3. பாண்டியன் கருங்கையொள்வாட் பெரும்பெயர் வழுதி

     இப் பெரும்பெயர் வழுதி இப்பாட்டின்கண் ஆசிரியர் இரும்பிடர்த்
தலையாரால் “கருங்கை யொள்வாட் பெரும்பெயர் வழுதி” யெனவே
பாராட்டப்படுகின்றா னாதலால் இவனது பெயரும் இதுவே போலும். இவன்
கவுரியர் வழித்தோன்ற லென்றும், தன்பால் வரும் இரவலர் குறிப்பறிந்து
அவர் வேண்டுவன நல்கும் பெருங்கொடை வள்ளல் என்றும், இதனால்
இவனிடம் இரவலர் வந்தவண்ணமே யிருப்பரென்றும் கூறி, இவ்வகையால்
உண்டாகும் புகழினும், சொல் தவறாத வாய்மையால் உண்டாகும் புகழே
மிகச் சிறந்த தாதலால், “நிலம் பெயரினும் நின்சொல் பெயரல்” என்றும்
இப்பாட்டின்கண் ஆசிரியர் வற்புறுத்துகின்றார்.

     இப்பாட்டினைப் பாடிய ஆசிரியர் இரும்பிடர்த்தலையார் சோழன்
கரிகாலனுக்கு அம்மான் என்று கூறுவர். இவர் யானையின் பெரிய
கழுத்தை இப்பாட்டின்கண் இரும்பிடர்த்தலை யென்று சிறப்பித்துக்
கூறுவது பற்றி,

     இத்தொடரால்   இவரைச் சான்றோர்  இரும்பிடர்த்  தலையார்
என வழங்கலாயினர்.  இவரது  இயற்பெயர்  தெரிந்திலது. இவர்பால்
கரிகாலன்    இளமையில்     கல்விகற்றுச்      சிறப்புற்றானென்று
முன்றுறையரையனார்  கூறுவர்.  இப்பாட்டில்  இவர்   பெரும்பெயர்
வழுதியின்   குடிப்   பிறப்பும்   மனைமாண்பும்   கொடைப்புகழும்
எடுத்தோதிப்    பாராட்டி   வாழ்த்தி  யொழியாது சொற்பெயராமை
வேண்டும்  என வற்புறுத்தும்  திறம்,  கரிகாலனைப் பேரரசனாக்கும்
திறம் இவர்பால் உண்மையினை   நாமறியப் புலப்படுத்துகிறது.

உவவுமதி யுருவின் ஓங்கல் வெண்குடை
நிலவுக்கடல் வரைப்பின் மண்ணக நிழற்ற
ஏம முரசம் இழுமென முழங்க
நேமி யுய்த்த நேஎ நெஞ்சின்
5.தவிரா ஈகைக் கவுரியர் மருக
 செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ
பொன்னோடைப் புகரணிநுதல்
துன்னருந்திறல் கமழ்கடாஅத்
தெயிறுபடையாக எயிற்கத விடாஅக்
10.கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கிற்
 பெருங்கை யானை யிரும்பிடர்த் தலையிருந்து
மருந்தில் கூற்றத் தருந்தொழில் சாயாக்
கருங்கை யொள்வாட் பெரும்பெயர் வழுதி
நிலம்பெயரினும் நின்சொற் பெயரல்
15.பொலங்கழற்காற் புலர்சாந்தின்
 விலங்ககன்ற வியன்மார்ப
ஊரில்ல உயவரிய
நீரில்ல நீளிடைய
பார்வ லிருக்கைக் கவிகண் ணோக்கிற்
20.செந்தொடை பிழையா வன்க ணாடவர்
 அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்
திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந் துயவும்
உன்ன மரத்த துன்னருங் கவலை
நின்னசை வேட்கையின் இரவலர் வருவரது
25.நின்னசை வேட்கையின் இரவலர் வருவரது
 இன்மை தீர்த்தல் வன்மை யானே (3)

     திணையும் துறையும் அவை. பாண்டியன் கருங்கை யொள்வாட்
பெரும்பெயர் வழுதியை இரும்பிடர்த் தலையார் பாடியது.

     உரை:  உவவுமதி உருவின்-உவாநாளின் மதியினது
வடிவு போலும் வடிவினையுடைய; ஓங்கல் வெண்குடை-
உயர்ந்த வெண்கொற்றக் குடை; நிலவுக் கடல் வரைப்பின்
மண்ணகம் நிழற்ற-நிலைபெற்ற  கடலெல்லைக்கண்
நிலத்தை நிழற்செய்ய; ஏம முரசம் இழுமென முழங்க-
காவலாகிய வீரமுரசம் இழுமெனமுழங்கும்
ஓசையையுடைத்தாய் முழங்க; நேமி யுய்த்த நேஎ நெஞ்சின்
-சக்கரத்தைச் செலுத்திய ஈரமுடைய நெஞ்சினையும்;
தவிரா ஈகை-ஒழியாத வண்மையினையுமுடைய;
கவுரியர் மருக-பாண்டியர் மரபினுள்ளாய்; செயிர்தீர்
கற்பின் சேயிழை கணவ-குற்றமற்ற கற்பினையுடைய
சேயிழைக்குத் தலைவ; பொன் ஓடைப் புகர் அணி
நுதல்-பொன்னானியன்ற பட்டத்தையுடைய புகரணிந்த
மத்தகத்தினையும்; துன்னருந் திறல்-அணுகுதற் கரிய
வலியையும்;கமழ்கடா அத்து-மணநாறும் மதத்தினையும்;
கயிறு பிணிக்கொண்ட கவிழ்மணி மருங்கின்-கயிற்றாற்
பிணித்தலைச் செய்த கவிழ்ந்த மணியணிந்த பக்கத்தையும்;
பெருங்கை-பெருங்கையையுமுடைய; எயிறு படையாக
-கொம்பு படைக்கலமாகக் கொண்டு; எயிற் கதவிடா
-பகைவர் மதிலின்கட் கதவைக் குத்தி;யானை இரும்பிடர்த்
தலையிருந்து-யானையினது பெரிய கழுத்திடத்தே யிருந்து;
மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயா-பரிகாரமில்லாத
கூற்றத்தினது பொறுத்தற்கரிய கொலைத்தொழிலுக்கு இளையாத;
கருங்கை ஒள்வாள்-வலிய கையின்கண்ணே ஒள்ளிய
வாளினையுடைய; பெரும்பெயர் வழுதி-; நிலம் பெயரினும்
நின்சொல் பெயரல்-நிலம் பிறழினும் நினது ஆணையாகிய
சொல் பிறழா தொழியல் வேண்டும்; பொலங் கழற்கால்-
பொன்னாற் செய்யப்பட்ட வீரக்கழல் புனைந்த காலினையும்;
புலர்சாந்தின் விலங்கு அகன்ற வியன்மார்ப-பூசிப் புலர்ந்த
சந்தனத்தை யுடைத்தாகிய குறுக்ககன்ற பரந்த மார்பினையு
முடையோய்; ஊர்இல்ல-ஊரில்லாதனவும்; அரிய உயவ-
பொறுத்தற்கரிய உயங்குதலை யுடையனவும்; நீரில்ல-
நீரில்லாதனவும்; நீள்இடைய-நீண்ட வழியனவுமாகிய;
பார்வல் இருக்கை-வம்பலரை நலியச் சேய்மைக்கண்ணே
பார்த்திருக்கும் இருப்பினையும்; கவி கண் நோக்கின்-கையாற்
கவிக்கப்பட்ட கண்ணாற் குறித்துப் பார்க்கும் பார்வையையும்;
செந்தொடை பிழையாவன்கண்-செவ்விய  தொடை பிழையாத
தறுகண்மையையுமுடைய; ஆடவர்-மறவர்தம்; அம்பு விட
வீழ்ந்தோர்வம்பப் பதுக்கை-அம்பை விடுதலாற் பட்டோரது
உடல் மூடிய புதிய கற்குவையின்மேலே; திருந்து சிறை
வளைவாய்ப் பருந்து-திருந்திய சிறகினையும் வளைந்த
வாயினையுமுடைய பருந்து; இருந்து உயவும்-இருந்து வருந்தும்;
உன்ன மரத்த துன்னருங்கவலை-உன்ன மரத்தினை
யுடையவாகிய அணுகுதற்
கரிய  கவர்த்த வழியின் கண்ணே;
நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் - நின்பால் நச்சிய
விருப்பத்தால் இரப்போர் வருகுவர்; அது - அங்ஙனம் வருவது;
முன்னம் முகத்தின் உணர்ந்து - அவர் மனக்குறிப்பை அவர்
முகத்தானறிந்து;அவர் இன்மை தீர்த்தல் வன்மையான்
அவருடைய வறுமையைத் தீர்த்தலை வல்ல தன்மையான்; எ-று.

     நுதலையும் திறலையும் கடாத்தையும் மருங்கையும்  பெருங்கையையு
முடைய    யானைப்   பிடர்த்தலையிருந்து,   எயிறு    படையாக
எயிற்கதவிடாக் கூற்றத் தருந்தொழில் சாயாப் பெரும்பெயர் வழுதியென
மாறிக்கூட்டுக. காலாலடுதல் கையாலூக்குத லன்றி எயிறு படையாக
எயிற்கதவு    இடக்கை   விடாத    பெருங்கை   யானையென இயைத்
துரைப்பினும்மையும்: எயிற்கதவிடாஅக் கயிறு பிணிக்கொண்ட  வென
இயைத்துரைப்பாரு  முளர்.  ஊரில்ல, உயவரிய, நீரில்ல, நீளிடையவாகிய
உன்னமரத்த கவலை யெனவும்,  பருந்திருந் துயவும் துன்னருங் கவலை
யெனவும் இயையும்.

     மருக,   கணவ,   வழுதி,   மார்ப,  இரவலர்  வருவர்,   அஃது
அவர்  இன்மை  தீர்த்தல் வன்மையான்; அதனால்  நின்  சொற்பெயரா
தொழில்  வேண்டும்  எனக் கூட்டி வினைமுடிவு செய்க. வாழ்த்தியதலாதல்
விளங்க, வேண்டுமென ஒரு சொல் தந்துரைக்கப்பட்டது.

      விளக்கம் : உவாமதி -  முழுத்திங்கள்.  வெண்கொற்றக் குடைக்கு
முழுமதி உவமம். நிலவுக் கடல், நிலைபெற்ற கடல்: “மழைகொளக் குறையாது
புனல்புக  நிறையாது,  விலங்குவளி கடவுந் துளங்கிடுங் கமஞ்சூல்”  (பதிற்.
15)   என்று  சான்றோர்  கூறுதலால்  கடற்கு  நிலை  பேறுண்மையறிக
“இமிழ்குரன் முரச மூன்று” (புறம்.58) என்றவற்றுள்,வீர  முரசமாகிய  காவன்
முரசினை  ஈண்ட “ஏமமுரச” மென்றார். நேஎ -  ஈரம்;  நேயம்,  நேச
மென்பன இதனடியாகப் பிறந்தன. சேயிழையணிந்த  கோப்பெருந்தேவியைச்  
சேயிழை   யென்றார்.  அருந்தொழில்   சாயா  என்புழி   நான்கனுருபு
விரித்துரைக்கப்பட்டது. யானையின் மதம் ஏழிலைப்பாலையின் மணம்
கமழும்  என்பவாகலின்,  “கமழ்கடாஅத்து”    என்றார்.    கருங்கை
யென்றவிடத்துக் கருமை,  வலிமை   குறித்து   நின்றது,   “கருங்கை
வினைஞர்” (பெரும்.223)   என்றாற்    போல.    இடக்கை-இடத்தல்.
இடாஅ-இடந்து.  கட்புருவத்தின்மேற் கையைக்  கவித்துத்  தொலைவிற் 
குறித்த  பொருளை  நோக்கும் செயல்வகையைக்  “கவிகண்  நோக்கு”
என்பர். “மருந்தில் கூற்றம்” என்றும்  “அருந்தொழில்”   என்றும்
விதந்தோதியது   சாதலின்  கொடுமை   யுணர்த்தி  நிற்ப,   அதற்குச்
சாயாவழுதி   யென்றது, வழுதியது  சாதலஞ்சாத்  தறுகண்மை  விளக்கி
நின்றது. பெயரல்  என்பது அல்லீற் றெதிர்மறை வியங்கோ ளாயினும் 
வேண்டும் என   ஒருசொல்   பெய்துரைக்கப்பட்டது;   உரைகாரர் 
“வாழ்த்தியலாதல் விளங்க வேண்டுமென ஒரு  சொல்  தந்துரைக்கப்பட்ட”
தென்றார்.“நிலந்திறம் பெயருங் காலை யாயினும், கிளந்தசொல் நீ பொய்ப்பறி
யலையே” (பதிற்.63) என்று பிறரும் கூறுதல் காண்க. இனி, அரசரது ஆணை,
வழியொழுகப்படாது  பிறழுமாயின்,   அரசியல்  அறம் பொருளின்பங்கள்  
நிலவுதற்   கரணாகா    தொழியு   மாதலால்,   சொல்லென்பதற்கு
“ஆணையாகிய  சொல்”   லெனப்   பொருள்  கூறுகின்றார். பாட்டுக
கிடந்தபடியே  பொருள்கொள்ளாது, “எயிறு படையாக வெயிற்கத
விடாஅ”  என்பதனை,  “இரும்பிடர்த்  தலையிருந்”  தென்பதன்பின்
கூட்டிப் பொருள்கொள்ள வேண்டியிருத்தலின், “மாறிக் கூட்டுக” என
வுரைக்கின்றார். உடைமையை மிகுத்தற்கண் செல்லும் மனத்தை மீட்டுப்
பிறரது இன்மை தீர்த்தற்குச் செலுத்தல் மிக்க வன்மையுடையார்க் கல்ல
தாகாமையால், “தீர்த்தல் வன்மையான்” என்று உரைக்கின்றார்.