56. இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய பாண்டியன் நன்மாறன் இப் பாண்டி வேந்தனான இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் தெறலும் அளியும் வண்மையும் நிரம்ப வுடையனாய், மிக்க புகழ் கொண்டு விளங்குதல் கண்ட மருதன் இளநாகனார், தெறல் முதலியன வுடையனாய் நெடுங் காலம் வாழ்க வெனப் பாராட்டி வாழ்த்தியது போலக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், இப்பாட்டின்கண் இவனை உலகங்காக்கும், நால்வராகிய மணிமிடற் றிறைவனும், பலராமனும், திருமாலும், முருகவேளும் செயல் வகையில் ஒப்ப ரெனக் கூறி, வேந்தே, இன்ப நுகர்ச்சிக்கண் குறைவிலனாய் உலகில் இருணீக்கி யொளி விளக்கும் ஞாயிறும் திங்களும் போல நிலைபெற்று வாழ்க வென வாழ்த்துகின்றார். நக்கீரனார் மதுரைக் கணக்காயனார்க்கு மகனாராவார், சங்ககாலத்துப் புலவர் நிரலில் தலைமை பெற்றவர். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனது ஆலங்கானப் போரையும் பொலம் பூண் கிள்ளி யென்பவன், கோய ரென்பாரை வென்று நிலங் கொண்ட திறமும், சேரமான் கோதை மார்பனுக்குப் பகையாய் இறுத்த கிள்ளிவளவனைப் பழையன் மாறன் என்பான் வென்று சேரனுக்கு உவகை யெய்துவித்த திறமும், பிறவும் இவரால் குறிக்கப்படுவனவாகும். இவர் மதுரையைச் சேர்ந்தவராதலின், அதனை வாய்த்த விடங்களில், அரண் பல கடந்த முரண்கொள் தானை, வாடா வேம்பின் வழுதி கூடல் பொன்மலி நெடுநகர்க் கூடல் மாடமலி மறுகிற் கூடல் என்று சிறப்பித்துரைப்பர். மருங்கூர்ப் பட்டினம், காவிரிப்பூம் பட்டினம், முசிறி, கருவூர், உறையூர், முதலிய வூர்களும் ஆங்காங்கு இவரால் சிறப்பிக்கப்படுகின்றன. வேள் பாரியைத் தமிழ்வேந்தர் மூவரும் நெடுங்காலம் முற்றுகையிட்டிருந்த காலத்துக் கபிலர் கிளிகளைப் பயிற்றி, வெளியே விளைபுலங்களிலிருந்து நெற்கதிர் கொணர்வித்து, உணவுக் குறைவுண்டாகாவாறு பேணிக் காத்த செய்தியை இவர் குறிக்கின்றார். கபிலரை இவர் உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை, வாய் மொழிக் கபிலன் எனச் சிறப்பிக்கின்றார். தூங்க லோரியார் என்னும் புலவர் இவர் காலத்தே சிறப்புற்றிருந்த செய்தி இவர் பாட்டால் விளங்குகிறது. இவருடைய பாட்டுக்கள் இலக்கியச் செறிவுடையன. உறையூர்க்குக் கிழக்கேயுள்ள பிடவூருக்கு ஒருகால் சென்று, ஆங்கிருந்த பெருஞ் சாத்தன் என்பானைக் கண்டார். அவன் இவரைத் தன் மனைவிக்குக் காட்டி, என்பால் செய்யும் அன்பளவே இவர்பாலும் செய்க என்றான். அதனால் வியப்பு மிகக் கொண்ட நக்கீரர், தன் மனைப் பொன்போல் மடந்தையைக் காட்டி, இவனை என்போல் போற்றென்றோனே யென்று பாடிப் பரவினார். இவர் பாடியுள்ள பொருண் மொழிக் காஞ்சி ஒவ்வொரு செல்வ மகனும் படித்து இன்புறுதற்குரியது. இவரைப் பற்றிக் கூறப்படும் வரலாறுகள் பல. | ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும் கடல்வளர் புரிவளை புரையு மேனி அடர்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும் | 5. | மண்ணுறு திருமணி புரையு மேனி விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும் மணிமயி லுயரிய மாறா வென்றிப் பிணிமுக வூர்தி யொண்செய் யோனுமென ஞாலங் காக்குங் கால முன்பின் | 10. | தோலா நல்லிசை நால்வ ருள்ளும் | | கூற்றொத் தீயே மாற்றருஞ் சீற்றம் வலியொத் தீயே வாலி யோனைப் புகழொத் தீயே யிகழுந ரடுநனை முருகொத் தீயே முன்னியது முடித்தலின் | 15. | ஆங்காங் கவரவ ரொத்தலின் யாங்கும் | | அரியவு முளவோ நினக்கே யதனால் இரவலர்க் கருங்கல மருகா தீயா யவனர், நன்கலந் தந்த தண்கமழ் தேறல் பொன்செய் புனைகலத் தேந்தி நாளும் | 20. | ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந் | | தாங்கினி தொழுகுமதி யோங்குவாண் மாற அங்கண் விசும்பி னாரிரு ளகற்றும் வெங்கதிர்ச் செல்வன் போலவுங் குடதிசைத் தண்கதிர் மதியம் போலவும் | 25. | நின்று நிலைஇய ருலகமோ டுடனே. (56) |
திணை: அது. துறை: பூவைநிலை. அவனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
உரை: ஏற்று வலன் உயரிய - ஆனேற்றை வெற்றியாக உயர்த்த; எரி மருள் அவிர் சடை - அழல் போலும் விளங்கிய சடையினையும்; மாற்றருங் கணிச்சி மணி மிடற்றோனும் - விலக்குதற்கரிய மழுப்படையையுமுடைய நீலமணிபோலும் திருமிடற்றை யுடையோனும்; கடல் வளர் புரி வளை புரையும் மேனி - கடற் கண்ணே வளரும் புரிந்த சங்கை யொக்கும் திரு நிறத்தையுடைய; அடர் வெம் நாஞ்சிற் பனைக் கொடி யோனும் - கொலையை விரும்பும் கலப்பையையும் பனைக்கொடியையு முடையோனும்; மண்ணுறு திரு மணி புரையும் மேனி - கழுவப்பட்ட அழகிய நீலமணி போலும் திரு மேனியையும்; விண் உயர் புட்கொடி விறல் வெய்யோனும் - வானுற வோங்கிய கருடக்கொடியையுமுடைய வென்றியை விரும்புவோனும்; மணி மயில் உயரிய - நீலமணிபோலும் நிறத்தையுடைய மயிற்கொடியை யெடுத்த; மாறா வென்றி - மாறாத வெற்றியையுடைய; பிணி முக வூர்தி ஒண் செய்யோனும் என - அம் மயிலாகிய வூர்தியையுடைய ஒள்ளிய செய்யோனுமென்று சொல்லப்பட்ட; ஞாலம் காக்கும் கால முன்பின் - உலகம் காக்கும் முடிவு காலத்தைச் செய்யும் வலியினையும்; தோலா நல்லிசை நால்வ ருள்ளும் - தோல்வியில்லாத நல்ல புகழினையுமுடைய நால்வ ருள்ளும்; மாற்றரும் சீற்றம் - விலக்குதற்கரிய வெகுட்சியால்; கூற்று ஒத்தீ - கூற்றத்தை யொப்பை; வலி வாலியோனை ஒத்தீ - வலியால் வாலியோனை யொப்பை; புகழ் இகழுநர் அடுநனை ஒத்தீ - புகழால் பகைவரைக் கொல்லும் மாயோனை யொப்பை; முன்னியது முடித்தலின் முருகு ஒத்தீ - கருதியது முடித்தலான் முருகனை யொப்பை; ஆங்காங்கு அவரவர் ஒத்தலின் - அப்படி யப்படி அவரவரை யொத்தலான்; யாங்கும் அரியவும் உளவோ நினக்கு - எவ்விடத்தும் அரியனவும் உளவோ நினக்கு; அதனால் - ஆதலால்; இரவலர்க் கருங்கலம் அருகா தீயா - இரப்போர்க்கும் பெறுதற்கரிய அணிகலங்களைப் பெரிதும் வழங்கி; யவனர் நன்கலம் தந்த தண் கமழ் தேறல் - யவனர் நல்ல குப்பியிற் கொடுவரப்பட்ட குளிர்ந்த நறுநாற்றத்தையுடைய தேறலை; பொன் செய் புனை கலத் தேந்தி - பொன்னாற் செய்யப்பட்ட புனைந்த கலத்தின்கண்ணே யேந்தி; நாளும் ஒண்டோடி மகளிர் மடுப்ப மகிழ் சிறந்து இனிது ஒழுகு மதி - நாடோறும் ஒள்ளிய வளையையுடைய மகளிர் ஊட்ட மகிழ்ச்சி மிக்குஇனிதாக நடப்பாயாக; ஓங்கு வாள் மாற - வென்றியான் உயர்ந்த வாளையுடைய மாற; அங்கண் விசும்பின் - அழகிய இடத்தையுடைய வானத்தின்கண்ணே; ஆரிருள் அகற்றும் வெங்கதிர்ச் செல்வன் போலவும் - நிறைந்த இருளைப் போக்கும் வெய்ய கதிரையுடைய ஞாயிற்றை - யொப்பவும்; குட திசைத் தண்கதிர் மதியம் போலவும் -மேலைத் திக்கிற் றோன்றும் குளிர்ந்த கதிரையுடைய பிறையைப் போலவும்; உலகமோ டுடன் நின்று நிலைஇயர் இவ்வுலகத்தோடு கூட நின்று நிலைபெறுவாயாக எ-று.
பிணிமுகம் பிள்ளையா ரேறும் யானை யென்றும் சொல்லுப. கால முனபென்றது, தம்மை யெதிர்ந்தோர்க்குத் தாம் நினைந்தபொழுதே முடிவு காலத்தைச் செய்யும் வலியை மணிமிடற்றோனைக் கூற்றமென்றது, அழித்தற் றொழிலை யுடைமையான். வாலியோ னென்றது நம்பி மூத்தபிரானை. இகழுந ரடுநன் என்றது, மாயோனை. ஆரிரு ளகற்றும் வெங்கதிர்ச் செல்வன் என்றது, எழுகின்ற ஞாயிற்றை. மதி, இளம் பிறை. இது தேவரோடுவமித்தமையாற் பூவைநிலை யாயிற்று.
விளக்கம்: மணி யெனப் பொதுப்படக் கூறியவழிச் சிறப்புடைய நீல மணியே கொள்ளப்படுமாகலின், மணி மிடற்றோன் திருமணி மணிமயில் என்புழி யெல்லாம் நீலமணி யென்றே உரை கூறினார். வெம் நாஞ்சில் என்றவிடத்து, வெம்மை வேண்டற்பொருட் டாதலால், அடல் வெம் நாஞ்சில் என்றதற்குக் கொலையை விரும்பும் நாஞ்சில் என்றார். மணி மிடற்றோன் முதலிய நால்வரும் தெய்வமாதலின் அவர்க்கேற்ப, கால முன்பு என்பதற்கு முடிவு காலத்தைச் செய்யும் வலி யென்றார். கால முன்ப (புறம்:23) என்றவிடத்துப் பாண்டியன் நெடுஞ்செழியன் குறிக்கப்படுதலின், அவற்கேற்பக் காலன் போலும் வலியுடையோய் என்று உரை கூறினார். தான் கருதியதைக் கருதியவாறே முடிக்கும் பேராற்றல் முருகற் குண்டு; முருகன் திருவடி கருவோர்க்கே இவ் வுண்மை யுண்டாமென நக்கீரர் இன்னே பெறுதிநீ முன்னிய வினையே என்பர். மேனாட்டுக் கிரேக்கரும் உரோமரும் தம்மை அயோனியர் என்ப; அது யவனர் எனத் திரிந்தது. ஓங்கு வாள் மாற என்ற விடத்து, ஓங்குதற்குக் காரணம் இது வென்பார், வென்றியான் உயர்ந்த வாள் என்றார். ஞாயிறு இருளகற்றலாலும் திங்கட்பிறை தொழப்படலாலும் உவமமாயின. |