13. சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி

     இப்பெருநற்கிள்ளி சோழநாட்டு வேந்தனாய் இருந்து வருகையில்
தன்னொடு பகைகொண்ட சேரமன்னரொடு போருடற்றும் கருத்தினனாய்க்
கருவூரை முற்றியிருந்தான்.அப்போது சேரநாட்டு மன்னனாவான் சேரமான்
அந்துவஞ்சேர  லிரும்பொறை.  ஒருநாள்  சோழன் கோப்பெருநற்கிள்ளி
கருவூரை  நோக்கிச்  சென்று  கொண்டிருக்கையில் அவன் ஏறிய களிறு
மதம்படுவதாயிற்று.   அக்காலை   ஆசிரியர்   உறையூர்   ஏணிச்சேரி
முடமோசியார்  என்னும்  சான்றோர்    சேரமன்னனுடன்    அவனது
அரசமாளிகையாகிய வேண்மாடத்துமேல் இருந்தார். சோழன் களிற்றுமிசை
யிருப்பதும்,   களிறு  மதம்பட்டுத்  திரிவதும்,  பாகரும் வீரரும் அதனை
யடக்க முயல்வதும் கண்ட  சேரமான்  மோசியாருக்குக்  காட்ட, அவர்
இப்பாட்டினைப் பாடினார். முடமோசியார் என்னும் சான்றோர். ஏணிச்சேரி
யென்னும் ஊரினர். இவர் உறையூரிடத்தே தங்கியிருந்தமையால், உரையூர்
ஏணிச்சேரி முடமோசியார் எனப்படுகின்றார். இவர் பாடிய பாட்டுக்கள் பல
இத்தொகை  நூல்களில்   உண்டு.   அவை   பெரும்பாலும்   ஆஅய்
அண்டிரனைப் பாடியவை யாதலால் அவன்பால் இவருக்கிருந்த நன்மதிப்பு
நன்கு புலனாகும். இப்பாட்டின்கண்,   களிற்றுமேலிருந்த   சோழனை
இன்னானென்    றறியாது    கேட்ட    சேரமான்     அந்துவஞ்சேர
லிரும்பொறைக்குக் களிற்று மேற் செல்வோனாகிய இவன் யாரெனின், நீர்
வளத்தால் மிக்கு விளைந்த நெல்லை யறுக்கும் உழவர், மீனும் கள்ளும்
பெறும் நீர்நாட்டை யுடையவன்; இவன் களிறு மதம்பட்டதனால் இவன்
நோயின்றிச் செல்வானாதல் வேண்டும் என்று குறிக்கின்றார்.

 இவனியா ரென்குவை யாயி னிவனே
புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய
எய்கணை கிழித்த பகட்டெழின் மார்பின்
மறலி யன்ன களிற்றுமிசை யோனே
5.களிறே, முந்நீர் வழங்கும் நாவாய் போலவும்
  பன்மீ னாப்பட் டிங்கள் போலவும்
சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப
மரீஇயோ ரறியாது மைந்துபட் டன்றே
நோயில னாகிப் பெயர்கதி லம்ம
10.பழன மஞ்ஞை யுகுத்த பீலி
  கழனி யுழவர் சூட்டொடு தொகுக்கும்
கொழுமீன் விளைந்த கள்ளின்
விழுநீர் வேலி நாடுகிழ வோனே (13)

     திணை: பாடாண்டிணை. துறை:  வாழ்த்தியல்.   சோழன்
முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி  கருவூரிடஞ்  செல்வானைக்
கண்டு சேரமான்    அந்துவஞ்சேர     லிரும்பொறையொடு
வேண்மாடத்து    மேலிருந்து    உறையூர்    ஏணிச்சேரி
முடமோசியார் பாடியது.

     உரை: இவன்  யார் என்குவையாயின் - இவன் யாரென்று
வினவுவாயாயின்;  இவனே  -  இவன்தான்;  புலிநிறக்  கவசம்
- புலியினது தோலாற்  செய்யப்பட்ட  மெய்புகு  கருவி  பொலிந்த;
பூம்பொறி  சிதைய -  கொளுத்தற;  எய் கணை கிழித்த - எய்த
அம்புகள்  போழப்பட்ட; பகட்டெழில்  மார்பின் - பரந்துயர்ந்த
மார்பினையுடைய; மறலி யன்ன களிற்று மிசை யோன் - கூற்றம்
போன்ற களிற்றின் மேலோன்; களிறு - இக்களிறு தான்; முந்நீர்
வழங்கும்  நாவாய்  போலவும்  -  கடலின்  கண்ணேயியங்கும்
மரக்கலத்தை யொப்பவும்; பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்
- பல மீனினது நடுவே செல்லும் மதியத்தை யொப்பவும்; சுறவினத்
தன்ன  வாளோர்  யொப்ப - சுறவின் இனத்தை யொத்த வாண்
மறவர் சூழ; மரீஇயோர் அறியாது - தன்னை  மருவிய  பாகரை
யறியாது;   மைந்து  பட்டன்று -  மதம்பட்டது;  நோயிலனாகிப்
பெயர்கதில் அம்ம - இவன் நோயின்றிப் பெயர்வானாக; பழனம்
-வயலிடத்து; மயில் உகுத்த பீலி - மயில் உதிர்த்த பீலியை;கழனி
யுழவர் -  ஆண்டுள்ள  உழவர்;  சூட்டொடு தொகுக்கும் -நெற்
சூட்டுடனே திரட்டும்; கொழுமீன் - கொழுவிய மீனையும்;
விளைந்த கள்ளின் -
விளைந்த கள்ளையுமுடைய; விழுநீர் வேலி
- மிக்க  நீராகிய வேலியையுடைய; நாடு கிழவோன் -
நாட்டையுடையோன் எ-று.

     களிற்று மிசையோனாகிய இவன் யாரென்குவையாயின், நாடுகிழவோன்;
இவன் களிறு மதம்பட்டது; அதனால் இவன் நோயின்றிப் பெயர்கவெனக்
கூட்டி  வினைமுடிவு  செய்க.  களிற்றுக்கு  நாவாயோடுவமை  எதிர்ப்
படையைக் கிழித்தோடலும், திங்களோ டுவமை  வாளோர்  சூழத்  தன்
தலைமை தோன்றச் செல்லுதலுமாகக் கொள்க. தில்:விழைவின்கண் வந்தது.
பெருநற்கிள்ளி களிறு கையிகந்து பகையகத்துப் புகுந்தமையால் அவற்குத்
தீங்குறுமென் றஞ்சி வாழ்த்தினமையால், இது வாழ்த்தியலாயிற்று. இவற்குத்
தீங்குறின் நமக்குத் தீங்குறுமென்னுங் கருத்தால், நோயிலனாகிப் பெயர்க
வென்றாராயின் வாழ்த்தியலாகாது, துறையுடையானது பாட்டாமென வுணர்க.

விளக்கம்: புலி   நிறம்,  புலியினது  தோல்.  பூம்  பொறி - பொலி
வினையுடைய தோலினது  இணைப்பு. புலியினது  வரியுடன்  இணைப்பும்
கலந்து அழகு  செய்தலின்  அதனைப் “பூம்பொறி”  யென்றார்.  உரையிற்
கொளுத்து  என்றது, தோலினது  தையல்  இணைப்பை.  இப்  புலிநிறக்
கவசத்தை, “புலிப்பொறிப் போர்வை” யென்றும் கூறுவர். மறலி - கூற்றுவன்.
களிற்றினுடைய நிறமும் தோற்றமும்  வன்மையும்  தோன்ற, “மறலி  யன்ன
களிறு” என்றவர். மீட்டும் அதற்கு  நாவாயும்    திங்களும்    உவமை
கூறியதற்குக் காரணம், “களிற்றுக்கு.......கொள்க” என்றார். சோழன் கருவூரை
முற்றியிருக்கின்றானாதலால், பகைப் புலமாகிய கருவூரிடம் செல்லுங்கால்
ஊர்ந்து செல்லும் களிறு மதம் பட்டது காணும் பகைவர்,அதனை அடக்க
முயலாது சினம் மிகுவித்து, அதற்கும் ஊர்ந்துவரும்  சோழற்கும்  தீங்கு
விளைவிப்பரென்ற  கருத்தால்,  “நோயிலனாகிப்  பெயர்கதில்”  என்று
வாழ்த்துகின்றார். “இவற்குத்  தீங்குறின்  நமக்குத்  தீங்குறும்”  என்றது,
இவனுக்குத்   தீங்குண்டாயின்   இவனது   ஆதரவு   பெற்று  வாழும்
தம்மைப்போலும் பரிசிலருக்கும் ஆதரவின்றி யொழிதலால் தீங்குண்டாம்
என்பதாம்.  தந்நலம்  நோக்காது  பிறர்  நலமே  பேணி  வாழ்த்துவது
வாழ்த்தியலாகும்.தமக்குத் தீங்குறுமென்று கருதிக்கூறின் வாழ்த்தியலாகாது,
சோழன் பெருநற்கிள்ளியையே  பாடும்  செந்துறைப்  பாடாண்பாட்டாய்
முடியும்  என்பதாம்.  தில்லென்னும்  இடைச்சொல்  விழைவுப்பொருளில்
வந்தது; “விழைவே காலம்  ஒழியிசைக்  கிளவியென்,  றம்மூன்  றென்ப
தில்லைச் சொல்லே” (சொல்.இடை 5) என்பது தொல்காப்பியம்.