9. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி இப் பெருவழுதியை இப்பாட்டால் நெட்டிமையாரென்னும் சான்றோர் சிறப்பிக்கின்றார். நெடுந்தொலைவிலுள்ள பொருளைக் கூர்ந்து நோக்கி யறியும் கண்ணை, நெட்டிமையெனச் சிறப்பித்துரைத்த நயங்கருதி இவர்க்கு இப்பெயருண்டாயிற்று; இவர் பஃறுளியாறு கடல் கோட்படு முன்பு இருந்தவராதலின், கடல் கோட்குப் பின்னர்த் தோன்றிய சங்ககாலத்தில் அப் பாட்டு இறந்துபோயிற்றாதல் வேண்டும். இவரது கண்ணிமை நீண்ட பண்புடையது; அதனால் இவர்க்கு இப் பெயரெய்திற்று என்று கூறுவர். கண்ணிமை நீண்டிருத்தல் அழகன்மையின், அதனால் ஒருவர் பெயர்படைத்துக் கொள்வரென்பது மக்கள் இயல்பன்று. இனி, இப் பாட்டின்கண் பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி, அறத்தாறு நுவலும் பூட்கையும் யானைமேற் கொடி காட்டிய சிவிகையமைத்து இவர்ந்து வரும் பெருமிதமும் உடையன் என்றும், இவனுடைய முன்னோனாகிய பாண்டியன் நெடியோனென்பான் பஃறுளியாறு கடலிற் கலக்குமிடத்தே முந்நீர் விழா ஆற்றினான் என்றும், அவ்வியாற்று மணலினும் பல வாண்டுகள் இப் பாண்டியன் முதுகுடுமி வாழ்வானாக என்றும் வாழ்த்துகின்றார். | | ஆவு மானியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் | | 5. | எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென | | அறத்தாறு நுவலும் பூட்கை மறத்திற் கொல்களிற்று மீமிசை கொடிவிசும்பு நிழற்றும் எங்கோ வாழிய குடுமி தங்கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த | | 10. | முந்நீர் விழவி னெடியோன் | | நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே (9) | திணையும் துறையும் அவை. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.
உரை : ஆவும் ஆன் இயற் பார்ப்பன மாக்களும் - ஆவும் ஆனினதியல்பையுடைய பார்ப்பாரும்; பெண்டிரும் - மகளிரும்; பிணியுடையீரும் - நோயுடையீரும்; பேணி - பாதுகாத்து; தென்புல வாழ்நர்க் கருங்கடன் இறுக்கும் - தென்றிசைக்கண் வாழ்வோராகிய நுங்குடியில் இறந்தோர்க்குச் செய்தற்கரிய பிண்டோதகக் கிரியையைப் பண்ணும்; பொன்போல் புதல்வர்ப் பெறாதீரும் - பொன்போலும் பிள்ளைகளைப் பெறாதீரும்;எம் அம்பு கடி விடுதும்- எம்முடைய அம்பை விரையச் செலுத்தக் கடவேம்; நும் அரண் சேர்மின் என - நீர் நுமக்கு அரணாகிய இடத்தை அடையும் என்று; அறத்தாறு நுவலும் பூட்கை - அறநெறியைச் சொல்லும் மேற்கோளினையும்; மறத்தின் - அதற்கேற்ற மறத்தினையுமுடைய; கொல் களிற்று மீமிசைக் கொடி - கொல் யானை மேலே எடுக்கப்பட்ட கொடிகள்; விசும்பு நிழற்றும் - ஆகாயத்தை நிழற்செய்யும்; எங்கோ குடுமி வாழிய - எம்முடைய வேந்தனாகிய குடுமி வாழ்வானாக; தம் கோ - தம்முடைய கோவாகிய; செந்நீர்ப் பசும்பொன் -சிவந்த நீர்மையையுடைய போக்கற்ற பசிய பொன்னை; வயிரியர்க்கு ஈத்த - கூத்தர்க்கு வழங்கிய; முந்நீர் விழவின் நெடியோன் -முந்நீர்க் கடற்றெய்வத்திற்கெடுத்த விழாவினையுடைய நெடியோனால் உளதாக்கப்பட்ட; நன்னீர்ப் பஃறுளி மணலினும் பல - நல்ல நீரையுடைய பஃறுளி யென்னும் ஆற்றின் மணலினும் பலகாலம் எ-று.
எங் கோவாகிய குடுமி பஃறுளியாற்று மணலினும் பலகாலம் வாழியவெனக் கூட்டுக. கொடி விசும்பு நிழற்றுமென்பது சினைவினைப் பாற்பட்டு எங்கோ வென்னும் முதலொடு முடிந்தது; கொடியால் விசும்பு நிழற்றுமென் றுரைப்பினு மமையும். மீமிசைக்கொடி விசும்பு நிழற்றும் களிற்றினையுமென மாறிக் கூட்டுவாரு முளர். தங்கோச் செந்நீர்ப் பசும்பொன் என்பதற்குத் தமது அரசாட்சியினது செவ்விய நீர்மையாற் செய்த பசும்பொன் என்பாருமுளர். முந்நீர்க் கண் வடிம்பலம்ப நின்றானென்ற வியப்பால் நெடியோ னென்றா ரென்ப. யாற்று நீரும் ஊற்றுநீரும் மழைநீரு முடைமையான், கடற்கு முந்நீரென்று பெயராயிற்று. அன்றி முன்னீரென்று பாடமோதி நிலத்திற்கு முன்னாகிய நீரென்று முரைப்ப. பிணியுடையீரும் புதல்வர்ப் பெறாதீரு மென்னும் முன்னிலைப் பெயரோடு ஆவும் பார்ப்பன மாக்களும் பெண்டிருமென்னும் படர்க்கைப் பெயர்கள் விராய் வந்து, நும்மரண் சேர்மின் என்னும் முன்னிலை வினையான் முடிதல், செய்யுண் மருங்கினும் வழக்கியல் மருங்கினும் (தொல்.சொல்.எச்ச. 67) என்னும் அதிகாரப் புறனடையாற் கொள்ளப்படும்.
விளக்கம்: ஆனினதியல் பையுடைய பார்ப்பாரும் என்று ஏட்டில் காணப்படுகிறது. அந்தணரை மாக்களென்று வழங்காராதலால், ஏட்டிற் காணப்பட்டதே ஈண்டுக் கொள்ளப்பட்டது. அச்சுப்படி ஆனினதியல்பை யுடைய அந்தணரும் என்று கூறுகிறது. பிண்டோதகம், பிண்டமும் உதகமும். பிண்டம் - சோறு; உதகம் - நீர். ஒரு குடியில் இறந்தோர், தென்றிசைக்கண் இருந்து, தம் குடியிற் பிறக்கும் புதல்வர் தம்மை நோக்கிப் படைக்கும் சோறும் நீரும் உண்டு வாழ்வர் என்ப.பகைவராலும் விரும்பப்படும் சிறப்புப்பற்றி, புதல்வரைப் பொன்போற் புதல்வர்என்றார்; பொன்போற் புதல்வனோ டென்னீத் தோனே (ஐங்.265) என்று பிறரும கூறுப. அடையும் என்பது உம்மீற்று முன்னிலை வினைமுற்று; செய்யுமென்னும் முற்றன்று.மேற்கோள் - மேற்கொண்டொழுகும் கொள்கை. ஒரு கொள்கையினை மேற்கொண்ட வழியும், அதனைச் செயற்படுத்தற்கு இன்றியமையாது வேண்டப்படுவது மறப்பண்பாதலின்,மறத்தின்என்றதற்கு, அதற்கேற்ற மறத்தினையும் என்றுரைத்தார். மீமிசைக் கொடியென்றது பற்றி, அது விசும்பினும் உயர்ந்து அதனைக் கீழ்ப்படுத்தித் தான் மேலுயர்ந்து நின்று அவ் விசும்பிற்கு நிழல் செய்யும் என்பது தோன்ற ஆகாயத்தை நிழற்செய்யும் என்றார். மீமிசை யென்புழி மீயென்றது யானைமீதுள்ள சிவிகையின் மேலிடத்தையும், மிசை யென்றது, அவ்விடத்தே விசும்பும் கீழ்ப்பட மேலுயர்ந்து நிற்கும் கொடி மரத்தின் உச்சியையும் குறித்து நின்றது. நிழற்றுமென்பது கொடியின் வினை.அது பெயரெச்சமாய்க் கோவென்பதனோடு முடிந்தது. கோவுக்குக் கொடி சினையாதலின், சினை வினைப்பாற்பட்டு எங் கோவென்னும் முதலொடு முடிந்தது என்றார். இவ்வாறு கொள்ளாமல், விசும்பானது தன்கீழ் களிற்றுமிசை நின்று நுடங்கும் கொடியால் நிலத்தை நிழற்செய்யும் என்றும் பொருள் கூறலாம் என்பதற்கு, கொடியால் விசும்பு நிழற்றும் எனினும் அமையும் என்றார். கொடிநின்று விசும்பு நிழற்றுதற்குக் களிறு இடமாதலின், இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்துமேலேற்றிக் கூறுபவரும் உண்டு; அதனால், மீமிசைக்கொடி....... மாறிக் கூட்டுவாருமுளர் என்றார். செவ்விய நீர்மையாற்செய்த பசும்பொன் என்று உரைகூறுவோர், செய்த என ்பதற்கு ஈட்டிய என்பது பொருளாகக் கொண்டுரைப்பர்.
நெடியோன் பாண்டி வேந்தருள் மிகப் பழையோனாகிய ஒருவனாவான். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனை மாங்குடி மருதனாரென்னும் சான்றோர், பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல் (மதுரைக்.61) என்பதனாலும் இவனை யறியலாம். உரைகாரர், திருவிளையாடற் புராண காலத்துக்குப் பிற்பட்டவராதலின், வடிம் பலம்ப நின்ற பாண்டியன் வரலாற்றை யுட்கொண்டு இதற்கு வேறுரை கூறுபவரைக் கண்டு முந்நீர்க்கண் வடிம் பலம்பநின்றானென்ற வியப்பால் நெடியோ னென்றா ரென்ப என்று குறிக்கின்றார். முந்நீர் விழவு கண்ட நெடியோனுக்கும் வடிம்பலம்ப நின்ற பாண்டியனுக்கும் பொருத்தம் யாதுமில்லையாதலால், வடிம் பலம்ப நின்ற பாண்டிய னென்னாது நெடியோனென்றே உரைகூறினார். இனி, முந்நீர் என்று கடற்குப்பெயருண்டானதற்கு இவ் வுரைகாரர் கூறும் காரணத்தை மறுத்து, மண்ணைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய முச்செய்கையை யுடைய நீர் முந்நீர்; ஆகுபெயரால் அது கடற்காயிற்றென அடியார்க்கு நல்லார் (சிலம்.17) கூறுவர்; அவர் கூறியதையே நச்சினார்க்கினியாரும் (பெரும்பாண்.441) மேற்கொள்வர்.நிலத்திற்கு முன்னாகிய நீர் நிலத்திற்கு முன்னே யுண்டாகிய நீர்; முதுநீர்ப் பௌவம் கதுமெனக் கலங்க (பெருங்.3. 24:140) என்று பிறரும் இக் கருத்துத் தோன்ற உரைப்பது நோக்கத்தக்கது. முன்னிலைப்பெயரும் படர்க்கைப்பெயரும் விரவி முன்னிலைவினை கோடற்குத் தனியே விதி கூறப்படாமையால், அதிகாரப் புறனடையாற் கொள்ளவேண்டி யிருத்தல்கொண்டு,முன்னிலைவினையான் முடிதல்......கொள்ளப்படும் என்றார்.
பாண்டியன் நெடியோன் காலத்திருந்த பஃறுளியாற்றை நெட்டிமையார் எடுத்தோதி அதன் மணலினும் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துதலால், அப் பஃறுளியாறு நெட்டிமையார் காலத்தும் உளதாதல் பெறப்படும்; படவே, இவரும் இவராற் பாடப்பெற்ற பாண்டியனும் கடல்கோட் காலத்துக்கு முற்பட்டவர் என்பது விளக்கமாம். |