175. ஆதனுங்கன்

    ஆதன் அழிசி, ஆதன் அவினி யென்பாரைப்போல ஆதன் நுங்கனும்
ஒரு  குறுநில  மன்னன்.  வேங்கடத்தைச்  சார்ந்த நாடு  
இவனதாகும். வேங்கடமலையும்  இவற்கே  யுரியதாகும். இவனுக்குப் பின்
வந்தவனே வேட்டுவர் தலைவனான  புல்லி  யென்பான். புல்லி
ஆதனுங்கனுக்கு முற்பட்டவனென்று கருதுபவரும் உண்டு. வேங்கடத்தில்
இப்போது திருமால் கோயிலிருக்கும்  பகுதியே  ஆதனுங்கன், புல்லி
முதலாயினோர் இருந்து நகரமைத்து வாழ்ந்த விடமாகும். சங்கச் சான்றோர்
காலத்துக்குப் பின்னும் இளங்கோவடிகள் காலத்துக்கு முன்னுமாகிய
இடைக்காலத்தில் இவ்விடத்தே திருமாலுக்குக் கோயிலுண்டாயிற்று.
வேங்கடம் இன்றும் அழகிய சிறு சிறு அருவிகளாற்   பொலிவதுபோலப்
பண்டும்  பொலிவுற்றிருந்த தென்பதை, “கல்லிழி யருவி வேங்கடம்” 
(புறம்.389)  என்று  சங்கச்  சான்றோரும், “வீங்குநீரருவி வேங்கட”
(சிலப். 11:41) மென்று இளங்கோவடிகளும் கூறுதல் காண்க.
இவ்வாதனுங்கன்   இரவலர்  இன்மை தீர்க்கும் இனிய வுள்ளமும்,
சான்றோர் சால்பறிந்து பேணும் பெருந்தகைமையும் உடையன். இவன்பால்
கள்ளில் ஆத்திரையனார் என்னும் சான்றோர் மிக்க அன்பு  பூண்டவர்.
கள்ளில் என்பது தொண்டைநாட்டிலுள்ளதோர் ஊர். ஆத்திரையன் என்பது
இவரது இயற்பெயர். இஃது  ஆத்திரேயன் என்பதன் மரூஉ வென்றும்,
எனவே,  இவர்  பார்ப்பனராவாரென்றும்  கருதுவர். இதனை
ஆதிரையானென்பதன் மரூஉவாகக் கோடற்கும் இடனுண்டு. ஒருகால்
ஆத்திரையனார் தமதுஊராகிய கள்ளிலைவிட்டு வேங்கடத்துக்குச்
சென்ற    ஆதனுங்கனைக் கண்டு அளவளாவியிருந்தார். இருவரும்
சொல்லாடுகையில்   ஆத்திரையனார் தமக்கு  ஆதனுங்கன்பால்  
உள்ள அன்பினை யெடுத்தோதவேண்டிய நிலையுண்டாயிற்று. அவர்,
“இறைவ, நீ எப்போதும் என் நெஞ்சில் இடம் பெற்றுள்ளாய்; என்
நெஞ்சைத் திறப்போர் நின்னை    அங்கே    காண்பர்; பலரையும்
புரத்தலை மேற்கொண்டிரக்கும் அறத்துறையாகிய நின்னை ஒருகாலும்    
மறவேன்; மறத்தற்குரிய காலமொன்றுண்டாயின் அஃது என்னுயிர் என்
யாக்கையை விட்டுப் பிரிந்தேகும் காலமாமே யன்றிப் பிறிதில்லை”யென்ற
கருத்துடைய இப் பாட்டைப் பாடினார். பின்பு ஒருகால், இவர் வேங்கடஞ்
சென்றபோது, ஆதனுங்கன் இறந்தானாக அவன் வழித்தோன்றலாகிய
நல்லோர் முதியன் என்பானைக்  கண்டார். அவனும்  இவரை வரவேற்று  
இன்புறுத்தச் சமைந்திருந்தான். அவனை இவர், “ஆதனுங்கன் போல நீயும்
பசித்த வொக்கல் பழங்கண் வீட, வீறுசால் நன்கலம் நல்குமதி
பெரும”(புறம்.389) என்று கூறுமாற்றால் ஆதனுங்கனைத் தாம் மறவாமையை
விளக்கினார். ஆதியருமன் என்றொரு வள்ளலும் இவ்வாத்திரையனாரால்
(குறுந்.893) பாராட்டப் படுகின்றான்.

 எந்தை வாழி யாத னுங்கவென்
நெஞ்சந் திறப்போர் நிற்காண் குவரே
நின்னியான் மறப்பின் மறக்குங் காலை
என்னுயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும்
5 என்னியான் மறப்பின் மறக்குவென் வென்வேல்
 விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்
திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த
உலக விடைகழி யறைவாய் நிலைஇய
மலர்வாய் மண்டிலத் தன்ன நாளும்
10பயிர்புர வெதிர்ந்த வறத்துறை நின்னே. (175)

     திணை: பாடாண்டிணை. துறை: இயன்மொழி. ஆதனுங்கனைக்
கள்ளில் ஆத்திரையனார் பாடியது.

     உரை: எந்தை வாழி - என்னுடைய இறைவ வாழ்வாயாக; ஆதன்
நுங்க-; என் நெஞ்சம் திறப்போர் நிற் காண்குவர் - யான் ஒன்றைச்
சொல்ல    நினைப்பின்    நினது    புகழல்லது சொல்லாமையான்
என் நெஞ்சை வெளிப்படுத்திக் காணலுறுவோர் ஆங்கு  நின்னைக்
காணாநிற்பர்;     நின் யான் மறப்பின் - நின்னையுடைய யான்
நின்னை மறப்பின்; மறக்குங்காலை - மறக்குங்    காலமாவது  
சொல்லக் கேட்பாயாக; என் உயிர் யாக்கையிற் பிரியும்பொழுதும்
- என்னுடைய உயிரானது  என்  உடம்பை  விட்டு நீங்கும்
காலத்தும்; என் யான்மறப்பின் - என்னை யான் மறக்குங்கால  
முண்டாயின்; மறக்குவென் - அப்பொழுது மறப்போனல்லது
மறவேன்; வென்வேல் விண்பொரு  நெடுங்குடை - வென்றி
வேலையுடைய விசும்பைத் தோயும் நெடிய குடையினையும்; கொடித்
தேர் - கொடியணிந்ததேரினையுமுடைய;
மோரியர் - நிலமுழுது
மாண்ட மோரியது; திண் கதிர் திகிரி திரிதர - திண்ணிய  ஆர்
சூழ்ந்த சக்கரம் இயங்குதற்கு; குறைத்த - குறைக்கப்பட்ட;  உலக
இடை  கழி  அறைவாய் - வெள்ளி மலைக்கு  அப்பாலாகிய
உலகத்திற்குக் கழியும் இடைகழியாகிய அற்றவாயின்கண்;  நிலைஇய
தேவர்களால் நிறுத்தப்பட்டு இருபொழுதும் ஒருபெற்றியே நிலைபெற்று
விளங்கும்; மலர்வாய் மண்டிலத்தன்ன - பரந்த     இடத்தையுடைய
ஆதித்தமண்டலத்தை யொப்ப;  நாளும்  பலர் புரவு எதிர்ந்த
அறத்துறை நின்னே - நாடோறும்  இரவு  பக லென்னாமல் பலரையும்
காத்தலை ஏற்றுக்கொண்டு ஒரு பெற்றியே விளங்கிய அறத்துறையாகிய
நின்னை எ-று.

      எந்தை வழி, ஆதனுங்கனே, மண்டிலத் தன்ன அறத்துறை நின்னை,
நின்னுடையேனாகிய     யான்  மறப்பின் மறக்குங் காலமாவது என் யான்
மறப்பின்   மறக்குவென்;  ஆதலால், என்  நெஞ்சைத்  திறப்போர்
நிற்காண்குவரெனக் கூட்டி வினைமுடிக்க.

      மோரியராவார்,   சக்கரவாள  சக்கரவர்த்திகள்;  விச்சாதரரும்
நரகருமென்ப.     ‘திகிரி திரிதரக் குறைந்த’ என்றோதி, சக்கரவாளத்திற்
கப்பாற்பட்ட   உலகத்து மோரியர் திகிரி ஊடறுத்துச்சேறலின் குறைந்த
பிளவுபட்ட வாயிற்கு அப்பாலாகிய உதயகிரிக்கண் நிலைபெற்ற ஆதித்த
மண்டலமென் றுரைப்பாரு முளர்.

      விளக்கம்: நெஞ்சில் உள்ளதுதான் சொல்வழி வெளிப்படும் என்பது
குறித்து, “நின்புகழல்லது சொல்லாமையால்”எனக் காரணம் காட்டினார்.
அன்பு  செய்யப்பட்டார்  அன்புடையார்   நெஞ்சில்    உறைவரென்பது,
“நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல், அஞ்சுதும், வேபாக் கறிந்து”
(குறள். 1128) என்பதனாலும் தெளியப்படும். உயிர் உடம்பின்  நீங்குங்
காலத்துக் கருவி கரணங்கள் ஓய்ந்து போதலின், “மறக்குங்காலை என்னுயிர்
யாக்கையிற் பிரியும்பொழுது”என்றார். “என்னை  யான் மறக்குங்கால
முண்டாயின்”என்றவிடத்து, “உண்டாயின்”என்பது, “உண்டாதல் என்
செயலன்று;   காலத்தின் செயல். அக்காலத்தே யான் மறப்பேனேயன்றி,
உடம்பொடு கூடியிருக்குங்கால்     ஒருகாலும் மறவேன்”என்பது. உயிர்
உடம்பின் நீங்கியவழிப் பிறப்பு வேறுபடுதலாலும் மறதியுண்டா மென்பதை,
“சாதல் அஞ்சேன் அஞ்சுவல் வானின், பிறப்புப்பிறி    தாகுவ    தாயின்,
மறக்குவேன்  கொல்லென் காதல னெனவே” (நற்.397) எனச் சான்றோர்
கூறுதல் காண்க. மோரியராவார் வடநாட்டில் வாழ்ந்த அரச பரம்பரையினர்.
அவர்கள் போர் குறித்துத் தம் நாட்டின் தென்பகுதி நோக்கிப் படையெடுத்து
வருங்கால், ஆங்கே ஒரு மலைத்தொடர் குறுக்கிடவே, அதனை ஒருபுறத்தே
வெட்டி  வழிசெய்து படைக் கருவிகளும் பிறவும் கொணரும் சகடங்கள் இனிது
வருவித்தனர். இச்செய்தியை மாமூலனாரும பரங்கொற்றனாரும் குறித்துள்ளனர். 
இம் மோரியரைப்பற்றி உரைகாரர் கூறுவன எந்நூல்களை யடிப்படையாகக்
கொண்டனவோ தெரிந்தில. ஞாயிற்று மண்டிலம் ஏனை எல்லா மண்டிலங்களினும்
பெரிதென்பதற்கேற்ப, இச் சான்றோர், இதனை “மலர்வாய் மண்டிலம்”என்றது
போற்றத்தக்கது.