52. பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி ஆசிரியர் மருதன் இளநாகனார், பாண்டி வேந்தர்பால் பேரன்பும் பெருமதிப்பும் உடையர். பாண்டி நாட்டு மக்கள் அயரும் விழாக்களையும் பாண்டி வேந்தருடைய போர்த் திறங்களையும் பலபடியாகப் புகழ்ந்து பாடும் பண்பினர். பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை இறைவனுடைய பிறைநுதல் விளங்கு மொருகண் போல வேந்து மேம்பட்ட பூந்தார் மாற என்று பாராட்டுகின்றார். நண்ணார் அரண்தலை மதிலராகவும் முரசு கொண்டு, ஓம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன் பெரும்பெயர்க் கூடல் என்று கூடல் நகரையும், நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும், தேனிமிர் காவிற் புணர்ந்திருந் தாடுமார், ஆனா விருப்போ டணியயர்ப காமற்கு வேனில் விருந்தெதிர் கொண்டு என அந்நகரவர் காமவேள் விழா வயர்தலும் பிறவும் கூறுகின்றார். இவரால் சிறுகுடி வாணனும், வேளிரும், நாஞ்சில் வள்ளுவனும் பிறரும் பாராட்டப்படுகின்றனர். அந்துவனார் முருகவேட்குரிய பரங்குன்றத்தைப் புகழ்ந்து பாடிய சிறப்பை இவர் வியந்து கூறுகின்றார். இவர் பாடியுள்ள பாட்டுக்கள் மிக்க இலக்கிய நலம் சிறந்தனவாகும். பாண்டி நாட்டுக்கு வடக்கிலுள்ள வேந்தர் இந்த மாறன் வழுதியின் போராண்மை கேட்டு அஞ்சும் திறத்தை இப்பாட்டின்கண் நயமுறக் கூறுகின்றார். இவர் பாடிய பாட்டுக்களை நோக்கின், இவர் பாண்டி நாட்டுத் திருச்செந்தூர்க் கருகில் பிறந்தவராகலாம் என்று நினைத்தற் கிடமுண்டாகிறது. மருதன் இளநாகனார் மதுரை மருதனிளநாகனார் என்றும் கூறப்படுவர். மருதம் பாடுதலில் வல்லவர். இவர் தந்தை பெயர் மருதன் என்பது. இரு திறனும் பொருந்த இவர் மருதனிளநாகனா ரெனப்படுகின்றார். இளநாகன் என்பது இவரது இயற்பெயர்.இப் பாட்டின்கண், பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி தன் நாட்டின் பரப்பினை மிகுதிப்படுத்தும் கருத்தினனாய்ப் போர்க்கெழுதலை யறிந்து, வேந்தே, ஊன் வேட்கை யுள்ளத்தைச் செலுத்த, அதுகுறித்துத்தான்வேண்டு மருங்கில் புலி வேட்டெழுந்ததுபோல, நீ வடபுல நோக்கிப் போர்வேட் டெழுந்தனை; அப்புலத்தே நின்னைப் போரெதிரும் வேந்தர் யாரோ? அறியேம்; அவரது நாடு தன் பெரு நல்யாணர் வளம் இழந்து கானக்கோழி வாழும் காடாகி விளியு மென்பதை நன்கறிவேம். என்று பாராட்டிப் பாடியுள்ளார். | அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇ முணங்குநிமிர் வயமான் முழுவலி யொருத்தல் ஊனசை யுள்ளந் துரப்ப விரைகுறித்துத் தான்வேண்டு மருங்கின் வேட்டெழுந் தாங்கு | | 5. | வடபுல மன்னர் வாட வடல்குறித் | | தின்னா வெம்போ ரியறேர் வழுதி இதுநீ கண்ணிய தாயி னிருநிலத் தியார்கொ லளியர் தாமே யூர்தொறும் மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங்கொடி | | 10. | வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும் | | பெருநல் யாணரி னொரீஇ யினியே கலிகெழு கடவுள் கந்தங் கைவிடப் பலிகண் மாறிய பாழ்படு பொதியில் நரைமூ தாளர் நாயிடக் குழிந்த | | 15. | வல்லி னல்லக நிறையப் பல்பொறிக் | | கான வாரண மீனும் காடாகி விளியு நாடுடை யோரே. (52) |
திணையும் துறையு மவை. அவனை மருதனிளநாகனார் பாடியது.
உரை: அணங்குடை நெடுங் கோட்டு அளையகம் - தெய்வங்களை யுடைத்தாகிய நெடிய சிகரங்களையுடைய மலையின் கண்ணே முழையின்கண்; முனைஇ - துயிலை வெறுத்து; முணங்கு நிமிர் வயமான் முழு வலி யொருத்தல் - மூரி நிமிர்ந்த புலியாகிய நிரம்பிய வலியையுடைய ஏற்றை; ஊன் நசை உள்ளம் துரப்ப - ஊனை விரும்பியவுள்ளம் செலுத்துதலான்; இரை குறித்து - அவ் விரையைக் கருதி; தான் வேண்டு மருங்கின் வேட் டெழுந்தாங்கு - தான் வேண்டிய விடத்தே விரும்பிச் சென்றாற் போல; வட புல மன்னர் வாட அடல் குறித்து - வட நாட்டு வேந்தர் வாட அவரைக் கொல்லுதலைக் கருதி; இன்னா வெம் போர் இயல்தேர் வழுதி - இன்னாத வெய்ய போரைச் செய்யும் இயற்றப்பட்ட தேரினையுடைய வழுதி; நீ கண்ணியது இதுவாயின் - நீ கருதியது இப்போராயின்; இரு நிலத்து யார் கொல் அளியர் தாம் - பெரிய வுலகத்தின்கண் யாரோ அளிக்கத் தக்கார் தாம்; ஊர் தொறும் மீன் சுடு புகையின் - ஊர்தோறும் மீன் சுடுகின்ற புகையினது; புலவு நாறு நெடுங் கொடி - புலால் நாறும் நெடிய ஒழுங்கு; வய லுழை மருதின் வாங்கு சினை வலக்கும் - வயலிடத்து மருதினது வளைந்த கோட்டைச் சூழும்; பெரு நல் யாணரின் ஒரீஇ - பெரிய நல்ல புது வருவாயின் நீங்கி; இனி - இப்பொழுது; கலிகெழு கடவுள் கந்தம் கைவிட - முழவூ முதலாகிய ஒலி பொருந்திய தெய்வங்கள் தூணத்தைக் கைவிடும் பரிசு; பலி கண் மாறிய பாழ் படு பொதியில் - பலி இடத்தின் மாறிய பாழ்பட்ட அம்பலத்தின்கண்; நரை மூதாளர் நாய் இடக் குழிந்த - முற்காலத்து நரையையுடைய முதியோர் சூதாடுங் கருவியை இடுதலாற் குழிந்த; வல்லின் நல்லகம் நிறைய - அச்சூது கருவியினது நல்ல மனையாகிய இடம் நிறைய; பல் பொறிக் கான வாரணம் ஈனும் - பல பொறியையுடைய காட்டுக் கோழி முட்டையிடும்; காடாகி விளியும் - காடாய்க் கெடும்; நாடுடையோர்; எ-று.
கலி, புகழும் அரவமுமாம். வழுதி, அடல் குறித்து நீ கருதியது இதுவாயின், விளியும் நாடுடையோர்தாம் யார் கொல் அளியர் எனக் கூட்டுக.
விளக்கம்: முழையின்கண் இருக்குங்கால் உறங்குவது தவிரப் பிறிதியாதும் செய்யாதாகலின், முழையின் நீங்கி வெளிப்படும் புலியை, அளையகம் முனைஇ வந்த தென்றாராக, உரைகாரர், முழையின்கண் துயிலை வெறுத்து எனவுரை கூறினார். முனைவு - வெறுப்பு. வெறுக்கப்படுவது துயில்: முழையன்று ஊன் நசையுள்ளம் துரப்ப வென்பதற்கு ஊன்மேற் சென்ற விருப்பம் அதன் உள்ளத்தைச் செலுத்தலான் எனினு மமையும். வடபுல வேந்தரை அடல் குறித்தெழுதலால், அவர் வாடுதலும், அதனால் விளையும் போர் துன்பம் பயத்தலும் பயனாதலால், வாட இன்னா வெம் போர் செய்யும் வழுதி யென்றார். இத்தகைய போர்க்கென்றே சமைக்கப்பட்ட தேர் என்றற்கு இயல் தேர் எனப்பட்டது. வடபுல மன்னர் பலராதலால், போர் ஏற்போர் இவரென்பது விளங்காமையின்,யார்கொல் என்றும், ஏற்றவழி அவர் கெடுதல் ஒருதலையாதலின், அளியர் தாமே என்றும் கூறினார். போரில் அழியுமுன் நாடிருந்த நன்னிலையை, பெருநல் யாணர் என்றும், அழிந்தபின், காட்சி விளியும் என்றும் குறிக்கின்றார். முழவு முதலியவற்றின்கண் தெய்வ முறையும் என்பவாகலின், முழவு முதலாகிய ஒலி பொருந்திய தெய்வம் என்றார். கந்தம், கடவுளுறையும் தூண்; கடவுள் போகிய கருந்தாட் கந்தம் (அகம்:307) என்று பிறரும் கூறுதல் காண்க. நாய், சூதாடு கருவி. வல், சூதாடுங் காய். |