171. பிட்டங் கொற்றன்

     காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், பன்முறையும் பிட்டங்
கொற்றனைக்    காண்டற்குச் செவ்வி பெறாதிருந்து முடிவில் ஒருகால்
அச்செவ்வி பெற்று, தமது செவ்வி பெறாநிலையும் பெறுதலின் அருமையும்
தமது சுற்றத்தின் வறுமையும் விளங்க இனியதொரு பாட்டைப் பாடிய
செய்தியை     முன்பு    “நும்படை செல்லுங்காலை”(புறம். 169)
யென்றுதொடங்கும் பாட்டிற் கண்டோமன்றோ! அப் பாட்டின் நலத்தில்
ஈடுபட்ட பிட்டங்கொற்றன், ஒருமுறைக்குப் பன்முறை அவர்க்குப் பெரும்
பரிசில் நல்கினான். கண்ணனார்க்கு   அவனது    வண்மையின்பாலும்
அன்புடைமையின்பாலும் பெருமதிப்புண்டாயிற்று. அவற்றை யெடுத்தோதிப்
பாராட்டுதலின் அவர்க்கு விருப்பம் மிக வுண்டாயிற்று. அவரைச் சூழ்ந்திருந்
சான்றோர், “நீவிர் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் தூஞ்சிய நன்மாறன்,
குராப்பள்ளித்     துஞ்சிய    பெருந்திருமாவளவன்,     பாண்டியன்
வெள்ளியம்பலத்துத்    துஞ்சிய     பெருவழுதியாகிய     முடிவேந்தராற்
சிறப்பிக்கப்பெறும் பெரும் புலமையுடையீராதலின், நும்பால் இக்கொற்றனது
அன்பு  பெரிதாக இருக்கலாம்;  அவன்பால் நுமக்கு அன்பு பெரிதாக
லென்னையோ?”   வெனக்     கூறும்    கருத்தினராயினர்;    அதனை
யுணர்ந்துகொண்ட காரிக்கண்ணனார், இப்பாட்டின்கண், இக்கொற்றன் “யாம்
வேண்டியாங்கு எம் வறுங்கலம் நிறைப்போ”னாயினும், “பிறர்க்கும் அன்ன
அறத்தகையன்; அவன் உள்ளடி முள்ளும் நோவ உறாற்க; ஈவோர்
அரியராகிய இவ்வுலகின்கண், வாழ்வோர் வாழும் பொருட்டு அவன் தாள்
வாழ்க”என்று குறித்துரைக்கின்றார்.

 இன்று செலினுந் தருமே சிறுவரை
நின்று செலினுந் தருமே பின்னும்
முன்னே தந்தென னென்னாது துன்னி
வைகலுஞ் செலினும் பொய்யல னாகி
5யாம் வேண்டி யாங்கெம் வறுங்கல நிறைப்போன்
 தான்வேண்டி யாங்குத் தன்னிறை யுவப்ப
அருந்தொழின் முடியரோ திருந்துவேற் கொற்றன்
இனமலி கதச்சேக் களனொடு வேண்டினும்
களமலி நெல்லின் குப்பை வேண்டினும்
10அருங்கலங் களிற்றொடு வேண்டினும் பெருந்தகை
 பிறர்க்கு மன்ன வறத்தகை யன்னே
அன்ன னாகலி னெந்தை யுள்ளடி
முள்ளு நோவ வுறாற்க தில்ல
ஈவோ ரரியவிவ் வுலகத்து
15வாழ்வோர் வாழவவன் றாள்வா ழியவே.  (171)

     திணை: பாடாண்டிணை. துறை: இயன்மொழி அவனைக்
காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

     உரை: இன்று செலினும் தரும் - இன்று போகினும் தருவன்;
சிறு வரை நின்று செலினும் தரும் - சிறிதுநாட் கழித்துப் போகினும்
தருவன்; பின்னும் முன்னே தந்தனென் என்னாது - பின்னையும்
முன்னே தந்தே னென்னாது; துன்னி வைகலும் செலினும் - பயின்று
நாடோறும்     செல்லினும்; பொய்யலனாகி - பொய்யானாகி; யாம்
வேண்டினபடியே எம்முடைய வறிய கலத்தை நிரப்புவோன்; தான்
வேண்டியாங்கு - தான்  விரும்பினபடியே  தன் இறை உவப்ப -
தன்னுடைய அரசன் உவப்ப; அருந்தொழில் முடியரோ - செய்தற்கரிய
போர்த்    தொழில்களை முடிப்பானாக; திருந்து வேல் கொற்றன் -
திருந்திய வேலையுடைய கொற்றன்; இனமலி கதச்சே களனொடு
வேண்டினும் - இனமாகிய மிக்க வெவ்விய சேக்களைத் தொழுவோடே
வேண்டினும்; களமலி நெல்லின் குப்பை வேண்டினும் -
களத்தின்கண் மலிந்த நெல்லின் குவையை வேண்டினும்; அருங்
கலம் களிற்றொடு வேண்டினும் - பெறுதற்கரிய  அணிகலங்களைக்
களிற்றுடனே  வேண்டினும்;  பெருந் தகை - பெரிய தகைமையை
யுடையான்; பிறர்க்கும் அன்ன அறத் தகையன் - பிறர்க்கும்
அத்தன்மைய அறஞ்செய்யும்    கூற்றையுடையான்;    அன்னன்
ஆதலின் - அத்தன்மையனாதலால்; எந்தை உள்ளடி முள்ளும் நோவ
உறாற்கதில் - எம்முடைய இறைவனது உள்ளடிக்கண் முள்ளும்
உளப்பட நோவச் சென்று உறா தொழியவேண்டும்; ஈவோர் அரிய
இவ்வுலகத்து - ஈவோர் அரிதாகிய இவ் வுலகத்தின்கண்; வாழ்வோர்
வாழ - உயிர் வாழ்வோர் வாழும் பரிசு; அவன் தாள் வாழிய -
அவனது தாள் வாழ்வதாக எ-று.

     பிறர்க்கும்  என்பது  எச்சம்.   தில்:   விழைவின்கண்  வந்தது,
திருந்துவேற்கொற்றன், பெருந்தகை, சேக்களனொடு வேண்டினும் நெல்லின்
குப்பை வேண்டினும், அருங் கலம் களிற்றொடு வேண்டினும், நமக்கே
யன்றிப் பிறர்க்கும் அத்தன்மைய அறஞ்செய்யும் தகுதியை யுடையன்; யாம்
வேண்டியாங்கு எம் வறுங் கலம் நிறைப்போன்; தான் வேண்டியாங்குத் தன்
இறை யுவப்ப, அருந்தொழில் முடிப்பானாக வேண்டுவது; எந்தை உள்ளடி
முள்ளும் நோவ வுறாற்க; வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவெனக்
கூட்டுக. வாழ்வோர் வாழ்வு என்றோதி, வாழ்வோர் வாழும் வாழ்வெல்லாம்
அவன் தாள் வாழ்க வென் றுரைப்பினு மமையும். தாளை முயற்சி
யெனினுமமையும்.

      விளக்கம்: துன்னியிருந்து வைகலும் சென்றாலும் பொய்த்தல் இலன்
என்றவிடத்து துன்னுதல் பயிலுதல் குறித்து நின்றது. பலகாலும் பயின்றார்க்
கன்றித் துன்னியிருத்தல்  அமையா தென்க. யாம் வேண்டுமாறே எமக்கு
அளிப்பன், தான்  வேண்டியவாறே  தான்  மேற்கொள்ளும் அரிய
தொழில்களைச் செய்தல் வேண்டும் என்றும், அவ்வருந்தொழில் அவன்
வேந்தர்க்கும் உவப்பினை யளித்தல் வேண்டுமென்றும் கூறினார். அருந்தொழில்
முடித்தலின்   பயன்  அவன் வேந்தனது உவப்பைப் பெறுதலாதலின், “தன்
இறையுவப்ப”என்றார். இன்று இவன்பால் இருந்து பலகாலும் பெறும் நமக்கே
யன்றி, ஓரொருகாற் போந்து வேண்டும் பிற பரிசிலர்க்கும் இவ்வண்ணமே
நல்குவனென்றற்குப் “பிறர்க்கு மன்ன அறத்தகையன்”என்றார். பிறர்க்கு மென்ற
உம்மை நம்மையு மெனத் தழுவி நிற்றலின், எச்சவும்மையாயிற்று. ஏர்க் களம்
பாடுவோர்க்கு “இனமலி கதச்சேக் களனொடு”தருதலும், நெல்லின் குப்பை
தருதலும், போர்க்களம் பாடுவோர்க்கு அருங் கலம் களிற்றொடு நல்குதலும் பற்றி,
இவற்றைப் பகுத்துக் கூறினார். அவனுக்குச்  சிறு  தீங்கும்  வரலாகாதென மிக்க
ஆர்வத்தோடு வாழ்த்துகின்றாராகலின், “எந்தை யுள்ளடி முள்ளும் நோவ
வுறாற்கதில்ல”  என்றார். செல்வர்  பலராகிய  வழியும்   ஈதன்
மனப்பான்மையுடையார் மிகச் சிலரே யாதலால், “ஈவோ ரரிய இவ்வுலகத்”
தென்றும், வாழ்வோர் இனிது உயிர் வாழ்வதற்கு இவனது தோளாண்மையும்
தாளாண்மையும் கரணும் ஆக்கமுமா மென்பார், “வாழ்வோர் வாழ அவன்
தாள் வாழியவே”என்றும் கூறினார். இனி, வாழ்வோர் வாழ்வெல்லாம்
இவன்  வாழ்க என உரைப்பினும் அமையு மென்றார்.