29. சோழன் நலங்கிள்ளி

     இப்   பாட்டின்கண்  உறையூர்  முதுகண்ணன்  சாத்தனார் சோழன்
நலங்கிள்ளியை நோக்கி, “வேந்தே, நின்  திருவோலக்கத்தில்  நின் புகழ்
பாடும் பாணர்  நிறைதல் வேண்டும்; பாணர்  இசைகேட்ட பின்பு  மகளிர்
கூட்டத்தின் இன்பத்தை நீ நுகர்தல் வேண்டும்; கொடியோரைத் தெறுதலும்,
நல்லோரையளித்தலும் தவிராது நிலதல் வேவுண்டும்; இவற்றோடமையாது
நீ சிற்றினம்  சேர்த  லாகாது; நீ  வழங்கும்  நாடு  பெற்றுச்  சிறக்கும்
படைத்தலைவர்   நின்பால்   வருநர்க்கு   உதவியாற்றும்   நண்புடைப்
பண்புடையராமாறு நின் செய்கை முறைப்பட வமைதல் வேண்டும். கூத்தாட்
டவைக் குழாம்போலக் கூடுதலும் கழிதலுமுடையது இவ்வுலகம்; இதன்கண்
நின் சுற்றத்தார் நினக்கு  நகைப்புறமாக,  நின்  செல்வம்  இசைப்புறமாக
விளங்குதல் வேண்டும்” என வற்புறுத்துகின்றார்.

  அழல்புரிந்த வடர்தாமரை
ஐதடர்ந்த நூற்பெய்து
புனைவினைப் பொலிந்த பொலனறுந் தெரியல்
பாறுமயி ரிருந்தலை பொலியச் சூடிப்
5. பாண்முற் றுகநின் னாண்மகி ழிருக்கை
  பாண்முற் றொழிந்த பின்றை மகளிர்
தோண்முற் றுகநின் சாந்துபுல ரகலம், ஆங்க
முனிவின் முற்றத் தினிதுமுர சியம்பக்
கொடியோர்த் தெறுதலுஞ் செவ்வியோர்க் களித்தலும்
10. ஒடியா முறையின் மடிவிலை யாகி
  நல்லத னலனுந் தீயதன் றீமையும்
இல்லை யென்போர்க் கினனா கிலியர்
நெல்விளை கழனிப் படுபுள் ளோப்புநர்
ஒழிமடல் விறகிற் கழிமீன் சுட்டு
15. வெங்கட் டொலைச்சியு மமையார் தெங்கின்
  இளநீ ருதிர்க்கும் வளமிகு நன்னாடு
பெற்றன ருவக்குநின் படைகொண் மாக்கள்
பற்றா மாக்களிற் பரிவுமுந் துறுத்துக்
கூவை துற்ற நாற்காற் பந்தர்ச்
20. சிறுமனை வாழ்க்கையி னொரீஇ வருநர்க்
  குதவி யாற்று நண்பிற் பண்புடை
ஊழிற் றாகநின் செய்கை விழவிற்
கோடியர் நீர்மை போல முறைமுறை
ஆடுநர் கழியுமிவ் வுலகத்துக் கூடிய
25. நகைப்புற னாகநின் சுற்றம்
இசைப்புற னாகநீ யோம்பிய பொருளே. (29)

     திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

     உரை: அழல் புரிந்த அடர் தாமரை - எரியா லாக்கப்பட்ட
தகடாகச் செய்த தாமரைப் பூவுடனே; ஐது அடர்ந்த நூல் பெய்து -
ஐதாகத் தட்டிக் கம்பியாகச் செய்த நூலின் கண்ணேயிட்டு; புனை
வினைப்  பொலிந்த  பொலன்  நறுந்  தெரியல் -  அலங்கரித்த
தொழிலாற் பொலிந்த பொன்னான் இயன்ற நறிய மாலையை; பாறு
மயிர் இருந் தலை பொலியச் சூடி - பாறிய மயிரையுடைய கரிய
தலை பொலிவு பெறச் சூடி; பாண்  முற்றுக  நின்  நாள்  மகிழ்
இருக்கை - பாண்  சுற்றம்  சூழ்வதாக   நினது  நாட்  காலத்து
மகிழ்ந்திருக்கும் ஓலக்கம்; பாண் முற்று ஒழிந்த பின்றை - பாண்
சுற்றம் சூழ லொழிந்த பின்னர்; மகளிர் தோள் முற்றுக நின் சாந்து
புலர் அகலம்- நினது உரிமை மகளிருடைய தோள் சூழ்வதாக நின்
சாந்து புலர்ந்த மார்பம்; முனிவில் முற்றத்து இனிது முரசு இயம்ப -
எப்போதும்  வெறுப்பில்லாத   அலங்காரத்தையுடைய   கோயில்
முற்றத்தின் கண்ணே  இனிதாக  முரசு  ஒலிப்ப;   கொடியோர்த்
தெறுதலும் செவ்வியோர்க்கு  அளித்தலும்  ஒடியா முறைமையின் -
தீயோரைத் தண்டஞ் செய்தலும்  நடுவு  நிலைமை யுடையோர்க்கு
அருள் பண்ணுதலுமாகிய இடையறாத முறைமையால்; மடிவிலை யாகி
- சோம்புதலையுடைய யல்லையாகி;  நல்லதன்  நலனும்  தீயதன்
தீமையும் இல்லை என்போர்க்கு -  நல்வினையினது   நன்மையும்
தீவினையினது  தீமையும்    இல்லையென்று    சொல்லுவோர்க்கு;
இனனாகிலியர் - இனமாகா தொழிவாயாக; நெல்  விளை  கழனிப்
படுபுள் ஒப்புநர் - நெல் விளைந்த வயலிடத்  துளதாகிய புள்ளை
யோட்டுவோர்; ஒழி மடல் விறகில்  கழி  மீன்  சுட்டு - வீழ்ந்த
பனங்கருக்காகின்ற விறகால் கழிக்கண் மீனைச் சுட்டு; வெங்கள்
தொலைச்சியும் அம்மையார் - அதனுடனே வெய்ய மதுவையுண்டு
தொலைத்தும்  அமையாராய்;  தெங்கின்  இளநீர்  உதிர்க்கும் -
தெங்கினது  இளநீரை  யுதிர்க்கும்; வளமிகு நன்னாடு பெற்றனர்
உவக்கும் - செல்வ மிக்க நல்ல நாட்டைப் பெற்று மகிழும்; நின்
படை  கொள்  மாக்கள்  - நின்னுடைய - படைக்கலம் பிடித்த
மாந்தர்; பற்றா  மாக்களின் - நின்னுடைய  பகைவரைப்  போல;
பரிவு  முந்துறுத்து  - இரக்கத்தை முன்னிட்டுக்கொண்டு; கூவை
துற்ற -கூவை இலையால் வேயப்பட்ட; நாற்கால் பந்தர் சிறு மனை
வாழ்க்கையின் ஒரீஇ - நான்கு காலையுடைய பந்தராகிய சிறிய
இல்லின்கண்     வாழும்      வாழ்க்கையினின்று        நீங்கி;
வருநர்க்கு உதவியாற்றும் - நின்பால்  வருவார்க்கு உதவி செய்யும்;
நண்பிற் பண்புடை  ஊழிற்றாக  நின் செய்கை - நட்போடு கூடிய
குணத்தையுடைய முறைமை யுடைத்தாக  நினது  தொழில்; விழவிற்
கோடியர் நீர்மை போல - விழவின்கண் ஆடும் கூத்தரது வேறுபட்ட
கோலம்  போல;  முறைமுறை  ஆடுநர்  கழியும்  இவ்வுலகத்து -
அடைவடைவே    தோன்றி   இயங்கி    இறந்து    போகின்ற
இவ்வுலகத்தின்கண்; கூடிய நகைப் புறனாக நின் சுற்றம்- பொருந்திய
மகிழ்ச்சி யிடத்ததாக நின்னுடைய கிளை; இசைப்புறனாக நீ ஓம்பிய
பொருள் - புகழிடத்ததாக நீ பாதுகாத்த பொருள் எ-று.


     நின் நாண் மகிழிருக்கை பாண் முற்றுக; அதன்பின் அகலம் தோள்
முற்றுக;நீ மடிவிலையாய் இனனாகா தொழிவாயாக; நின் பற்றா
மாக்களைப்போல முற்காலத்துச் சிறுமனை வாழும் வாழ்க்கையி னீங்கி
இப்பொழுது நின் நாடு பெற்றுவக்கும்  நின்  படைகொள்  மாக்கள்
வருநர்க்கு  உதவியாற்றும் நண்போடு கூடிய பண்புடைத்தாகிய முறைமையை
யுடைத்தாக நின் செய்கை;நகைப்புறனாக  நின்  சுற்றம்;  இசைப்புறனாக  நீ
ஓம்பிய  பொருளெனக் கூட்டுக.

     ஒரீஇ யென்பதனை யொருவ  வெனத்  திரிப்பினு  மமையும். நறுமை
பொன்னிற் கின்றெனினும் தெரியற்கு  அடையாய்  நின்றது;  நன்மையுமாம்.
ஆங்க:  அசை.   நசைப்புறனாக   வென்றுரைப்பாரு   முளர்.   இதனாற்
சொல்லியது படைகொண் மாக்களும்  முறை முதலாயின தப்பாமற் செய்து
இன்புற்றிருக்கும்படி சிறப்புச் செய்யவேண்டு மென்பதாயிற்று.

     விளக்கம்:இருந். தலை: இருமை, கருமைப் பண்பு குறித்து  நின்றது.
“இரும்பிடித்   தொழுதி”   (புறம்.44)   என்புழிப்  போல,   கட்கினிய
அலங்காரத்தால் தன்கண் வந்திருந்தாரை நீங்காவாறு பிணித்து இன்புறுத்தும்
சிறப்புடைய கோயில் முற்றத்தை,  “முனிவில் முற்றம்”  என்றார்   ஒடியா
முறைமை இடையறவு படாத முறைமை;   முக்குணங்களும்  கணந்தோறும்
மாறும் இயல்பினவாதலின்,அதனால் முறைமை மாறாமை தோன்ற, “ஒடியா
முறைமை” யென்றார். நெற்கதிர்களை  மேய்ந்துண்ணும்  கிளி  முதலிய
புட்கள், “படுபுள்” ளெனப்படுகின்றன.  வெங்கள்   ளென்புழி  வெம்மை
மயக்கஞ் செய்யும் களிப்பு. பெற்றனர்: முற்றெச்சம். தம்மைக் கண்டவழிப்
பகைமையால்  தெறுதலைச்  செய்யாது  அருள்  செய்யுமாறு   மெலிவு
புலப்படுத்தி நிற்கும்  பகைவர்போல  வென்பார், “பற்றா மாக்களிற் பரிவு
முந்துறுத்து” என்றார்.கோடியர் நீர்மை, கூத்தருடைய வேறுபட்ட கோலம்.
கூத்தரது கோலம் தோன்றி நின்றியங்கி மறைவது, உலகம் தோன்றிநின்று
மறைதற்கு உவமமாயிற்று. ஒரீஇ யென்பது  செய்தெனெச்சமாய் ஆற்றும்
என்பதனொடு முடியும். ஒருவ வெனத் திரிப்பின், மாந்தர் வாழ்க்கையின்
ஒருவ, நின் செய்கை ஊழிற்றாக என இயையும்; அவ்வழியும்  பொருள்
நலங்  குன்றாமையின்,  “அமையும்”  என்றார்.   பொன்   மாலைக்கு
மணமில்லையாகவும்,  நறுந்  தெரிய  லென்றதற்கு  அமைதி  கூறுவார்,
“தெரியற்கு அடையாய் நின்ற” தென்றார். நறுமை நன்றாதலின், நன்மை
யெனப்  பொருள்  கொண்டு  நல்லமாலை  யென்று  உரைப்பினுமாம்
என்றற்கு “நன்மையுமாம்” என்றார்.