99.அதியமான் நெடுமான் அஞ்சி

     அதியமான் அரசு கட்டி லேறியதும், தனக்கு முன்னோருடைய
சிறப்பெல்லாம்  தான் எய்தினான்; எழு பொறி யமைந்த இலாஞ்சனை
பெற்றான்;   தன்னோடு  பொர  வந்த அரசர் எழுவரை வென்றான்.
இவ்வாறு  பெருஞ் சிறப்பெய்தியும்  அமையாது  கோவலூர்மேற்
படையெடுத்துச்  சென்று  அதற்குரிய  வேந்தனை வென்று வாகை
சூடினான். அக்காலை அதனை யறிந்த ஆசிரியர் பரணர் அவனுடைய
போர் வென்றியை அழகொழுகும் தமிழாற் பாடினார். ஒளவையாரும்
இப் பாட்டின்கண் இச்செய்தி முற்றவும் தோன்றப் பாடியுள்ளார்.
 
 அமரர்ப் பேணியு மாவுதி யருத்தியும்
அரும்பெறன் மரபிற் கரும்பிவட் டந்தும்
நீரக விருக்கை யாழி சூட்டிய
தொன்னிலை மரபினின் முன்னோர் போல
5ஈகையங் கழற்கா லிரும்பனம் புடையற்
பூவார் காவிற் புனிற்றுப்புலா னெடுவேல்
எழுபொறி நாட்டத் தெழா அத் தாயம்
வழுவின் றெய்தியு மமையாய் செருவேட்
டிமிழ்குரன் முரசி னெழுவரொடு முரணிச்
10சென்றமர் கடந்துநின் னாற்ற றோற்றிய
அன்றும் பாடுநர்க் கரியை யின்றும்
பரணன் பாடினன் மற்கொன் மற்றுநீ
முரண்மிகு கோவலூர் நூறிநின்
அரண்டு திகிரி யேந்திய தோளே.    
(99)

     திணையும் துறையும் அவை. அவன் கோலலூ ரெறிந்தானை
அவர் பாடியது.

     உரை:அமரர்ப் பேணியும் ஆவுதி யருத்தியும் - தேவர்களைப்
போற்றி  வழிபட்டும்  அவர்களுக்கு  வேள்விக்கண்  ஆவுதியை
யருந்துவித்தும்; அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும் -
பெறுதற்கரிய முறைமையையுடைய கரும்பை விண்ணுலகத்தினின்று
இவ்வுலகத்தின்கட் கொடுவந்து தந்தும்; நீரக விருக்கை -
கடலுக்குட்பட்ட நிலத்தின்கண்ணே;
ஆழி சூட்டிய -
சக்கரத்தை நடாத்திய; தொன்னிலை மரபின் நின்
முன்னோர்   போல - பழைய   நிலைமை   பொருந்திய
முறைமையையுடைய நின் குடியிற் பழையோரை யொப்ப; ஈகையங்
கழற்கால் - பொன்னாற்  செய்யப்பட்ட  வீரக் கழல் புனைந்த
காலினையும்; இரும் பனம் புடையல் - பெரிய பனந் தோடாகிய
தாரினையும்; பூவார் காவின் - பூ நிறைந்த காவினையும்; புனிற்றுப்
புலால் நெடு வேல் - நாடோறும் புதிய ஈரம் புலராத புலாலையுடைய
நெடிய  வேலினையுமுடைய;     எழு   பொறி - ஏழிலாஞ்சனையும்;
நாட்டத்து எழாஅத் தாயம் - நாடுதலையுடைய  ஒருநாளும் நீங்காத
அரசவுரிமையை; வழுவின்று எய்தியும்  அமையாய் - தப்பின்றாகப்
பெற்றும் அமையாய்; செரு வேட்டு இமிழ் குரல் முரசின் எழுவரொடு
முரணி - போரை  விரும்பி    யொலிக்கும்   ஓசை  பொருந்திய
முரசினையுடைய ஏழரசரோடு பகைத்து; சென்று மேற்சென்று; அமர்
கடந்து நின் ஆற்றல்  தோற்றிய  அன்றும் - போரின்கண் வென்று
நின்    வலியைத்  தோற்றுவித்த  அற்றை நாளும்; பாடுநர்க்கு
அரியை - பாடுவர்க்குப்  பாட  அரியை;  இன்றும் பரணன்
பாடினன் - இற்றை    நாளும்  பரணன்  பாடினன்; நீ முரண் மிகு
கோவலூர் நூறி - நீ மாறுபாடு மிக்க கோவலூரை யழித்து வென்று;
அரண் அடு திகிரி ஏந்திய தோள் - பிறவும் அரண்களை
யழிக்கின்ற  ஆழியைத் தாங்கிய தோளை எ-று.

     இன்றும் பரணன் பாடின னென்றது,  அவனும்  தன்  
பெருமையாற் பாடினான்;  பிறராற்   பாடப்படுத லரிதென்றதாம். நின்
ஆற்றல் தோற்றிய அன்றும்  பாடுநர்க் கரியை; திகிரி யேந்திய தோளை
இன்றும் பரணன் பாடினன்  எனக்  கூட்டுக.  கழற்  காலையும்
புடையலையும் காவையும் வேலையுமுடைய  நின்  முன்னோர்  போலத்
தாயமெய்தியும் அமையா யெனமாறிக்  கூட்டுக.  நாடுதல் - ஆய்தல்.
மூவரொடு முரணியென்றும் முரணடு திகிரி யென்றும் பாடம். கொல்: ஐயம்
மன்; அசைநிலை. பூவார் கா - வானோர்   இவன்  முன்னோர்க்கு  
வரம்  கொடுத்தற்கு வந்திருந்ததொருகா. இவனுக்குப் பனந்தார் கூறியது,
சேரமாற்கு உறவாதலின்.எழுபொறி  நாட்டமென்பதற்கு  ஏழரசர்  நாடுங்  
கூடி ஒரு நாடாய் அவ்வேழரசர் பொறியும் கூடிய பொறியோடு கூடிநின்று
நன்மையும் தீமையு மாராய்தலெனினு மமையும்.

      விளக்கம்: அருத்துதல் - உண்பித்தல். இவண் தந்தெனவே,
கரும்பு இருந்த விடம் அவணாகிய விண்ணுலக மெனப்பட்டது. வழிமுறை
தொடர்பறாது வருதல்பற்றித் “தொன்னிலை மரபு”என்றார். ஈகை - பொன்.
புடையல் மாலை. நாடோறும் பகைரைக் குத்திக் குருதிக் கறை தோய்ந்து
புலால் நாறுதலால், “புனிற்றுப் புலால் நெடுவேல்”என்றார். அரணடு திகிரி
யென்புழித் திகிரி யென்றது, ஆழிப்படை போலும். எழு பொறி யென்றது,
ஏழ்வகை இலாஞ்சனையை; அவை. கேழல் மேழி கலை ஆளி வீணை
சிலை  கெண்டை”(கலிங். கடவுள்.18) என்பன.