சம்என்றார். ஆலமர் கடவுளென்றது, முக்கட் செல்வனையும் குறிக்குமாயினும், உரைகாரர் ஆலியையின்கண் மேவிய திருமாலைக் குறிப்பதாகக் கொண்டார். ஆரமொடு பொலிந்த மார்பும், அதன்பால் வேட்கை தணியாது கூடியிருக்கும் கடவுள் சான்ற கற்பிற் சேயிழை மடவோளும் மிக்க செல்வமும் விளங்கக் கண்டு இப் பேரிசாத்தனார் பாடுதல் பற்றி, தண்டமிழ் வரைப்பகத்து, வேந்தரைப் பணிந்து அவரது நன்கலத்தை நீ கொணர்ந்து தொகுத்ததுபோல நின் புதல் வரும் ஒன்னார் வாட அருங் கலம் கொணர்ந்து நின் நெடுநகர் வைத்துள்ளனர்; இவ்வகையில் நின்னை யொப்பாராயினும், நின்பால் இல்லாமையால், பெரிய கண்ணோட்டத்தில் நின் முன்னோர் போல்க என்றார். இனி, நின்பால் பெருங் கண்ணோட்டமில்லாமை, நின் முன்னோர்பாலும் இல்லாமையைக் காட்டுதலின், அவர்போல இவரும் இருப்பாராக வென்றா ரெனக் கொண்டு, நின் முன்னோர்......என்பதாயிற்று என உரைகாரர் குறிக்கின்றார். நீடு வாழ்கவென வாழ்த்துபவர் யாண்டும் நாளும் கடல் நீரினும் மணலினும் மழைத் துளியினும் பல சொல்லி வாழ்த்தியதன் கருத்து இதுவென்றற்கு, என்னிடத்து நீ செய்த கொடுமையால் நினக்குத் தீங்கு வரும்; அது வாராதொழிக வென வாழ்த்தியதூஉமாம் என்றார். என்னளவில் நீ செய்த செய்தியை மறவா தொழியென்றது, மறந்தால் நின்னைப் பாடிவரும் ஏனைச் சான்றோர்களையும் இவ்வாறு வருத்தி, அவர் நொந்து கூறும் வசைகளையேற்று வருந்துவாய் என்றவாறு. கேளாந் தன்மையுடைய நீ. புறக்கணித்தமையால் யான் கேளில் சேஎய் நாட்டுக்குச் செல்கின்றேன் என்றார். ஆங்கிருந்தேனாயினும், நின்னை நினையா தொழியேனென்பார், எந்நாளும் துளிநசைப் புள்ளின் நின் னளிநசைக் கிரங்கி நின் னடிநிழற் பழகிய அடியுறையென்றார். அடிக்கீழ் உறைவாரை அடியுறையென்பது வழக்கு; அடியார் என்பது போல. |