183. பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாண்டியருள் நெடுஞ்செழியன் என்னும் பெயருடைய வேந்தர் பலர் இருந்திருத்தலின், அவரின் வேறுபடுத்தற்கு இவனைச் சான்றோர் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என இவனது வென்றிச்செயலை யெடுத்தோதிச் சிறப்பித்துள்ளனர். ஆரியப்படை யென்பது வடவாரிய நாட்டுப்படைவீரர்களையாகும். தென்குமரிக்குத் தெற்கிலிருந்த தமிழகம் கடல் கோட்படவே, பாண்டியரும் சோழரும் சேரரும் இடஞ் சிறிதென்னும் ஊக்கம்துரப்ப நிலம் வேண்டி வடபுலத்தே முன்னேறிச் சென்று கொண்டிருக்கையில், வடவாரியரும் தென்பகுதி நோக்கி வந்த வண்ணமிருந்தனர். அங்ஙனம் வருவாரைக் கற்சிறைபோலத் தாங்கி நிற்றலும், அடிவீழ்ந்து புகலடைத்தோரைப் பேணி யோம்புதலும் தமிழ் மூவேந்தருடைய செயல்களாயின. ஆதலாற்றான் பண்டைத் தமிழ் நூல்கள், தமிழ்க் கருத்துக்கள் பலவாகவும் வடவாரியக் கருத்துக்கள் சிலவாகவும் கொண்டுள்ளன. தமிழ்க் கருத்துக்களே நிறைந்திருந்த இலக்கணங்களும் இலக்கியங்களும் குறிக்கொண்டு தேடியழிக்கப்பட்டன. வடவாரியக் கருத்துக்கள் சிலவாகவாயினும் உடைய பழந்தமிழ் நூல்களே உளவாயின. இப்போதுள்ள சங்க இலக்கியங்கள் நூற்றுக்கு மூன்று விழுக்காடேனும் வடவாரியக் கருத்துக்களை யுடையவா யிருத்தலாற்றான் நிலை பேறு பெற்றன. அடைக்கலம் புக்கு உட்பகையாய்ப் புறத்தே வெளிப்படா தொழுகினோ ரொழிய, வெளிப்படையாய்ப் பொரவந்த ஆரியப்படையினை வஞ்சியாது பொருது வெற்றி கொண்ட மாண்பினால் இந்நெடுஞ்செழியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனாய்விளங்க லுற்றான். கோவலனைக் கொலைபுரிந்த பாண்டியன் நெடுஞ்செழியனையும் இளங்கோவடிகள், வடவாரியர் படை கடந்து, தென்றமிழ்நா டொருங்கு காணப், புரைதீர் கற்பின் தேவி தன்னுடன், அரைசுகட்டிலிற் றுஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன்என்பர்.
இவ்வேந்தனது நாடு நானிலத் தைந்திணை வளமும் பெருகவுடைய தாயினும், கல்வி வளம் பெறாதாயின், சீரழியு மென்பதைத் தெளிய வுணர்ந்தான். நாட்டுமக்கள் கல்வியறிவுடையராதல் வேண்டி, கல்வி வழங்கும் ஆசிரியனுக்கு உற்றவிடத் துதவுதல் வேண்டும்; வேண்டுமளவிற்கு மிகவே அவற்குப் பொருள் வழங்குதல் வேண்டும்; மிக்க பொருள் கொடுத்தவழியும் ஆசிரியனை வழிபடுதற்கு வெறுப்படைதலாகாது; இவ்வாறெல்லாம் செய்து கல்வி கற்பது நன்று எனத் தொடங்கி இப்பாட்டின்கண், கல்வியில்லாற்குத் தான் பிறந்த குடும்பத்திலே தன்னைப் பெற்ற தாயாலும் சிறப்பளிக்கப்படமாட்டாது என்றும், அவன் நாட்டு அரசு முறையும் கல்வியறிவுடையோனையே துணையாகக் கொள்ளுமே தவிரக் கல்லாதானை யேலாதென்றும், கற்றோன் கீழ்நிலையில் பிறந்தானாயினும், அவற்குத் தலைமை யுண்டாகும்; மேல்நிலையிற் பிறந்தோனும் அக்கீழ்ப்பிறந்தான் தலைமையிற்றான் அக் கல்விகுறித்து வழிபட்டொழுக வேண்டுமென்றும், இவ்வாற்றால் குடும்பமும் சமுதாயமும் அரசியலும் யாவையும் கல்வி நலத்தால் சிறப்படைதலால் கற்றல் நன்று என்றும் வற்புறுத்தியுள்ளான். | உற்றுழி யுதவியு முறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்ற னன்றே பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளும் சிறப்பின் பாலாற் றாயுமனந் திரியும் | 5 | ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் | | மூத்தோன் வருக வென்னா தவருள் அறிவுடை யோனா றரசுஞ் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும் கீழ்ப்பா லொருவன் கற்பின் | 10 | மேற்பா லொருவனு மவன்கட் படுமே. (183) |
திணையுந் துறையு மவை. பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாட்டு. உரை: உற்றுழி உதவியும் - தன் ஆசிரியருக்கு ஓர் ஊறு பாடு உற்றவிடத்து அது தீர்த்தற்கு உவந்து உதவியும்; உறுபொருள் கொடுத்தும் - மிக்க பொருளைக் கொடுத்தும்; பிற்றை நிலை முனியாது கற்றல் நன்று - வழிபாட்டு நிலைமையை வெறாது கற்றல் ஒருவருக்கு அழகிது; பிறப்பு ஓரன்ன உடன்வயிற்றுள்ளும் - அதற்கு என்னோ காரணமெனின், பிறப்பு ஒரு தன்மையாகிய ஒரு வயிற்றுப் பிறந்தோருள்ளும்; சிறப்பின் பாலால் - கல்வி விசேடத்தால்; தாயும் மனம் திரியும் - தாயும் மனம் வேறுபடும்; ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் - ஒரு குடியின் கட்பிறந்த பலருள்ளே; மூத்தோன் வருக என்னாது-; அவருள் அறிவுடையோன் ஆறு - அவருள் அறிவுடையோன் சென்ற நெறியே; அரசும் செல்லும் - அரசனும் செல்லும்; வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் வேறுபாடு தெரியப்பட்ட நாற்குலத்துள்ளும்; கீழ்ப்பால் ஒருவன் கற்பின் - கீழ்க்குலத்துள் ஒருவன் கற்பின்; மேற்பால் ஒருவனும் அவன்கட் படும்- மேற்குலத்துளொருவனும் இவன் கீழ்க்குலத்தானென்று பாராது கல்விப் பொருட்டு அவனிடத்தே சென்று வழிபடுவனாதலான் எ-று.
விளக்கம்: உற்றுழி யுதவுக என்றும், உறு பொருள் கொடுக்க என்றும் அறிவுறுத்தவன், பிற்றை நிலைமுனியாது கற்கஎன்றது, இவ்விரண்டும் செய்தவழித் தன்பால் உயர்வும் இவற்றைப் பெறும் ஆசிரியன்பால் தாழ்வும் உண்டாதலால் அவ்வுயர்வுவழித் தோன்றும் மானம் ஆசிரியன் ஆணைவழி நின்று தாழ்ந்து கேட்டற்குத் தடை செய்யும்; அதனால் கல்வியறிவு நன்கு பெறப்படாமையோடு மாணாக்கர்க்குக் கடைமைநிலையும் உண்டாதலால், அம் மானம் அறநெறிப்பட்ட மானமாகாதென விலக்கிப் பிற்றைநிலை முனியாது கற்கஎன்றான். ஆசிரியற்கு உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும் மாணாக்கன் பொருணிலையில் உயர்ந்தானாயினும், அவ்வுயர்வை மனங்கொள்ளாது பணிவுடையனாதல் அறமாதலாலும், பணிவிலனாதல் அறத்துக்கு மாறாதலாலும், செல்வ மாணாக்கன் ஆசிரியன் பால் பணிவிலனாகும் மானம் அறநெறிப்பட்ட மானமாகா தாயிற்று. கல்வி பயிலும் மாணாக்கன் தன் ஆசிரியனுக்கு ஓரளவு பொருள் கொடுத்தற்குக் கடமைப்பட்டவனே. உரிய அளவு பொருள் கொடுத்தலின், ஆசிரியனுக்கு ஊறுபாடுற்றவிடத்து உதவுதல் வேண்டா எனக் கருதற்க என்றற்கு உற்றுழி யுதவியும்என்றும், உரிய அளவினும் மிகைபடவே தருக என்பான், உறுபொருள் கொடுத்தும் என்றும் கூறினான் ஊற்றுழி யுதவுதல் எல்லார்க்கும் பொதுவாய் அறமாதலின் அதனை முதலிலும், உறுபொருள் கொடுத்தல் செல்வமுடையார்க்கே இயல்வதாகலின், அச்சிறப்புப்பற்றி அதனைப் பின் வைத்தும் மொழிந்தான். இக்காலக் கல்வித் துறையில் இவ்வுணர்வு அறவே யில்லாதொழிந்தமையின், ஆசிரியர்களை அடிமைகளாகக் கருதி யல்லற்படுத்தும் கீழ்மைப் பண்புடைய செல்வமாக்கள் கல்வித் துறைகட்குத் தலைவர்களாகத் தோன்றி, நாட்டு மக்களின் நல்லறிவை முளையிலே கெடுத்து, அவரிடையே ஒருமை யுணர்வும் சீர்த்த புலமையும் உண்டாகாவாறு செய்துவிட்டதை இக்கால நிலை யெடுத்துக் காட்டுகிறது. உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும் கல்வி பயிலும் மாணாக்கற்குப் பிற்றைநிலை எற்றுக்கு வேண்டுவது? ஒருவர்பால் அரிய பொருளொன்று உளதாயின் அதனைப் பெற முயல்வோர் அவர்க்கு உற்றுழி யுதவி அவர் அன்பைப்பெற முயல்வர்; அன்புளதானாலன்றி அருமையுடைய பொருளைக் கொடுத்தற்கு அவர்க்கு மனமுண்டாகாது. அல்லதூஉம், அவ்வரிய பொருள் விலைகொடுத்துப் பெறற்பாலதாயின், அதன் விலையினும் மிக்க பொருளைக்கொடுத்துப் பெற முயல்வர். இஃது என்றும் காணக்கூடிய உலகியல் நிகழ்ச்சி. ஆசிரியன்பால் உள்ள பொருளோ, அவன் மனங் கனிந்து வழங்குதல் வேண்டு மெனத் தானே விழைந்து கொடுத்தாலன்றி, வேறு எவ்வகையாலும் எத்திறத்தாராலும் பெறக்கூடியதன்று. இதனைக் கொங்கு வேளிர், அரசின் ஆகாது ஆணையின் ஆகாதுஎன்றது ஈண்டு நினைவு கூரத்தக்கது. அன்பும் வழிபாடுமே ஆசிரியன்பாலுள்ள அறிவுச் செல்வத்தைப் பெறுதற்கு வாயிலாவன. ஆனதுபற்றியே இப்பாண்டியன், உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும்அன்பு செய்க; பிற்றைநிலை முனியாதுவழிபடுக என்று எடுத்த எடுப்பிலேயே வற்புறுத்தினான். திருவள்ளுவரும் உடையார் முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்உயர்ந்தோர் என்றும், அவ்வாறு கல்லாதவர் கடையரேஎன்றும் கூறினார். பெற்ற தாய்க்குத் தன் வயிற்றிற் பிறந்த பிள்ளை எத்துணைப் பொலிவற்றிருப்பினும் மனவெறுப்புண்டாகாது; திருவள்ளுவர், ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்என்பது காண்க. அத்தகைய தாயும் தன் மகன் கல்வியில்லாமையாற் கடையனானா னென்பது காண அருவருப்புக் கொள்வளென்பான். தாயும் மனம் திரியும்என்றான். தம்மிற்றம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து, மன்னுயிர்க்கெல்லாம் இனிது என்பது, பெற்றோர்க்கும் கற்றோர்க்கும் நோக்கமாதலின், மாநிலத்து மன்னுயிர்க் கின்ப வாழ்வு வழங்கும் அரசு முறை அறிவுடையோனையே நோக்கி யியங்கும் என்பான், அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் என்றான். அறிவுடையோன், படை வேண்டுவழி வாளுதவலும், வினை வேண்டுவழி அறிவுதவலும்கடன் என்பதை வடநெடுந்தத்தனார் உரைத்தவாற்றால் இனிதறியலாம். பார்ப்பார் அரசர் வணிகர் வேளாளரென்ற நால்வகையினையும், நாற்பால்என்றான். இது வடவாரியப் பகுப்பு முறை. தமிழகத்தில் தமிழ் மக்களிடையே இப் பாகுபாடு இன்றும் கிடையாது; என்றும் இருந்ததில்லை வடவாரிய நூல்களையடிப்படையாகக் கொண்டெழுந்த இந்து லா(Hindu Law) வில் மட்டில் இருக்கிறது. வேளாளர் கீழ்ப்பாலாராயின், அவர்க்குரிய தொழிலான உழவு உயர் தொழிலாகத் திருவள்ளுவர் முதலாய சான்றோர்களால் உயர்த்துக் காட்டப்பட மாட்டாது. கல்வியறிவு நாற்பாலார்க்கும் பொதுவாதலின், அறிஞனை இப் பாற்பாகுபாடு கட்டுப்படுத்தா தென்றற்கு, கீழ்ப்பா லொருவன் கற்பின் மேற்பாலொருவனும் அவன்கட் படுமேஎன்றான். கீழ்ப்பா லொருவன் கற்பின்என்றாற்போல மேற்பா லொருவன் கல்லா னாயின் அவனும் என்னாது, மேற்பா லொருவனும்என்றும், உரைகாரர், மேற்குலத்துள் ஒருவனும்என்றும் கூறியது, மேற்பாலா னொருவன் கற்றவனாயினும், கீழ்ப்பாலொருவன் கற்றுத் தலைவனாயின், அவன்பாற் சென்று வழிபடுதற்குரியன் என்பதை வற்புறுத்துகிறது. |