ஒருகால், அதியமானுடைய பகைவருள் ஒருவன் ஒளவையாரைக்
கண்டு, நுங்கள் நாட்டில் சிறந்த போரைச் செய்வோர் உளரோ?என
வினவினன். இரப்போர்க் கீயும் இசைநலமுடையோரைப் பாடிப் பரிசில்
பெறும் பாண்மகள் போலச் செல்லும் ஒளவையார், அது கேட்டுச் சிறிதும்
மனமஞ்சாராய்ப் பெருமிதத்துடன், எங்கள் நாட்டில் எறியும்
கோலுக்கஞ்சாது அதனை ஓச்சுந்தோறும் உடன்றெழும் பாம்பு போலச்
சீறி யெழும் வீரர் பலர் உளர், அன்றியும்; மன்றின்கண் கட்டப்பட்டிருக்கும்
போர்ப்பறை காற்றாலசைந்து இசைக்குமாயின், போர் வந்து விட்டது
போலும் என்று பொருக்கென எழும் தலைவனும் உளன் காண்என்று
இப்பாட்டாற் கூறுகின்றார்.
| இழையணிப் பொலிந்த வேந்துகோட் டல்குல் மடவர லுண்கண் வாணுதல் விறலி பொருநரு முளரோநும் மகன்றலை நாட்டென வினவ லானாப் பொருபடை வேந்தே |
5 | எறிகோ லஞ்சா வரவி னன்ன சிறுவன் மள்ளரு முளரே யதாஅன்று பொதுவிற் றூங்கும் விசியுறு தண்ணுமை வளிபொரு தெண்கண் கேட்பின் அதுபோ ரென்னு மென்னையு முளனே. (89) |
திணையும் துறையும் அவை. அவனை அவர் பாடியது. உரை: இழை யணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்
- மணிக் கோவையாகிய அணியாற் பொலிந்த ஏந்திய
பக்கத்தினையுடைய அல்குலினையும்; மடவரல் - மடப்பத்தினையும்;
உண்கண் - மையுண்ட கண்ணினையும்; வாள் நுதல் விறலி - ஒளி
தங்கிய நுதலினையுமுடைய விறலி; பொருநரும் உளரோ நும்
அகன்றலை நாட்டென - என்னொடு பொருவாரு முளரோ
நும்முடைய பெரிய இடத்தினையுடைய நாட்டின்கண் என; வினவல்
ஆனாப் பொரு படை வேந்தே - என்னைக் கேட்ட லமையாத
செருச் செய்யுந் தானையையுடைய வேந்தே; எறி கோல் அஞ்சா
அரவின் அன்ன சிறு வன் மள்ளரும் உளர் - நீ போர் செய்யக்
கருதுவை யாயின் எம்முடைய நாட்டின் கண்ணே அடிக்கும்
கோலுக்கு அஞ்சாது எதிர் மண்டும் பாம்பு போன்ற இளைய வலிய
வீரரும் உளர்; அதா அன்று - அதுவே யன்றி; பொதுவில் தூங்கும்
விசியுறு தண்ணுமை - மன்றின்கண் தூங்கும் பிணிப்புற்ற முழவினது;
வளி பொரு தெண்கண் கேட்பின் - காற்றெறிந்த தெளிந்த
ஓசையையுடைய கண்ணின்கண் ஒலியைக் கேட்பின்; அது போர்
என்னும் என்னையும் உளன் - அது போர்ப்பறை யென்று மகிழும்
என்னுடைய தலைவனும் உளன் எ-று.
தெண்கண் என்றது அதன்கண் ஓசையை. போரென்றது போர்ப்
பறையை.
விளக்கம்: மணிக் கோவை, மணிமேகலை. கோடு, பக்கம்.
மடவரல் - மடப்பம்; மடவரல் அரிவை(குறுந். 321) என்றாற்போல.
பொரு படை - போரைச் செய்யும் படை; அஃது ஈண்டுத் தானைமேல்
நின்றது. தெண்கண் என்பது ஆகுபெயராய் ஒலியைக் குறித்தது. யானையின்
மணியோசையைச் சேய்மையிற் கேட்போன் இஃது யானை என்பது போல,
முழவோசை காற்றால் உண்டாகக் கேட்பின், அது போர்என்பன
என்றவாறாம்.