20. சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை ஆசிரியர் குறுங்கோழியூர் கிழார் இப்பாட்டின்கண் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் செங்கோலாட்சியின் செம்மையைப் புகழ்ந்து, செம்மலே, நீ அறம் துஞ்சும் செங்கோலையுடைய; அதனால் நின்னாட்டவர் புதுப்புள் வரினும் பழம்புள் போகினும் நடுக்கம் சிறிதும் இலராய் இன்பத்திலே திளைத்திருக்கின்றனர். அவர்கள் நின்செம்மைப் பண்பு கருதி நின்னுயிர்க்கு ஏதேனும் ஏதம் வருமோ வென எண்ணி அன்பால் அஞ்சியிருக்கின்றனர்காண் எனப் பாராட்டுகின்றார். | இருமுந்நீர்க் குட்டமும் வியன்ஞாலத் தகலமும் வளிவழங்கு திசையும் வறிதுநிலைஇய காயமும், என்றாங் | 5. | கவையளந் தறியினு மளத்தற் கரியை | | அறிவு மீரமும் பெருங்க ணோட்டமும் சோறுபடுக்குந் தீயொடு செஞ்ஞாயிற்றுத் தெறலல்லது பிறிதுதெற லறியார்நின் னிழல்வாழ் வோரே | 10. | திருவி லல்லது கொலைவில் லறியார் | | நாஞ்சி லல்லது படையு மறியார் திறனறி வயவரொடு தெவ்வர் தேயவப் பிறர்மண் ணுண்ணுஞ் செம்மனின் னாட்டு வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது | 15. | பகைவ ருண்ணா வருமண் ணினையே | | அம்புதுஞ்சுங் கடியரணால் அறந்துஞ்சுஞ் செங்கோலையே புதுப்புள் வரினும் பழம்புட் போகினும் விதுப்புற வறியா வேமக் காப்பினை | 20. | அனையை யாகன் மாறே | | மன்னுயி ரெல்லா நின்னஞ் சும்மே. (20) |
திணையும் துறையும் அவை. சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேர லிரும்பொறையைக் குறுங்கோழியூர் கிழார் பாடியது.
உரை: இரு முந்நீர்க் குட்டமும் - பெரிய கடலினது ஆழமும்; வியன் ஞாலத் தகலமும் - அகன்ற உலகத்துப் பரப்பும்; வளி வழங்கு திசையும் - காற்றியங்குந் திசையும்; வறிது நிலைஇய காயமும் - வடிவின்றி நிலைபெற்ற ஆகாயமும்; என்ற ஆங்கவை - என்று சொல்லப்படுமவற்றை;அளந்தறியினும்-வரையறுத்தறியினும்; அளத்தற் கரியை - வரையறுத்தற் கரியை; அறிவும் ஈரமும் பெருங் கண்ணோட்டமும் - அறிவும் அன்பும் மிக்க கண்ணோட்டமும்; சோறு படுக்கும் தீயோடு - ஆகலான் சோற்றையாக்கும் நெருப்புடனே; செஞ் ஞாயிற்றுத் தெறலல்லது பிறிது தெறல் அறியார்-செஞ்ஞாயிற்றினது வெம்மையல்லது வேறு வெம்மை யறியார்; நின் நிழல் வாழ்வோர் - நின் குடைநிழற்கண் வாழ்வோர்; திரு வில் அல்லது கொலை வில் அறியார் - இந்திரவில் லல்லது பகைவரது கொலைவில்லை யறியார்; நாஞ்சில் அல்லது படையும் அறியார் - கலப்பை யல்லது வேறு படைக்கலமும் அறியார்; திறன் அறி வயவரொடு தெவ்வர் தேய - போர் செய்யும் கூறுபாட்டை யறியும் வீரருடனே பகைவர் மாய; அப்பிறர் மண் உண்ணும் செம்மல் - அம்மாற்றாருடைய மண்ணைக் கொண்டுண்ணும் தலைவ; நின் காட்டு வயவுறு மகளிர் வேட்டுணின் அல்லது - நின்னுடைய நாட்டின்கண் வேட்கை நோயுற்ற பெண்டிர் விரும்பி உண்ணினல்லது; பகைவர் உண்ணா அருமண்ணினை - பகைவர் உண்ணப்படாத பெறுதற்கரிய மண்ணை யுடையை; அம்பு துஞ்சும் கடியரணால் - அம்பு தங்கும் காவலை யுடைய அரணுடனே; அறம் துஞ்சும் செங்கோலை - அறம் தங்கும் செவ்விய கோலையுடையை; புதுப்புள் வரினும் பழம் புள் போகினும் - புதுப்புள் வரினும் பழைய புள் அவ்விடத்தை விட்டுப் போகினும்; விதுப்புறவு அறியா ஏமக்காப்பினை - அவற்றால் நடுக்கமுறுத லறியாத சேமமாகிய காவலை யுடையை; அனையை யாகன்மாறு-அத்தன்மையையுடையையாதலான்; மன்னுயி ரெல்லாம் - உலகத்து நிலைபெற்ற உயிரெல்லாம்; நின் அஞ்சும்மே - தத்தம் காதலால் நினக்கு ஏதம் வருங்கொல் என்று அஞ்சும் எ-று.
அறிவும் ஈரமும் கண்ணோட்டமும் என்பன சினைவினைப் பாற்பட்டு அளத்தற் கரியை யென்னும் முதல்வினை கொண்டன.
விளக்கம்: ஆகாயம், முதற்குறைந்து காயமென நின்றது. அதன்கண் காற்றும் கிடையாதாதலால், வறிது நிலைஇய காயம் என்றார். இக்கால வான நூலாரும் இஃதுண்மை யென்பர். பெருங் கண்ணோட்டம் என்பதற்கு மிக்க கண்ணோட்ட மென்றார். நீரின் குட்டமும் நிலத்தின் அகலமும் காற்றின் திசையும் காயத்தின் வறுமையும் என்றதற்கேற்ப, இவன் பால் அறிவும், ஈரமும், பெருமையும், கண்ணோட்டமும் அளத்தற்கரியன என்று கூறல் பொருத்தமாகும். பெருங்கண்ணோட்டம் கழிகண்ணோட்டமன்று.பிறர் மண் உண்டலாவது பிறர் மண்ணைக் கொண்டல்லது உண்டி கொள்ளே னென்றிருந்து கொண்டபின் உண்டல்; வெவ்வரி நிலைஇய எயிலெறிந் தல்லது, உண்ணா தடுக்கிய பொழுது பலகழிய (பதிற்.68) என்று சான்றோர் கூறுதல் காண்க. புதுப்புள் வருதலும் பழம்புள் ஏகுதலும் தீ நிமித்தமாகக் கருதுபவாதலின், புதுப்புள் வரினும் பழம்புள் போகினும் என்றார். பெருங்காதலாற் பிணிக்கப்பட்டார் தம்முள் ஒருவரொருவர்க்கு யாது தீங்கு நேருமோ என்ற அச்சத்தால் அடிக்கடி வருத்தப்படுவராதலால், மன்னுயி ரெல்லாம் நின் அஞ்சும்மே என்றார். அஞ்சுதற்கேது ஆசிரியர் கூறாமையின், தத்தம் காதலால் என்ற உரையின்கண் பெய்து கூறினார். அறிவும் ஈரமும் கண்ணோட்டமும், அவற்றையுடைய சேரமானும் முறையே சினையும் முதலுமாதலின், சினையொடு முதற்கொற்றுமை யுண்மையால், நீ அறிவும் ஈரமும் காண்ணோட்டமும் அளத்தற் கரியை என்றார். அளத்தற்கருமை, அறிவு முதலாயவற்றிற் குரியவாகும். அஃது அளத்தற் கரியை நீ என முதன்மேல் நிற்பது காண்க. பகைவ ருண்ணா அரு மண்ணினை என்ற விடத்து, அருமை பெறற்கருமை குறித்து நின்றது. சூலுற்ற மகளிர் புளியும் மண்ணும் உண்பர் என்ப. அதனால், வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது பகைவ ருண்ணா அருமண்ணினையே என்று கூறுகின்றார். திறனறி வயவர் - போர் செய்யும் கூறுபாட்டை யறியும் வீரர். திறம் - கூறுபாடு. |