36. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

     இப் பாட்டின்கண் ஆலத்தூர் கிழார், கிள்ளி வளவன் கருவூரை
முற்றியிருந்தானாக, அடைப்பட்டிருந்த, கருவூர் மன்னன், சோழனுடைய
வீரர் தன் நகர்ப்புறத்துக் காவிலுள்ள காவல் மரங்களை வெட்டுதலா
லுண்டாகும் ஓசை தன் செவிப்பட்டும் போர்க்கு வாராது அஞ்சி மடிந்து
கிடப்பது கண்டு, சோழனை நோக்கி, “வேந்தே, காக்கள் தோறுங் கடி மரம்
தடியும் ஓசை தானுறையும் அரண்மனைக்கண் இயம்பக் கேட்டும் ஆங்கு
இனிதிருந்த வேந்தனுடன் பொருவது தூய வீரர்க்கு நாணுத் தருவதாகும்;
ஆதலால், இது கேட்டு விடுவதோ அடுவதோ செய்க; அதனால் நினக்குப்
புகழுண்டாகா தென்பதை நீ நன்கு அறிகுவாய்” என்று கூறிப் போரை
விலக்குகின்றார்.

அடுநை யாயினும் விடுநை யாயினும்
நீயளந் தறிதிநின் புரைமை வார்கோல்
செறியரிச் சிலம்பிற் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடும்
5. தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக்
கருங்கைக் கொல்ல னரஞ்செ யவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலி னிலையழிந்து
வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும்
கடிமரந் தடியு மோசை தன்னூர்
10. நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப
ஆங்கினி திருந்த வேந்தனோ டீங்குநின்
சிலைத்தார் முரசங் கறங்க
மலைத்தனை யென்பது நாணுத்தக வுடைத்தே. (36)

     திணை: வஞ்சி. துறை: துணை வஞ்சி. அவன் கருவூர்
முற்றியிருந்தானை ஆலத்தூர் கிழார் பாடியது.

     உரை: அடுநை யாயினும் - கொல்வா யாயினும்; விடுநை
யாயினும் -கொல்லா  தொழிவாயாயினும்;  நின்  புரைமை -
அவற்றால் நினக்கு வரும் உயர்ச்சி யாம் சொல்ல வேண்டா; நீ
அளந்தறிதி - நீயே எண்ணி யறிவை; செறி யரிச் சிலம்பின் -
செறிந்த உள்ளிடு பருக்கையையுடைய சிலம்பினையும்; வார் கோல்
குறுந் தொடி மகளிர்- நீண்ட கோற்றொழிலாற் செய்யப்பட்ட குறிய
வளையினைமுடைய மகளிர்; பொலஞ் செய் கழங்கின் தெற்றி யாடும்
- பொன்னாற் செய்யப்பட்ட கழலான் வேதிகை போல வுயர்ந்த
எக்கர்க்கண்ணே யிருந்து விளையாடும் அணுமையையுடைய;
தண்ணான் பொருநை வெண்மணல் சிதைய - குளிர்ந்த ஆன்
பொருந்தத்தினது வெளிய மணல் சிதற; கருங்கைக் கொல்லன்
அரஞ்செய் அவ்வாய் நெடுங்கைநவியம் பாய்தலின் - வலிய
கையையுடைய கொல்லன் அரத்தாற் கூர்மை செய்யப்பட்ட அழகிய
வாயினை யுடைத்தாகிய நெடிய கையையுடைய கோடாலி
வெட்டுதலான்; நிலை யழிந்து வீ கமழ் நெடுஞ் சினை புலம்ப -
நின்ற நிலை கலங்கி வீழும் பூ நாறுகின்ற நெடிய கொம்புகள்
தனிப்ப; காவிதொறும் கடி மரம் தடியும் ஓசை - காக்கடோறும்
காவன் மரங்களை வெட்டும் ஓசை; தன்னூர் நெடு மதில் வரைப்பின்
கடி மனை இயம்ப - தன்னுடைய ஊரின்கண்ணே நெடிய மதி
லெல்லையில் தனது காவலையுடைய கோவிற்கண்ணே
சென்றொலிப்ப; ஆங்கு இனிதிருந்த வேந்தனோடு - அவ்விடத்து
மானமின்றி இனிதாக இருந்த வேந்தனுடன்; ஈங்கு - இவ்விடத்து;
நின்சிலைத்தார் முரசம் கறங்க - நினது இந்திர விற்போலும்
மாலையையுடைய முரசொலிப்ப; மலைத் தனை என்பது நாணுத்தக
வுடைத்து - பொருதா யென்பது கேட்டார்க்கு நாணும் தகுதியை
யுடைத்து, ஆதலால அப்போரை ஒழியத்தகும் எ-று.

     வார்கோற் குறுந்தொடி யென மாறி யுரைக்கப்பட்டது. இனி திருந்த
வென்றது குறிப்பு மொழி.

     கடி மரந் தடியு மோசை தன் மனை இயம்ப இனிதிருந்த வேந்தனொடு
மலைத்தனை யென்பது நாணுத்தகவுடைத்து; அதனால் அடுநையாயினும்
விடுநையாயினும் நின் புரைமை நீ யளந் தறிதி யென மாறிக் கூட்டி வினை
முடிவு செய்க.

     மகளிர் தெற்றி யாடும் பொருநை யென்ற கருத்து; இங்ஙனம் இனி
மகளிர் கழங்காடும் அணுமையதாயினும் புறப்பட்டுப் போர் செய்யாத அவன்
வலியின்மை தோற்றி நின்றது. தெற்றி யாடும் தன்னூ ரென இயைப்பினும்
அமையும்.

     மேற்சென்றோனைச் சந்து செய்து மீட்டலின் இது துணை
வஞ்சியாயிற்று.

     விளக்கம்: தெற்றிபோ லுயர்ந்த எக்கர் மணலைத் தெற்றி யென்றது
ஆகுபெயர். “புரை யுயர் பாகும்” (தொல்.உரி:4) என்பதனால், புரைமை
உயர்ச்சி குறித்து நிற்பதாயிற்று. கருங்கை யென்ற விடத்துக் கருமை வன்மை
குறித்து நின்றது. பகைவர் தன்னூர்க் கடிமிளைக்குட் புகுந்து கடி பரம் தடியு
மோசை தன் கோயிலிற் கேட்கவும், போர்க்கெழாது கோயிற்கண்ணே
இனிதிருப்ப தென்பது மானமுடைய வேந்தரெவர்க்கும் இயலாத
செயலாயிருப்ப, இனிதிருந்தானென்றமையின் “மான மின்றி யினி திருந்த”
என வுரை கூறினார். இனிதிருந்த என்புழி இனிமை இன்னாமை யுணர்த்தி
நிற்றலின், இதனைக் குறிப்புமொழி யென்றார். இள மகளிர் தெற்றி யாடும்
அத்துணையண்மையில் போர் வந்த வழியும், அதனை ஏறட்டுப் பொருதற்கு
நினையாத அவ் வேந்தனது இழிநிலை இதனால் விளக்கப்படுகிறது. கடி
மரங்களைப் பகைவர் தடியக் காணுமிடத்தே அச்சமின்றிச் சென்று
தெற்றியாடும் இள மகளிர்க்குள்ள மனவலியும் இவ் வேந்தன்பால் இல்லை
யென்றற்கு இளமகளிர் செயலை யெடுத்தோதினார். ஆன்பொருந்தம்
இப்போது அமராவதி யென வழங்குகிறது.