19. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற
நெடுஞ்செழியன்

    ஆசிரியர் குடபுலவியனார்,இந் நெடுஞ்செழியன் தலையாலங் கானத்துச்
செருவென்று வந்திருக்க அவனைக் காண்பது கருதி வந்தார். அவரையும்
அவன் அன்போடு வர வேற்றுக்   தழீஇக்   கொண்டான்.   அவனால்
தழுவப்பட்ட இச் சான்றோர் அவனது பேரன்பை வியந்து,  “செழிய, நின்
மார்பு புலியைப் படுப்பது குறித்து வேட்டுவன் கல்லிடத்தே சேர்த்திய
அடாரையும் ஒக்குமென்று கருதிப் புல்லினேன்;    எம்  போல்வார்க்கு
இன்பமும் பகைவர்க்குத் துன்பமும் பயப்பது நின் மார்பு” என்று பாராட்டி,
அவனது போர்ச் செயலைச் சிறப்பித்துரைகின்றார்.

 இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கைத்
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து
மன்னுயிர்ப் பன்மையுங் கூற்றத் தொருமையும்
நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய
5.இரும்புலி வேட்டுவன் பொறியறிந்து மாட்டிய
 பெருங்கல் லடாரும் போன்மென விரும்பி
முயங்கினெ னல்லனோ யானே மயங்கிக்
குன்றத் திறுத்த குரீ இயினம் போல
அம்புசென் றிறுத்த வரும்புண் யானைத்
10.தூம்புடைத் தடக்கை வாயொடு துமிந்து
  நாஞ்சி லொப்ப நிலமிசைப் புரள
எறிந்துகளம் படுத்த வேந்துவாள் வலத்தர்
எந்தையொடு கிடந்தோரெம் புன்றலைப் புதல்வர்
இன்ன விறலு முளகொ னமக்கென
15. மூதிற் பெண்டிர் கசிந்தழ நாணிக்
  கூற்றுக்கண் ணோடிய வெருவரு பறந்தலை
எழுவர் நல்வலங் கடந்தோய்நின்
கழூஉவிளங் காரங் கவைஇய மார்பே. (19)

     திணை : வாகை; துறை: அரசவாகை. அவனை அவர் பாடியது.

     உரை : இமிழ்   கடல்  வளைஇய -  ஒலிக்கும்  கடலாற்
சூழப்பட்ட; ஈண்டு அகன் கிடக்கை - அணுச் செறிந்த அகன்ற
உலகத்துக்கண்; தமிழ்
தலை மயங்கிய தலையாலங் கானத்து -
தமிழ்ப்  படை கைகலந்த தலையாலங்கானத்துக்கண்; மன்னுயிர்ப்
பன்மையும் - நிலைபெற்ற உயிரினது பன்மையையும்; கூற்றத்
தொருமையும் -  அவ்வுயிரைக் கொள்ளும் கூற்றினது
ஒருமையையும்; நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய -
நின்னுடனே சீர்தூக்கிக் காட்டிய வென்றி வேலையுடைய செழிய;
இரும் புலி வேட்டுவன் பொறி யறிந்து மாட்டிய - பெரும்
புலியைப் படுக்கும்  வேட்டுவன்  எந்திர  மறிந்து  கொளுத்திய;
பெருங்கல் அடாரும் போன்ம் - பெரிய கல்லையுடைய அடாரையும்
போலும்; என விரும்பி - என்று விரும்பி; முயங்கினென் அல்லனோ
யானே - புல்லினேனல்லனோ யான்; மயங்கிக் குன்றத் திறுத்த குரீஇ
யினம் போல - கலங்கி மலைக்கண்ணே தங்கிய குருவியினம் போல;
அம்பு சென்று இறுத்த அரும் புண்யானை - அம்பு சென்று தைத்த
பொறுத்தற்கரிய புண்ணையுடைய யானையினது; தூம்புடைத் தடக்கை
வாயொடு துமிந்து - துளையையுடைய பெருங்கை வாயுடனே துணிந்து
வீழ்ந்து; நாஞ்சில் ஒப்ப - கலப்பையை யொப்ப; நிலமிசைப் புரள -
நிலத்தின்மேலே  புரள;  எறிந்து   களம்   படுத்த -   வெட்டிப்
போர்க்களத்தின் கண்ணே வீழ்த; ஏந்து வாள் வலத்தர் - ஏந்திய
வாள் வெற்றியை யுடையோராய்; எந்தையொடு கிடந்தோர் எம்ம புன்
தலைப் புதல்வர் - எம் தலைவனொடு கிடந்தார் எம்முடைய புல்லிய
தலையையுடைய  மைந்தர்;  இன்ன  விறலும்  உளகொல் நமக்கு -
இப்பெற்றிப்பட்ட வென்றியும்   உளவோ  நமக்கு;  என - என்று
சொல்லி; மூதில் பெண்டிர் கசிந்தழி - முதிய மறக்குடியிற் பிறந்த
பெண்டிர் இன்புற்று உவகையால் அழ; நாணி - அது கண்டு நாணி;
கூற்றுக் கண்ணோடிய - கூற்றம் இரங்கிய; வெருவரு பறந்தலை -
அஞ்சத்தக்க போர்க்களத்தின்கண்ணே; எழுவர் நல்வலங் கடந்தோய்
- இரு பெரு வேந்தரும் ஐம்பெரு வேளிருமாகிய எழுவரது நல்ல
வலியை வென்றோய்; நின் கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பு -
நினது கழுவி விளங்கின முத்தாரம் அகத்திட்ட மார்பை எ-று.

     தமிழ் தலை மயங்கிய வென்புழித் தலை: அசைநிலை; இடமுமாம்.
செழிய, கடந்தோய், நின் மார்பை யான் விரும்பி முயங்கினெ னல்லனோ
வெனக் கூட்டுக. பெருங்கல் அடாருமென்ற வும்மை, எமக்கு விருப்பஞ்
செய்தலேயன்றி நின் பகைவர்க்கு வருத்தஞ் செய்தலான், நின் மார்பு
கல்லடாரும் போலுமென எச்சவும்மையாயிற்று; சிறப்பும்மையுமாம். மூதிற்
பெண்டிர் கசிதலால் நாணி யெனவும், அழுதலாற் கண்ணோடிய வெனவும்
நிரனிறையாகக் கொள்க. போர் முடிதலாற் போயின கூற்றை நாணியும்
கண்ணோடியும் போயிற்றுப் போலக் கூறியது ஓர் அணி கருதி நின்றது.
இனி, அம்பு தைத்த யானையை வெட்டிப் படுத்தல் மறத்திற் கிழிபென்று
பெண்டிர் இரங்கி யழுதலின், கூற்றுக் கண்டு நாணிக் கண்ணோடியதென்
றுரைப்பாரு முளர்.

     விளக்கம்: ஈண்டுதல்   செறிதல்   என்னும்   பொருளதாகலின்,
ஈண்டகன் கிடக்கை யென்பதற்கு அணுச் செறிந்த அகன்ற உலகம் என்று
கூறினார். அணு - மண். “மண் திணிந்த நிலனும்”  (புறம்.2)   என்பதன்
உரை காண்க. தமிழ்ப்படை, வென்றோர் படையும்  தோற்றோர் படையும்
தமிழகத்துப் படையாதலால், “தமிழ்ப்  படை”யென்றார். தலை   மயங்கிய
என்புழி, தலை, அசைநிலையாகக் கொண்டமையின், மயங்கிய என்பதற்குக்
கைகலந்த   என்றுரைத்தார்.  இனி, தமிழ்   தலையென்று    கொண்டு,
தமிழகத்திடத்தே மயங்கிய என்று பொருள்கொள்ளற்கும் இடமுண்மையின்,
“தலை, இடமுமாம்” என்றார். உயிர்கள் பல வாயினும் கூற்றொன்றே நின்று
அவை பலவற்றையும் உண்டலிற் சலியாமை போல,இப்பாண்டியன் ஒருவனே
நின்று  பகைவர்   பலரையும்    வெல்லது   அமையுமெனக்   கருதிப்
போருடற்றுகின்றான்  என்பது விளங்க, “நின்னொடு  தூக்கிய  செழிய”
என்றார். அடார்,  கருங்கற்   பாறைகளின்   இணைப்பு; கற்பலகையுமாம்.
பொறியறிந்து மாட்டிய பெருங்கல்  அடார் - மலை நாட்டவர் பாறைகள்
செறிந்த குன்றுகளில் முழைகள் கண்டு, அவற்றின் வாயிலில் கற்பலகையால்
கதவமைத்து, உள்ளே ஆடுகளைக் கட்டிப் புலிகளை அதனுட் புகுவித்து,
அவை ஆடுகளைத் தாக்கியவழி வாயிற் கதவாகிய கற்பலகை விரைய மூடிக்
கொள்ளுமாறு   பொறியமைத்து   வைப்பது.   இவ்வடார்,   புலியை
அகப்படுத்தற்கேயன்றி,   வெயில் காற்று மழை முதலியவற்றின் மறைதற்கு
இடமாய் வேட்டுவற்  கின்பம்  செய்யும்.  உம்மை, எச்சவும்மையாயிற்று.
பகைவரைப் படுக்கும்  ஆண்மைச் சிறப்பை  விளக்குதலால்,  சிறப்பும்மை
என்றலும் பொருந்தும் என்றற்குச் “சிறப்பும்மையுமாம்” என்றார்.புனத்திடத்தே
தங்கும்  குரீஇயினம்  மலையிடத்தே தங்குதற்குக் காரணம் இது வென்பார்,
“மயங்கி யென்றார்.  மலையிடத்துத்  தங்கிய  குரீஇயினம் போல வீரர்
மார்பிடத்தே  தங்கிய  அம்பு தோன்றும் என வறிக. “மயங்கி.....நமக்கு”
என்பது மூதில் மகளிர் கூற்று.  இறுத்தலாலுண்டாகிய புண்ணை, இறுத்த
புண்ணென்றார். மூதில் மகளிர்க்குத் துயர் தருவது மற மானங்களின்
இழப்பே தவிர உயிரிழப்பன்மையின்,கசிந்து அழ என்பதற்கு,“உவகையுற்றழ”
வென்றார். அணி, தற்குறிப்பேற்றம். மானமுடைய மறக்குடியிற் பிறந்தவர்
உணர்வில்லாத விலங்காகு மென்று கருதி யானையைக் கொல்வதும், பிறரால்
தாக்குண்டு மிச்சிற் பட்டாரெனப்  போர்ப்புண்  பட்ட  வீரரை   வெல்வதும்,
ஒத்த மாறுபாடு இல்லாதவரென்று நினைந்து தமக்கு இளையவரை வெல்வதும்,
தம்மின் மூத்தவரொடு பொருவது போர் நெறி யன்றென எண்ணி அவரை
வெல்வதும், மறத்திற்கு இழிபு என்று கருதுவர்; இதனை, “வீறின்மையின்
விலங்காமென மதவேழமு மெறியான், ஏறுண்டவர் நிகராயினும்
பிறர்மிச்சிலென் றெறியான், மாறன்மையின் மறம் வாடுமென் றிளையாரையும்
எறியான், ஆறன்மையின் முதியாரையு மெறியான் அயில் உழவன்”
(சீவக.2261) என்று சான்றோர் கூறுதல் காண்க. இதனாற்றான், இவ்வுரைகாரர்,
“அம்புதைத்த யானையை வெட்டிப் படுத்தல் மறத்திற் கிழிபென்று பெண்டிர்
இரங்கி யழுதலின் கூற்றுக் கண்டு நாணிக் கண்ணோடியதென் றுரைப்பாரு
முளர்” என்றார். “தானால் விலங்கால் தனித்தால் பிறன்வரைத்தால், யானை
யெறிதல் இளிவரவால் - யானை, ஒருகை யுடைய தெறிவலோ யானும், இருகை
சுமந்துவாழ் வேன்” (தொல். புறத்.5, நச்சி. மேற்.) என்பது ஈண்டு
நினைவுகூரத்தக்கது.