134. வேள் ஆய் அண்டிரன் உலகத்துச் செல்வர் பலரும் தம்பால் உள்ள செல்வத்தைப் பரிசிலர்க்கு வழங்குவது இம்மையிற் புகழும் மறுமையிற் றுறக்க வின்பமும் குறித்தேயாகும்; ஆகவே, இப்பயன்கருதிக் கொடைவழங்கும் அவர்கள், பொருள் கொடுத்து மறுமை யின்பம் கோடலின், ஓராற்றால் அறவிலை வணிகரே யாகும்; அவர் தொகையுள் ஆய் அண்டிரனும் அமைவன் போலும் எனச் சான்றோரிடையே ஒருகால் பேச்சு நிகழ்ந்ததாக, ஏணிச்சேரி முடமோசியார், ஆய் அத்தகைய னல்லன்; இல்லார்க்கு வேண்டுவன நல்கி அவரையும் தம்மைப்போல உலகியலில் நுகர்வன நுகர்வித்தல் உடையோர்க்குக் கடனாம் என்னும் சால்பு சான்றோர்க்குரியது; அதனையே சான்றோரும் தக்கதென நிகழ்வது ஆய் அண்டிரனது கொடை என இப்பாட்டின்கண் அச் சான்றோர்க்கு வற்புறுத்தியுள்ளார். இம்மைச் செய்தது மறுமைக் காமெனும் அறவிலை வணிக னாயலன் பிறரும் சான்றோர் சென்ற நெறியென ஆங்குப் பட்டன் றவன்கைவண் மையே. (134) |
திணை : அது. துறை : இயன்மொழி. அவனை அவர் பாடியது. உரை : இம்மைச் செய்தது - இப் பிறப்பின்கட் செய்த தொன்று; மறுமைக்காம் - மறுபிறப்பிற் குதவும்; எனும் அறவிலை வணிகன் ஆய் அலன் - என்று கருதிப் பொருளை விலையாகக் கொடுத்து அதற்கு அறங்கொள்ளும் வணிகன் ஆய் அல்லன்; சான்றோர் பிறரும் சென்ற நெறி என - அமைந்தோர் பிறரும் போயவழி யென்று உலகத்தார் கருத; ஆங்குப் பட்டன்று அவன் கைவண்மை - அந்த நற்செய்கையிலே பட்டது அவனது கைவண்ணம் எ-று.
அன்றி, ஆய் அறவிலை வணிகன் அல்லன்; பிறரும் சான்றோர் சென்ற நெறி யெனக் கருதி அச் செய்கையிலே பட்டதன்று அவன் கைவண்மை யென்றுரைப்பாரு முளர். இதற்குப் பட்டன்றென்பது மறைப்பொருள் படாமையின், பட்டதன்றென்பது பட்டன்றென விகாரமாகக் கொள்க.
விளக்கம் : மறுமைப் பயன் அறப்பயனாதலின், இம்மையில் நலம்செய்து மறுமையில் இன்பம் கருதுவோரை அறவிலை வணிகர்” என்றார். அமைந்தோர், நற்பண்புகளால் நிறைந்தவர். என என்பதற்கு என்று கருத வென்றுரைத்தவர் கருதுதலைச் செய்தற்குரியவர் இவரென்பார் உலகத்தார்” என்றார். பட்டன்று, பட்டது; அணிந்தன்று” என்றாற்போல. பிறர் கூறுமாறு உரை கொள்வதாயின், பட்ட தன்றென்பது பட்டன்றென நின்றதென வுரைத்தல் வேண்டும்; இன்றேல், பட்டன்றென்பது எதிர்மறைப் பொருள் தாராது என அறிக.
* இவ்வழக்கு கீழ்மக்களிடையே இந்நாளில் இக்கருத்தே தோன்ற இடக்கர் வாய்பாட்டில் வழங்குகிறது. |