137. நாஞ்சில் வள்ளுவன் திருக்குறட் செல்வத்தைச் செந்தமிழ்க்கு வழங்கி உலகு புகழும் நிலைப்புகழ் பெற்ற திருவள்ளுவர் போல, வள்ளுவ னென இயற்பெயர் பெற்ற கொடைவள்ளல் இந் நாஞ்சில் வள்ளுவன். நாஞ்சில் மலையும் அதன் அடிப்பகுதியிலுள்ள நாஞ்சில் நாடும் இவ் வள்ளுவற்குரியவை. இவன் சேரமன்னர்க்குக் கீழிருந்து வாழும் சிற்றரசன். இவன் முன்னோர் போரிற் புறங்கொடாத புகழ் பெற்றவர். இவற்கு முடிவேந்தனான சேரன், இவன்பால் பெருமதிப்பும் பேரன்புமுடையவனாய் இவன் வேண்டியன யாவும் வேண்டியவாறே இவற்கு வழங்கினன். அதனால் இவனும் அவன்பொருட்டுச் சாதல், தன்னை விற்றாயினும் கொள்ளத்தக்கதெனக் கருதும் வீறு கொண்டிருந்தான். ஒளவையாரால் இவன் பெரியோர் வரிசையுள் வைத்துப் போற்றப்பட்டவன். இவனது சான்றண்மையை வியந்த ஒரு சிறைப் பெரியனார் இவனைப் பெற்ற தாய் தந்தையர் தவத்தைப் பாராட்டி, நின் தந்தை தாய் வாழியர் நிற்பயந் திசினோரே யென்று வாழ்த்தியுள்ளார். இவன் தந்தை யென்னோற்றான் கொல்லென்னும் சொல் நிகழுமா றொழுகிய இவனது ஒழுக்கம் திருவள்ளுவர் திருவுள்ளத்திருந்து விளக்கஞ் செய்திருப்பது இதனால் நன்கு புலனாகிறது. இவனை ஒரு சிறைப் பெரியனார், மருதனிளநாகனார், ஒளவையார் என்ற சான்றோர் மூவரும் பாடியுள்ளனர். இவருள் ஒளவையார் இவனைச் சிறிது அரிசி வேண்டினாராக, அவர்க்கு இவன் பெரியதொரு களிற்றினை நல்கினான். அதனை வியந்து அவர் பாடிய பாட்டு மிக்க சுவையுடையதாகும். இப்போதுள்ள நாகர்கோவிலைச் சூழ்வுள்ள நாடு நாஞ்சில் நாடு எனப்படுகிறது. ஆங்குள்ள மலைகளுள் நாஞ்சில்மலை இன்னதெனத் தெரிந்திலது. ஆதலால், வள்ளுவனது நாஞ்சில்மலையும் அவனது நாடும் இவையெனத் தெளிதற்கு வேண்டும் விளக்கமில்லாமல் இருக்கின்றன. உடுமலைப்பேட்டைக்குத் தெற்கிலுள்ள மலைத் தொடர்களிற் றோன்றி யோடும் காட்டாறுகளுள் ஒன்று நாஞ்சிலாறு என்னும் பெயர் கொண்டுளது. உ. வே. சாமிநாதையரவர்களும் இது குறித்து ஒன்றும் கூறமாட்டா தொழிந்தனர். இவ் வள்ளுவன் சேர மன்னன் ஆதரவு பெற்றவனென்பது கொண்டு, இவனது நாடு சேரநாட் டெல்லையில் தமிழகத்தைச் சாரவிருந்த தென்பது ஒருதலை.
இனி, இவனைப் பாடிய சான்றோருள் ஒரு சிறைப் பெரியனார் பெயர் சில ஏடுகளில் ஒரு சிறைப் பெயரினார் என்றும் காணப்படுகிறது. இவர் நாஞ்சில் வள்ளுவனது நாட்டிலே பிறந்து வளர்ந்து நல்லிசைப் புலமை நிறைந்தவர். இவர்க்கு வள்ளுவன் ஆட்சி நலத்திற் பேரீடுபாடு உண்டு. நாட்டில் உள்ள சான்றோர்க்குப் பெருந்திரு வுடையரான தமிழ்வேந்தர் மூவரையும் பாடுதற்குப் பேரவா வுண்டாதல் இயல்பாயினும், தமக்கு வள்ளுவனைக் காட்டிலும் அவர்கள் மேம்பட்டவராகத் தோன்றாமையின், அவரைப் பாடுவதற்குச் சிறிதும் அவாவாதவர். நாஞ்சில் நாட்டில் விதைத்த வித்து மழையில்லை யெனக் கெடுதலின்றிக் கரும்புபோல வளமுற வளர்ந்து விளையும் என்றும், கோடையால் நீர்நிலைகள் வற்றுவதில்லை யென்றும், கடனோக்கி யோடும் ஆறுகள் தெளிந்த நீருடனே வேங்கைப் பூக்களைக் கொண்டு செல்லும் என்றும் பாடி, பெருங்கல் நாடனே, நீ வாழ்வாயாக; நின்னைப் பெற்றமையால் நின் தந்தை தாயர் வாழ்க என்று பாராட்டியுள்ளார். | இரங்கு முரசி னினஞ்சால் யானை முந்நீ ரேணி விறல்கெழு மூவரை இன்னு மோர்யா னவாவறி யேனே நீயே, முன்யா னறியு மோனே துவன்றிய | 5 | கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது | | கழைக்கரும்பி னொலிக்குந்து கொண்டல் கொண்டநீர் கோடை காயினும் கண்ணன்ன மலர்ப்பூக்குந்து கருங்கால் வேங்கை மலரி னாளும் | 10 | பொன்னன்ன வீசுமந்து | | மணியன்னநீர் கடற்படரும் செவ்வரைப் படப்பை நாஞ்சிற் பொருந சிறுவெள் ளருவிப் பெருங்க னாடனை நீவா ழியர்நின் றந்தை | 15 | தாய்வா ழியர்நிற் பயந்திசி னோரே. (137) |
திணை : அது. துறை : இயன்மொழி; பரிசிற்றுறையுமாம். நாஞ்சில் வள்ளுவனை ஒருசிறைப் பெரியனார் பாடியது.
உரை : இரங்கு முரசின் - ஒலிக்கும் முரசினையும்; இனம் சால் யானை - இனமமைந்த யானையையுமுடைய; முந்நீர் ஏணி விறல் கெழு மூவரை - கடலாகிய எல்லையையுடைய நிலத்தின் கண் வென்றி பொருந்திய மூவேந்தரை; இன்னும் ஓர் யான் அவா வறியேன் - இன்னமும் யானொருவனே பாடும் அவாவை யறியேன்; நீயே முன் யான் அறியுமோன் - நீதான் முன்னே தொடங்கி யான் அறியு மவன்; துவன்றிய கயத்திட்ட வித்து - நீர்நிறைந்த பள்ளத்தின்கண் விதைத்த வித்து; வறத்திற் சாவாது - நீரின்மையாற் சாவாது; கழைக் கரும்பின் ஒலிக்குந்து - கரும்புபோலத் தழைக்கும்; கொண்டல் கொண்ட நீர் - மழையால் முகந்து சொரியப்பட்ட நீர்; கோடை காயினும் கண்ணன்ன மலர் பூக்குந்து - கோடை காயினும் மகளிர் கண்போன்ற குவளை முதலிய மலர் பூக்கும்;கருங் கால் வேங்கை மலரின் - கரிய தாளையுடைய வேங்கை மலரின்; நாளும் பொன்னன்ன வீ சுமந்து - நாடோறும் அப் பொன்போலும் பூவைச் சுமந்து; மணியன்ன நீர் கடற் படரும் - மணிபோலும் நீர் கடற்கட் செல்லும்; செவ்வரைப் படப்பை நாஞ்சிற் பொருந - செவ்விய மலைப்பக்கத்தையுடைய நாஞ்சிலென்னும் மலையையுடைய பொருந; சிறு வெள் அருவிப் பெருங்கல் நாடனை - சிறிய வெளிய அருவியையுடைய பெரிய மலையையுடைய நாட்டை யுடையாய்; நீ வாழியர் - நீ வாழ்வாயாக; நிற்பயந் திசினோர் நின் தந்தை தாய் வாழியர் - நின்னைப் பெற்றோராகிய நின் தந்தையும் தாயும் வாழ்க எ-று.
நீர் மலர் பூக்குமென இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்து மேல் ஏறிநின்றது. கோடைக்காயினு மென்பது பாடமாயின், கோடைக் கட்காயினு மென்றானும், கோடைக்கணாயினு மென்றானு முரைக்க. முன்னின்ற பெயரெச்ச மூன்றும் நாஞ்சிலென்னும் நிலப்பெயர் கொண்டன. தன் பழமை தோன்றப் புகழ்ந்து கூறுவான், மூவரையும் பாடுமவாவை இன்னுமறியே னென்றதாகக் கொள்க.
விளக்கம்: விறல் கெழு மூவரென்றது, சேர சோழ பாண்டியர்களை. ஏணி - எல்லை; நளியிரு முந்நீ ரேணியாக (புறம். 35) என்புழிப்போல. அவாவறியேன் - பாட விரும்பி யறியேன். தமிழ்ச் சான்றோ ரனைவர்க்கும் தமிழ் மூவேந்தரைப் பாடுதற் கியல்பாகவே அவாவுண்டாகுமாயினும் யானொருவனே அவ்வாறு அவாவாதவன் என்பார், இன்னும் ஓர் யான் அவாவறியேன் என்றார். கண்ணன்ன மலர் எனப் பொதுப்படக் கூறினமையின், சிறப்புடைய மகளிர் கண்ணென்பது கொள்ளப்பட்டது. இப்போதுள்ள நாஞ்சில் நாட்டிலுள்ள மலைகளுள் நாஞ்சில்மலையின்ன தெனத் தெரிந்திலது. பூத்தல் வினை மலர்க்குரித்தாயினும், நீரின் வினையாகக் கூறப்படுதலின், மலரின் வினை அதற்கிடமாகிய நீர்மேலேறி நின்றதென்றார். நிலப்பெயர். இடப்பெயர் விறல்கெழு வேந்தர் மூவரையும் அறியேன். நீயே யான் முன்னறியு மோன் என்றது, இவ்வாசிரியர்க்கு இவன்பாலுள்ள பழமைத் தொடர்பு விளக்குவது காண்க. மணி, பளிங்கு மணி. பளிங்கு வகுத்தன்ன தீநீர் (புறம். 150) என்று பிறரும் கூறுதல் காண்க. ஒலிக்கும், பூக்கும், படரும் என்ற பெயரெச்சம் மூன்றும் நாஞ்சில் என்னும் இடப்பெயர் கொண்டன ஒலிக்கும், பூக்கும் என்பன, உம் உந்தாய் நின்றன. |