172. பிட்டங்கொற்றன்

     வடமவண்ணக்கன் தாமோதரனா ரென்னும் சான்றோர் ஒருகால்
பிட்டங்கொற்றனைக் கண்டு பாடி, அவன் தந்த பெருவளத்தால் இன்புற்றார்.
அக்காலை, தான் பெற்ற இன்பத்தைப் பாண னொருவன் தன் சுற்றத்தார்க்
குரைக்கும்       துறையில்    வைத்து    இப்பாட்டால்  
வெளிப்படுத்தியுள்ளார். பிட்டங்கொற்றன்பால் பரிசில் பெற்ற
பாணனொருவன், “உலையேற்றி நிரம்பச் சோற்றை  யாக்குக; மதுவையும்
நிறைய வுண்டாக்குக;     விறலியர்    சிறந்த  அணிகளை யணிந்து
கொள்க; இனி நாளைக்கு என்செய்வே மென வெண்ணியிரங்குதல்
வேண்டா;    இல்லையாயின்    பிட்டங்கொற்றன்     நமக்கு
வேண்டுவனவற்றை நிரம்ப நல்குவன்; நாம் செய்ய வேண்டுவதெல்லாம்
பிட்டங்கொற்றன் வாழ்க; அவன் தலைவனான சேரமான் கோதை வாழ்க;
இவரைப் பகைத்த மன்னர்களும் வாழ்கவென வேண்டுவதேயாம்”என்று
கூறுகின்றான்.

         இத் தாமோதரனார் வடநாட்டினின்றும் தமிழ்நாட்டிற் குடியேறிய
வடமர் குடியிற் றோன்றி வண்ணக்கர் தொழில் மேற்கொண்டிருந்தவர்.
செந்தமிழ்ப் புலமை நலமும் சிறந்து சீரிய செய்யுள் செய்த சிறப்பால்
சான்றோர் தொகையுள் ஒருவராயினார். தலைவர் புறத்தொழுக்கம்
மேற்கொண்டானாக, அவன்பொருட்டுச் சென்ற பாணன், தலைவியின்
தோழியை நோக்கி, “தலைவன் யாரினும் இனியன், பேரன்பினன்”என்று
சொல்லி வாயில் வேண்டி நிற்க. அவனை மறுக்கும் தோழி, “உள்ளூர்க்
குரீஇத் துள்ளுநடைச் சேவல், சூல்முதிர் பேடைக் கீனில் இழைஇயர்,
தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின், நாறா வெண்பூக் கொழுதும்,
யாண ரூரன்”(குறுந் 85) என்னுமாற்றால், தலைவன் பரத்தைமையின்
சிறப்பின்மையை வற்புறுத்துவது இவரது புலமை நலத்தை விளக்கிக்
காட்டுகின்றது. இதன் நலங் கண்டு வியந்த மணிவாசகனார், “சூன்முதிர்
துள்ளு நடைப்பெடைக் கிற்றுணைச் சேவல் செய்வான், தேன்முதிர்
வேழத்தின் வெண்பூக்குதர் செம்மலூரன்”(திருக். 319) என்றும்,
சேரமான்
பெருமாள், “மனையுறை குருவி வளைவாய்ச் சேவல், சினைமுதிர்
பேடைச் செவ்வி நோக்கி, ஈனிலிழைக்க வேண்டி யானா, அன்புபொறை
கூர மேன் மேன் முயங்கிக் கண்ணுடைக் கரும்பி னுண்டோடு கவரும்’’
(திருவாரூர் மும்மணிக்.19) என்றும் தத்தம் நூல்களில் மேற்கொண்
டுரைத்திருப்பதே இத்தாமோதரனாரின் புலமை நலத்துக்குச் சான்று
பகருகின்றது.

 ஏற்றுக வுலையே யாக்குக சோறே
கள்ளுங் குறைபட லோம்புக வொள்ளிழைப்
பாடுவல் விறலியர் கோதையும் புனைக
அன்னவை பிறவும் செய்க வென்னதூஉம்
5பரியல் வேண்டா வருபத நாடி
 ஐவனங் காவலர் பெய்தீ நந்தின்
ஒளிதிகழ் திருந்துமணி நளியிரு ளகற்றும்
வன்புல நாடன் வயமான் பிட்டன்
ஆரமர் கடக்கும் வேலு மவனிறை
10மாவள் ளீகைக் கோதையும்
 மாறுகொண் மன்னரும் வாழியர் நெடிதே. (172)

    திணையும் துறையு மவை. அவனை வடமவண்ணக்கன்
தாமோதரனார் பாடியது.

    உரை: உலை  ஏற்றுக - உலையை யேற்றுக; சோறு ஆக்குக -
சோற்றை ஆக்குக;  கள்ளும் குறை படல் ஓம்புக - மதுவையும்
நிறைய வுண்டாக்குக;  ஒள்ளிழை  பாடுவர் விறலியர் கோதையும்
புனைக - விளங்கிய   அணிகலத்தையுடைய   பாடுதல் வல்ல
விறலியர் மாலையும் சூடுக; அன்னவை  பிறவும் செய்க - அத்தன்மையன 
மற்றும் செய்க; என்னதூஉம்  பரியல்வேண்டா - சிறிதும்    இரங்குதல்
வேண்டா; வருபதம்    நாடி - மேல் வரக்கடவ  வுணவை  ஆராய்ந்து;
ஐவனம் காவலர்  பெய் தீ   நந்தின் - ஐவன  நெல்லைக் காப்பார்
காவற்கிடப்பட்ட தீ அவ்விடத்துக் கெட்டகாலத்து; ஒளி திகழ் திருந்து
மணி நளி இருள்அகற்றும் - ஒளி விளங்கும் திருந்தின மாணிக்கம்
செறிந்த இருளைத் துரக்கும்; வன் புல நாடன் - வலிய  நிலமாகிய
மலைநாட்டை யுடையவன்; வய மான் பிட்டன் - வலிய  குதிரையை
யுடைய பிட்டன்; ஆரமர் கடக்கும் வேலும் - பொருதற்கரிய போரை
வெல்லும் வேலும்; மாவள் ஈகைக் கோதையும் - அவன்
தலைவனாகியபெரிய வள்ளிய கொடையையுடைய கோதையும்;
மாறுகொள் மன்னரும்நெடிது வாழியர் அவனோடு பகைத்த
வேந்தரும் நெடிது வாழ்க எ-று.

     பிட்டன் வேலும், கோதையும், மாறு கொள் மன்னரும் நெடிது
வாழியர்;அதுவே வேண்டுவது; மேல்வரும் உணவைத் தேடி என்னதூஉம்
பரியல் வேண்டா; ஆதலால் ஏற்றுக; ஆக்குக; ஓம்புக; கோதையுயிம் புனைக; 
பிறவும் செய்க என மாறிக் கூட்டுக. மாறு கொள் மன்னரும் வாழிய ரென்ற
கருத்து, இவன் வென்று திறை கொள்வது அவருளராயி னென்பதாம். விறலிய
ரென்றது,    ஈண்டு  முன்னிலைக்    கண்  வந்தது.  வேண்டா  வென்பது
வினைமேனின்றதொரு முற்றுச் சொல். அன்னவை பிறவும் என்றது, பூசுவன,
உடுப்பன,   பூண்பன  முதலாயினவற்றை  வருவது  நாடி   யென்றோதி,
ஐவனத்துக்கு வரும் இடையூறு நாடி யென்று அதனைக் காவ லென்பதனான்
முடிப்பினும் அமையும்.

     விளக்கம்: “பிட்டங்கொற்றனும்  அவன் இறையாகிய சேரமான்
கோதையும் அவரொடு மாறுபட்டுப் பொரும் மன்னரும் வாழ்வதே நாம்
வேண்டுவது; உணவு கருதி வருந்தன்மின்; அது தானே கிடைக்கும்”என்றது,
பிட்டங்கொற்றனது வள்ளன்மையால் விளைந்த பெருமிதம் பிட்டங்கொற்றன்
தரும் உணவு குறையின், அவனிடத்தே அவன் இறைவனாகிய கோதை தரும்
உணவு வந்து நம் பசி நீக்கும்; இவ்வாறு ஒருவர் தருவது குறையின், மற்றவர்
தருவது நிறைக்கு மென்பது, “காவலர் பெய்தீ நந்தின், திருந்துமணி நளியிரு
ளகற்றும்”   என்பதனால்     உள்ளுறுத்     துரைத்தலின், “வருபதம்  
நாடி என்னதூஉம்  பரியல் வேண்டா”என்றும், “மாவள்ளீகைக்
கோதை”என்றும் கூறினார்.   பகை  மன்னர் என்னாது “மாறுகொண்
மன்ன” ரென்றது, பொருளால் மிக்குச்  செருக்கி  மாறுபடும்  மன்னர்
என்றவாறு. பொருள் மிகினல்லது  மாறுகொள்  உணர்வு  பிறவாதென  
வறிக. அதனாற்றான்  உரைகாரர்,“மாறுகொள்.......அவருளராயினென்பதாம்”
என்றார். விறலியர் என்றது,  அண்மை விளியாதலின் முன்னிலைக்கண்  
வந்த   தென்றார். ஐவனத்துக்கு வருபதம் நாடிக் காவலைச் செய்பவரென
முடிப்பினும் அமையும் என்பது.