67. கோப்பெருஞ் சோழன்

     இப் பெருஞ் சோழன் உறையூரிலிருந்து ஆட்சி புரிந்த பெருவேந்தன்;
சிறந்த புலவன். இவன் ஆட்சிக்காலத்தே, இவனுடைய மக்கள் இவற்கு
மாறாக வெழுந்து போருடற்றக் கருத, அவரைச் செகுத்தற்கு இவனும்
போர்க்கெழுந்தான்; ஆயினும், புல்லாற்றூர் எயிற்றியனார் முதலிய சான்றோர்
விலக்க விலக்குண்டு அமைந்தான். அம் மானம் பொறாது வடக்கிருந்து உயிர்
துறந்தான். இவனுக்குப் பிசிராந்தையார், பொத்தியார் முதலிய சான்றோர்
உயிர்த் தோழர். நட்புக்குரிய காரணங்களான புணர்ச்சி பழகுதல், உணர்ச்சி
என்ற மூன்றனுள், உணர்ச்சி காரணமாகப் பிறக்கும் நட்புக்கு இவற்கும்
பிசிராந்தையாருக்கும் உளதாய நட்பினைச் சான்றோர் எடுத்துக் காட்டுவர்.
இவன் வடக்கிருந்த காலத்தில், அவ்வாறே தாமும் இருந்து உயிர்நீத்தற்குப்
போந்த பொத்தியாரை விலக்கி, “நின் மனைவி கருவுயிர்த்தபின் வருக” என
இச்சோழன் பணித்தான். அவ்வாறு அவர் வருதற்குள் இவன் உயிர் துறந்து
நடு கல் லாயினன். பின்னர் அவர் வந்தபோது நடுகல்லாகிய தான் அவற்கு
இடமளித்தான். இவன் தானே அவ்வப்போது பாடிய பாட்டுக்களும் உள.
அவை உயர்ந்த கருத்தும், சிறந்த இலக்கிய நலமும் உடையன.
இப்பாட்டின்கண் ஆசிரியர் பிசிராந்தையார், அன்னச் சேவலுக்குக்
கூறுவாராய்க் கோப்பெருஞ் சோழன் தன்பால் கொண்டிருக்கும் அன்பினையும்
நன்மதிப்பையும் எடுத்தோதிக் காட்டுமுகத்தால் உண்மை யன்பு கலந்த நண்பர்
மனப் பாங்கினை வெளிப்படுக்கின்றார்.

     பிசிர் என்பது பாண்டிநாட்டிலிருந்ததோ ரூர். ஆந்தையார் என்பது
இச் சான்றோரது பெயர். இவர் காலத்தே, பாண்டிநாட்டை அறிவுடை நம்பி
யென்பான் ஆண்டுவந்தான். அவன் தன்னாட்டு மக்கள் பால் இறை
பெறுந்திறத்தில் முறைபிறழும் நிலையி லிருப்ப, அதனை யறிந்த
பிசிராந்தையார், தம்மூர்ச் சான்றோர் தம்மை விடுப்ப வேந்தன் பாற் சென்று,
“அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே, கோடியாத்து நாடு பெரிது
நந்தும்” என்று தெருட்டி நெறிப்படுத்தினார். பின்பு, கோப்பெருஞ் சோழனது
செம்மையும் புலமையும் கேள்வியுற்று, அவன்பால் பேரன்பு பூண்டார்;
சோழனும் இவர்பால் மெய்யன்பு கொண்டான். உணர்ச்சி யொருமையால்
ஒருவரை யொருவர் அறியாமே பிறந்த நட்பு முடிவில் ஒருவரை யொருவர்
இன்றியமையா நிலையினைப் பயந்தது. கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்து
நடுகல்லாகிய பின்பு இவர் சென்று கண்டு தாமும் உயிர்நீத்தார். அந் நிகழ்ச்சிக்
குறிப்புக்கள் இத் தொகைநூற்கண் காணப்படும்.

அன்னச் சேவ லன்னச் சேவல்
ஆடுகொள் வென்றி யடுபோ ரண்ணல்
நாடுதலை யளிக்கு மொண்முகம் போலக்
கோடுகூடு மதிய முகிழ்நிலா விளங்கும்
5மையன் மாலையாங் கையறு பினையக்
குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை யாயி னிடையது
சோழநன் னாட்டுப் படினே கோழி
உயர்நிலை மாடத்துக் குறும்பறை யசைஇ
10.வாயில் விடாது கோயில் புக்கெம்
பெருங்கோக் கிள்ளி கேட்க விரும்பிசிர்
ஆந்தை யடியுறை யெனினே மாண்டநின்
இன்புறு பேடை யணியத்தன்
நன்புறு நன்கல நல்குவ னினக்கே (67)

     திணை: பாடாண்டிணை. துறை: இயன்மொழி. கோப்பெருஞ்
சோழனைப் பிசிராந்தையார் பாடியது.

     உரை: அன்னச் சேவல் அன்னச் சேவல் - அன்னச் சேவலே
அன்னச் சேவலே; ஆடு கொள் வென்றி அடுபோர் அண்ணல் -
கொல்லுதலைப் பொருந்திய வென்றியையுடைய அடுபோரண்ணல்;
நாடு தலை யளிக்கும் ஒண் முகம் போல - தன்னாட்டைத் தலையளி
செய்யும் விளங்கிய முகம் போல; கோடு கூடு மதியம் முகிழ் நிலா
விளங்கும் - இரண்டு பங்கும் வந்து பொருந்திய மதியம் அரும்பு நிலா
விளங்கும்; மையல் மாலை - தமியோராயினார்க்கு மயக்கத்தைச்
செய்யும் மாலைப் பொழுதின் கண்; யாம் கையறுபு இனைய - யாம்
செயலற்று வருந்த; குமரியம் பெருந் துறை அயிரை மாந்தி -
குமரியாற்றினது பெரிய துறைக்கண்ணே அயிரையை மேய்ந்து;
வடமலைப் பெயர்குவை யாயின் - வடதிசைக்கண் இமயமலைக்
கண்ணே போகின்றாயாயின்; இடையது சோழ நன்னாட்டுப் படினே -
இவ்விரண்டிற்கு மிடையதாகிய நல்ல சோழநாட்டின்கண் சென்று
பொருந்தின்; கோழி - உரையூரின்கண்; உயர்நிலை மாடத்துக்
குறும்பறை அசைஇ உயர்ந்த நிலையையுடைய மாடத்தின்கண்ணே
நினது குறும்பறையோடு தங்கி; வாயில் விடாது கோயில் புக்கு -
வாயில் காவலர்க்கு உணர்த்திவிடாதே தடையின்றிக்
கோயிற்கண்ணே புக்கு; எம் பெருங் கோக் கிள்ளி கேட்க -
எம்முடைய பெருங்கோவாகிய கிள்ளி கேட்ப; இரும் பிசிர் ஆந்தை
அடியுறை எனினே - பெரிய பிசி ரென்னும் ஊரின்கண் ஆந்தையுடைய
அடிக்கீழென்று சொல்லின்; மாண்ட நின் இன்புறு பேடை அணிய -
மாட்சிமையுடைய நினது இன்புறும் பேடை பூண; தன் நன்புறு நன்கலம்
நல்குவன் நினக்கு - தனது விருப்பமுறும் நல்ல அணிகலத்தை
அளிப்பன் நினக்கு எ-று.

     ஆடுகொள் வென்றி யென்பதற்கு, வென்றி மிக்க வென்றி
யெனினுமமையும். குறும் பறை யென்றது? பேடையை, வாயில் விடா
தென்றதற்கு வாயில் காவல் விடவேண்டா தெனினு மமையும். முகிழ் நிலா
வென்பது ஒரு சொன்னடைத்தாய் மதியம் முகிழ் நிலா விளங்கு மென
முதல்வினை கொண்டது; மதியம் முகிழ்க்கும் நிலா வெனினு மமையும்
ஆந்தை யடியுறை யென்பதற்கு. ஆந்தை, நின் அடிக்கண் உறைவானென்
பாரு முளர். கேடை யணிய நன்கலம் நல்குவ னென்றதனாற் பயன், மறவாது
போதல் வேண்டும் என்னும் நினைவாயிற்று.

     விளக்கம்: ஆடு கொள் வென்றிக்கு இடமும் ஏதுவுமாகலின்,
“அடுபோர் அண்ணல்” என்றார். அடு போர் அண்ணல் பகைவரை
வஞ்சியாது கொல்கின்ற போரையுடைய, இம் மாலைப்போது வருத்தத்தால்
மயக்க முறுவிக்குமாகலின், “மையல் மாலை” யெனப்பட்டது. மாலைப்போதில்
வெயிலொளி குன்ற இருள் விரவுதலின், மையல் மாலை யெனப்பட்ட
தென்றுமாம். வடமலை, இமயமலை. திருவேங்கடமும் விந்தமும் வடமலை
யெனப்படுமாயினும், அவை தாமும் வடக்கே பிறமலைகளை யுடைமையின்,
அவ்வாறில்லாத இமயமே ஈண்டுக் கொள்ளப்படுவதாயிற்று. இவற்றின்
கண்ணுள்ள நீர்நிலை ஒருகால் நீர் வற்றுமாயினும், இமயத்து நீர்நிலை என்றும்
வற்றாமையின், அது நோக்கி அன்னச் சேவல் செல்வதாகக் கருதுகின்றார்.
குறும் பறை - இளமை பொருந்திய பெடை யன்னம். குறுமை, இளமை
குறித்துநின்றது; குறு மகள் என்றாற்போல, பறத்தலை யுடையது பறை.
வாழ்க்கைத் துணையாகிய பெடை தனக்குரிய பெண்மைக் குணத்தால்
மாட்சிமைப் படுவதையே இவர் பெரிதும் விரும்புவராதலால்,“மாண்ட நின்
பெடை” என்றார். பிறாண்டு தம் மனைவியை, “மாண்டவென் மனைவி”
யென்பர். அடியுறை யென்னற்குரியது அன்னமாதலின், அதற்கேற்ப
“அடிக்கீழ்” என்றார். “அடியுறை யெனின் வறிது செல்வாயல்லை; நின்
இன்புறு பேடை அணிய நன்கலம் நல்குவன்” என்பது கேட்கின் அன்னம்
மறவாது செல்லும் என்பது கருத்து.