80. சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி

     இக்கிள்ளி, முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளியின் வேறுபடுத்தற்குச்
சான்றோரால் இவ்வாறு கூறப்பட்டான். இவன் பெயரில் போரவை யென்பது
போர்வை யெனக் காணப்படுவது ஏடுபெயர்த் தெழுதினோரால் நேர்ந்த பிழை.
இவன் தந்தை தித்தன் எனப்படுவன். அவன் செயலிடத்தே வெறுப்புற்ற இவன்
வேறோர் ஊரில் வாழ்ந்துவந்தான். இவன் கட்டிளமையும் போர் வன்மையும்
உடையன். ஒருகால், இவன் முக்காவல் நாட்டு ஆமூர் சென்று, அங்கே
மல்லன் ஒருவனை மற்போரில் வென்று மேம்பட்டான். இவனுடைய ஆண்மை
அழகு முதலிய பண்புகளில் பேரீடுபாடுற்ற நக்கண்ணையார் என்பார்
இவன்பாற் பெருங்காதல் கொண்டார். அவர் அக்கிள்ளி சென்று தங்கிய
ஆமூரில் இருந்தவர். பெருங்கோழி நாய்கன் என்பாற்கு மகளாராவர்;
நல்லிசைப் புலமையும் வாய்ந்தவர். அவர்க்குக் காதல் பெரிதாயிருந்ததேயன்றி,
அவன் அவர்பாற் காதல் கொண்டொழுகிய குறிப்பொன்றும் கிடைத்திலது.
பின்னர் இவன் எவ்வாறு முடி வேந்த னாயினன் என்றும், நக்கண்ணையார்
என்னாயின ரென்றும் தெரிந்தில.

     போரவைக் கோப்பெருநற்கிள்ளி முக்காவல் நாட்டு ஆமூர்
மல்லனொடு பொருது வென்று நின்ற காலத்துச் சாத்தந்தையார் என்னும்
சான்றோர் உடனிருந்து நேரிற் கண்டார். அக்காட்சி அவருள்ளத்தைக்
கவர்ந்தமையின், இப்பாட்டின்கண் அம் மற்போரை விரித்துரைக்கின்றார்.

சாத்தந்தையார் என்பது சாத்தன் தந்தையார் எனப் பொருள்படுமாயின்
ஈண்டு இயற்பெயராகவே யுளது. சாத்தன் தந்தை யென்பது பொருளாயின்,
இவரது இயற்பெயர் கூறப்படவேண்டும். இவர் இக்கிள்ளியின்பால் இளமை
தொட்டே பேரன்பும் பெருமதிப்பும் கொண்டவர். பெருநற்கிள்ளி தந்தையை
வெறுத்து முக்காவல் நாட்டு ஆமூரையடைந்திருக்கையில் தாமும் உடனிருந்து
இவன் செயல்களைக் குறித்துக் கொண்டுள்ளார். ஆமூர் மல்லனை வென்றதும்,
பிற போர்களில் வீரரை வென்றதும் இவனது போர்த் திறமும் இவரால் விரியக்
கூறப்பட்டுள்ளன. போரில் மடியும் மள்ளர் உம்பருலகில் அமர மகளிரை
மணப்பர் என்று இவர் கூறுகின்றார். அம்பு தைப்பினும், வேல் பிறழினும்,
யானைக்கோட்டு நுதி மடுத் தூன்றினும் அடிபெயர்த்தோடாமை
பீடுடையாளர்க்குச் சிறப்பெனக் கருதுவர்.

இன்கடுங் கள்ளி னாமூ ராங்கண்
மைந்துடை மல்லன் மதவலி முருக்கி
ஒருகால் மார்பொதுங் கின்றே யொருகால்
வருதார் தாங்கிப் பின்னொதுங் கின்றே
5.நல்கினு நல்கா னாயினும் வெல்போர்ப்
போரருந் தித்தன் காண்கதி லம்ம
பசித்துப்பணை முயலும் யானை போல
இருதலை யொசிய வெற்றிக்
களம்புகு மல்லற் கடந்தடு நிலையே

     திணை: தும்பை: துறை: எருமை மறம். சோழன் போரவைக்
கோப்பெருநற்கிள்ளி முக்காவல் நாட்டு ஆமூர் மல்லனைப் பொருது
அட்டு நின்றானைச் சாத்தந்தையார் பாடியது.


     உரை: இன் கடுங் கள்ளின் ஆமூ ராங்கண் - இனிய அழன்ற
கள்ளினையுடைய ஆமூரிடத்து; மைந்துடை மல்லன் மதவலி முருக்கி -
வலியையுடைய மல்லனது மிக்க வலியைக் கெடுத்து; ஒருகால் மார்பு
ஒதுங்கின்று - ஒருகால் மண்டியாக மார்பிலே மடித்து வைத்து; ஒருகால்
வருதார் தாங்கி - ஒருகால் அவன் செய்கின்ற உபாயத்தை விலக்கி;
பின் ஒதுங்கின்று - முதுகின்கண் வளைத்து; பசித்துப் பணை முயலும்
யானை போல - பசித்து மூங்கிலைத் தின்றற்கு முயலும் யானையை
யொப்ப; இருதலை ஒசிய எற்றி - தலையுங் காலுமாகிய இரண்டிடமும்
முறிய மோதி; களம்புகு மல்லன் கடந் தடு நிலை - அக்களத்தின்கட்
புக்க அம் மல்லனை எதிர்ந்து நின்று கொன்ற நிலையை; நல்கினும்
நல்கா னாயினும் - கண்டால் உவப்பினும் உவவானாயினும்;
வெல்போர்ப் போர் அருந் தித்தன் காண்க - இவன் தந்தையாகிய
வெல்லும் போரினையுடைய பொருதற்கரிய தித்தன் காண்பானாக எ-று.


     என்றது, தந்தையுடன் வெறுத்துப் போந்தான் அமருட் புகுந்து,
இப்போர் செய்தானை அவன் விரும்பின் உவக்கின்றான், விரும்பாவிடின்
அஞ்சுகின்றா னென்பதாம். “பணைமுயலும் யானை போல ஒரு தலை யொசிய
வொற்றி” என்று பாடமோதி, அம் மல்லன் முற்கூறாயினும் பிற்கூறாயினும்
ஒருதலை முறிய மோதி யென்றுரைப்பாரு முளர். தில்: விழைவின்கண் வந்தது.

     விளக்கம்: கடுங் கள், புளிப்பு மிகுதியால் களிப்புற்றுச் சீறிப் பொங்கும்
கள்; அதனையே “அழன்ற கள்” ளென்றார். தன்மேல் மண்டியாக
இருப்போனைத் தள்ளிக் கீழ்ப்படுத்தற்பொருட்டுச் செய்யப்படும் மற்போர்ச்
சூழ்ச்சி, “உபாயம்” எனப்பட்டது. பணை முயலும் - பணைக்கு முயலும் என
நான்கனுருபு விரிந்தது. பெற்ற தந்தை யாதலின், கண்டால் உவப்பெய்தா
தொழியான் என்ற கருத்தால் “நல்கினும்” என்றும், பெருநற்கிள்ளிபால்
கொண்ட வெறுப்பால் ஒருகால் உவவானாயினும் வன்மை கண்டு நெஞ்சில்
அஞ்சுவன் என்பது தோன்ற, “நல்கானாயினும்” என்றும் கூறினார்.