160. குமணன் தன்பாற் போந்த பெருஞ்சித்திரனார் வறுமையால் வாடிய மேனியும் தளர்ந்த நடையு முடையரா யிருப்பதைக் கண்ட பெருவள்ளலாகிய குமணன், அவரை அவர் வேண்டியவாறு விரைந்து பரிசில் தந்து விடாது, சின்னாள் தன்பால் இருத்தி நல்லுணவு தந்து, உடல் வளம் பெறச் செய்து பின்பு விடுத்தல் வேண்டும் எனக் கருதிக் கருதியவாறே சின்னாள் இருப்பித்தான். இருந்தவர், அவன் தந்த இனிய உணவுண்டு ஓரளவு உடல் வளம் பெற்றாராயினும் வறுமைத் துயர் உழக்கும் தன் மனைவி மக்களையும் ஒக்கலையும் நினைந்து வருந்தத் தொடங்கினார். ஒருகால் அவ் வருத்தம் கைகடந்து ஒரு பாட்டாய் வெளி வந்தது. அஃது இப் பாட்டு.
இப் பாட்டின்கண் அவர் குமணனது வள்ளன்மையைச் சான்றோர் தமக்குத் தெரிவித்து, அவன்பால் தம்மை ஆற்றுப்படுத்தும், அதனால் தாம் அவன்பாற் போந்ததும் விளங்கக் கூறியுள்ளார். மேலும், வறுமையால் அல்லலுற் றுழக்கும் மனைவியின் துன்பதையும், அம் மனைவியார் தம் மக்கட்குப் பசிநோய் தெரியாவாறு மறப்புலி யுரைத்தும் மதியங்காட்டியும் கணவனது பொடிந்த முகச்செவ்வி காட்டுமாறு வினவியும் இனிய சொல்லாட்டால் இன்புறுத்துவதும் பிறவும் நெஞ்சுருக நினைந்து கூறுகின்றார். முடிவில், இத்துணைத் துன்பமுறினும், இல்லானை இல்லாளும் வேண்டாள் என்பதை மறுத்தொழுகும் மனைமாண்புடைய மனையாட்டியார் மனமகிழுமாறு தமக்குச் செல்லாச் செல்வம்மிகத் தந்து விரைய விடை தருதல் வேண்டுமென வேண்டுகின்றார். | உருகெழு ஞாயிற் றொண்கதிர் மிசைந்த முளிபுற் கானங் குழைப்பக் கல்லென அதிர்குர லேறொடு துளிசொரிந் தாங்குப் பசிதினத் திரங்கிய கசிவுடை யாக்கை | 5 | அவிழ்புகு வறியா தாகலின் வாடிய | | நெறிகொள் வரிக்குடர் குளிப்பத் தண்ணெனக் குய்கொள் கொழுந்துவை நெய்யுடை யடிசில் மதிசேர் நாண்மீன் போல நவின்ற சிறுபொ னன்கலஞ் சுற்ற விரீஇக் | 10 | கேடின் றாக பாடுநர் கடும்பென | | அரிதுபெறு பொலங்கல மெளிதினின் வீசி நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன் மட்டோர் மறுகின் முதிரத் தோனே செல்குவை யாயி னல்குவன் பெரிதெனப் | 15 | பல்புகழ் நுவலுநர் கூற வல்விரைந் | | துள்ளந் துரப்ப வந்தனெ னெள்ளுற் றில்லுணாத் துறத்தலி னின்மறந் துறையும் புல்லுளைக் குடுமிப் புதல்வன் பன்மாண் பாலில் வறுமுலை சுவைத்தனன் பெறாஅன் | 20 | கூழுஞ் சோறுங் கடைஇ யூழின் | | உள்ளில் வறுங்கலந் திறந்தழக் கண்டு மறப்புலி யுரைத்து மதியங் காட்டியும் நொந்தன ளாகி நுந்தையை யுள்ளிப் பொடிந்தநின் செவ்வி காட்டெனப் பலவும் | 25 | வினவ லானா ளாகி நனவின் | | அல்ல லுழப்போண் மல்லல் சிறப்பச் செல்லாச் செல்வ மிகுத்தனை வல்லே விடுதல் வேண்டுவ லத்தை படுதிரை நீர்சூழ் நிலவரை யுயரநின் | 30 | சீர்கெழு விழுப்புக ழேத்துகம் பலவே. (160) |
திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது, உரை: உரு கெழு ஞாயிற்று ஒண் கதிர் மிசைந்த - உட்குப் பொருந்திய ஞாயிற்றினது ஒள்ளிய சுடர் தின்னப்பட்ட; முளி புல் கானம் குழைப்ப - முளிந்த புல்லையுடைய காடு தளிர்ப்ப; கல்லென அதிர் குரல் ஏயொடு துளிசொரிந் தாங்கு - கல்லென ஓசையுண்டாக நடுக்கத்தைச் செய்யும் ஓசையையுடைய உரு மேற்றுடனே கூடித் துளியைப் பொழிந்தாற்போல; பசி தினத்திரங்கிய கசிவுடை யாக்கை - பசி தின்னப்பட்டு உலர்ந்த வேர்ப்புடைய உடம்பு; அவிர் புகுவு அறியாதாகலின் - அவிழ் புகுவதறியாதாகலால்; வாடிய நெறி கொள் வரிக் குடர் குளிப்ப - வாட்டமுற்ற முடக்கங்கொண்ட வல வரியையுடைய குடர் தன் கண்ணே மூழ்கும் பரிசு குளிர; குய் கொள் கொழுந்துவை நெய்யுடை அடிசில் - தாளிப்புச் சேரப்பட்ட கொழுவிய துவையோடு கூடிய நெய்யுடைய அடிசிலை; மதி சேர் நாண் மீன் போல - திங்களைச் சேர்ந்த நாளாகிய மீனை யொப்ப; நவின்ற சிறுபொன் நன்கலம் சுற்ற இரீஇ - பயின்ற பொன்னாற் செய்யப்பட்ட சிறிய நல்ல கலங்களைச் சூழ வைத்திருத்தி யூட்டி; கேடின்றாக பாடுநர் கடும் பென - கேடு இல்லையாகப் பாடுவாரது சுற்றம் எனச் சொல்லி; அரிது பெறு பொலங்கலம் எளிதினின் வீசி - பெறுதற்கரிய பொன்னாற் செய்யப்பட்ட அணிகலங்களை யெளிதாக வழங்கி; நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன் - தன்னுடைய நட்டோரினும் எம்மோடு நட்புச் செய்த நல்ல புகழையுடைய குமணன்; மட்டார் மறுகின் முதிரத்தோன் - மது நிறைந்த தெருவினையுடைய குமணன்; மாட்டார் மறுகின் முதிரத்தோன் - மது நிறைந்த தெருவினையுடைய முதிரமென்னும் மலையிடத்தான்; செல்குவை யாயின் பெரிது நல்குவன் என - நீ அவன்பாற் செல்வையாயின் நினக்கு மிகவுந் தருவ னென; பல் புகழ் நுவலுநர் கூற - நினது பல புகழையும் சொல்லுவார் சொல்ல; வல் விரைந்து உள்ளம் துரப்ப வந்தனென் - அதுகேட்டுக் கடிதாக விரைந்து எனது உள்ளம் செலுத்துதலான் வந்தேன்; இல் உணா துறத்தலின் - எனது மனை உண்ணப்படுவனவற்றைக் கைவிடுதலான்; எள்ளுற்று இல் மறந்து உறையும் - அம் மனையை யிகழ்ந்து நினையாது உறைகின்ற; புல்லுளைக் குடுமிப் புதல்வன் - புல்லிய உளைமயிர்போலும் குடுமியை யுடைய புதல்வன்; பன் மாண் பாலில் வறுமுலை சுவைத்தனன் பெறாஅன் - பல படியும் பாலில்லாத வறுவிய முலையைச் சுவைத்துப் பால் பெறானாய்; கூழும் சோறும் கடைஇ - கூழையும் சோற்றையும் வேண்டி முடுகி; ஊழின் - முறை முறையே; உள்ளில் வறுங்கலம் திறந்து அழக்கண்டு - உள்ளொன்றில்லாத வறிய அடுகலத்தைத் திறந்து - அங்கு ஒன்றும் காணாது அழ அதனைப் பார்த்து; மறப் புலி உரைத்தும் - மறத்தையுடைய புலியை வரவு சொல்லி அச்ச முறுத்தியும்;மதியங காட்டியும் - அம்புலியைக் காட்டியும்; நொந்தன ளாகி - அவற்றால் தணிக்க அருமையின் வருந்தினளாய்; நுந்தையை உள்ளிப் பொடிந்த நின் செவ்வி காட்டு என - நின் பிதாவை நினைந்து வெறுத்தநின் செவ்வியைக் காட்டெனச் சொல்லி; வினவலானாளாகிப் பலவும் நனவின் அல்லல் உழப்போள் - கேட்டல் அமயாளாய் மிகுதிப்பட நனவின் கண்ணும் துயர முறுவோள்; மல்லல் சிறப்ப - வளப்பம் மிக; செல்லாச் செல்வம் மிகுத்தனை வல்லே விடுதல் வேண்டுவல் - தொலையாத செல்வத்தை மிகுத்தனையாய் விரையப் பரிசில் தந்து விடுத்தலை விரும்புவேன் யான்; படு திரை நீர் சூழ நிலவரை உயர ஒலிக்குந் திரையையுடைய நீராற் சூழப்பட்ட நிலவெல்லையிலே ஓங்க; நின் சீர் கெழு விழுப் புகழ் பல ஏத்துகம் -நினது சீர்மை பொருந்திய சிறந்த புகழைப் பலவாக வாழ்த்துவேம் எ-று.
அத்தை: அசைநிலை. நன்கலம் இரீஇ அடிசிலைக் குடர் குளிப்பத் தண்ணென ஊட்டி யென்க. ஊட்டி யென்க. ஊட்டி யென ஒருசொல் தரப்பட்டது. நட்டோர் நட்டவென்பதற்கு நட்டோரை நாட்டிய வெனினு மமையும். சொல்லாச் செல்வ மீத்தனையென்பதூஉம், நிலவரை யுணர என்பதூஉம் பாடம்.
விளக்கம்: கருவி வானம் தலைஇ யாங்கும்(புறம்.159) என்றும், இப்பாட்டில் கல்லென அதிர்குர லேறொடு துளிசொரிந் தாங்குஎன்றும் மழை முகிலை யுவமம் கூறினார். மேகம் கடற்குச் சேறலும் நீர் பருகுதலும், கொணர்ந்து வெம்பிய கானம் குழைப்பப் பெய்வதும் அதற்குக் கடன் என்றும், காரெதிர் கானத்துக்கு அந்நீரை யுண்டு தழைத்தல் முறை யென்றும் காட்டி அவ்வாறே, பொருள்வினைவயிற் பிரிந்து சேறலும், பொருள் கொணர்ந் தீட்டலும், வறுமையால் வாடுவார் தழைப்ப வழங்கலும் கடன் என்றும், இரவலர் அக் கொடையேற்று இயலும் இசையும் கூத்துமாகிய தமிழ் தழைப்ப வாழ்தல் முறையென்றும் சுட்டியவாறாம். புலவரால் இயலும், பாணரால் இசையும், கூத்தரால் கூத்தும் தழைப்பனவாம். குமணன் தன்னைப் பேணும் நலத்தை நேரிற் கூறலாகாமையின், பிற சான்றோர் தமக்குரைத்தவாறே அவர் கூற்றைக் கொண்டு கூறுவார் போல விரித்துக் கூறி, அதுவே ஏதுவாகத் தாம் வந்த வரலாறு கூறினார். பின்பு விடைபெறக் கருதுகின்றாராதலின், மனைவியின் துன்பநிலைகூறி வல்லே விடுத்தல் வேண்டும்என்று வேண்டினார். தம் புதல்வன் பசையற்றுத் திரிதற்கு ஏது கூறுவார், இல் உணாத் துறத்தலின் இல் மறந்துஉறைகின்றான் என்றார். இளஞ்சிறார் அழுகையை மறப்புலி காட்டல் முதலியவற்றால் தீர்க்குமாறு கூறினார். கனவில் வருந்தும் வருத்தம் அறியவாராமையின், நனவின் அல்லலுழப்போள்என்றார். |