| 126. மலையமான் திருமுடிக்காரி           மலையமான் கபிலர் பாடும் புகழ் பெற்று இனிதிருக்கையில்         மாறோக்கத்து நப்பசலையார் அவனைக் காண்டற்கு வந்து, அவனுடைய
 முன்னோர் பகைவரை வென்று அவர் யானைகட்கிட்ட ஓடைப் பொன்னால்
 பொற்றாமரை செய்து தம்பால் வந்த பாணர்க்கு வழங்கினரென்றும்,
 திருமுடிக்காரியின் புகழனைத்தையும் எஞ்சாமல் இனிய பாட்டில் வைத்துக்
 கபிலர் பாடியுள்ளாரென்றும், மேலைக்கடலில் சேரமன்னர் கலஞ்செலுத்தி
 வாணிகம் செய்யத் தொடங்கியபின் வேற்றோர் எவரும் கலஞ்செலுத்துதற்
 கஞ்சுவாராயின ரென்றும் குறிப்பிட்டு, பெண்ணையாறு பாயும் நாடுடைய
 வேந்தே, முள்ளூர்க்குத் தலைவ, நின் குடிப்பெருமையும் நின் புகழும் யாம்
 கூறவல்லேமல்லேம். ஆயினும், இயன்ற அலவிற் கூறுவேம்; அன்றியும்;
 சேரர் காலஞ்சென்ற குடகடலில் பிறருடைய கலஞ் செல்லமாட்டாதது
 போலக் கபிலர் பாடியபின், எம்போல்வார் பாடல் செல்லாது; எனினும்,
 எம்மை இன்மையானது துரப்ப நின் வள்ளன்மை முன்னின்று ஈர்ப்ப வந்து
 சில பாடுவே மாயினம் என்று பாடியுள்ளார்.
 |  | ஒன்னார்             யானை யோடைப்பொன் கொண்டு பாணர் சென்னி பொலியத் தைஇ
 வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர்
 ஓடாப் பூட்கை யுரவோன் மருக
 |  | 5 | வல்லே             மல்லே மாயினும் வல்லே |  |  | நின்வயிற்             கிளக்குவ மாயிற் கங்குல் துயின்மடிந் தன்ன தூங்கிரு ளிறும்பிற்
 பறையிசை யருவி முள்ளூர்ப் பொருந
 தெறலரு மரபினின் கிளையொடும் பொலிய
 |  | 10 | நிலமிசைப்             பரந்த மக்கட் கெல்லாம் |  |  | புலனழுக்             கற்ற வந்த ணாளன் இரந்துசென் மாக்கட் கினியிட னின்றிப்
 பரந்திசை நிற்கப் பாடின னதற்கொண்டு
 சினமிகு தானை வானவன் குடகடற்
 |  | 15 | பொலந்தரு             நாவா யோட்டிய வவ்வழிப் |  |  | பிறர்கலஞ்             செல்கலா தனையே மத்தை இன்மை துரப்ப விசைதர வந்துநின்
 வண்மையிற் றொடுத்தனம் யாமே முள்ளெயிற்
 றரவெறி யுருமின் முரசெழுந் தியம்ப
 |  | 20 | அண்ணல்             யானையொடு வேந்துகளத் தொழிய |  |  | அருஞ்சமத்             ததையத் தாக்கி நன்றும் நண்ணாத்             தெவ்வர்த் தாங்கும்
 பெண்ணையம் படப்பை நாடுகிழ வோயே.               (126)
 | 
               திணை : பாடாண்டிணை. துறை : பரிசிற்றுறை.         மலையமான் திருமுடிக்காரியை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
 
 உரை : ஒன்னார் யானை ஓடைப்பொன் கொண்டு         -
 பகைவருடைய யானையினது பட்டத்திற் பொன்னைக்கொண்டு; பாணர்
 சென்னி பொலியத் தைஇ - பாணரது தலை பொலியும்படி செய்து;
 வாடாத் தாமரை சூட்டிய - வாடாத பொற்றாமரையைச் சூட்டிய;
 விழுச்சீர் ஓடாப் பூட்கை உரவோன் மருக - சிறந்த
 தலைமையினையும் புறக்கொடாத மேற்கோளினையுமுடைய பெரியோன்
 மரபினுள்ளாய்; வல்லே மல்லே மாயினும் - ஒன்றைக்
 கற்றறியேமாயினும்; அறிவேமாயினும்; வல்லே நின்வயின் கிளக்குவ
 மாயின் - விரைய நின்னிடத்துப் புகழைச் சொல்லுவேமாயின்; கங்குல்
 துயில்மடிந் தன்ன தூங்கிருள் இறும்பின் - இராப்பொழுது தான்
 ஓரிடத்தே யுறங்குவது போன்ற செறிந்த இருளையுடைய சிறு
 காட்டையும்; பறை இசை அருவி - பறை யொலி போலும் ஒலி
 பொருந்திய அருவியையுமுடைய; முள்ளூர்ப் பொருந - முள்ளூர்க்கு
 வேந்தே; தெற லரும் மரபின்நின் கிளையொடும் பொலிய -
 அழித்தற்கரிய தன்மையையுடைய நின் சுற்றத்துடனே பெருக;
 நிலமிசைப் பரந்த மக்கட்கு எல்லாம் - நிலத்தின்மேல் மிக்க
 மாந்தரெல்லாரினும்; புலன் அழுக்கற்ற அந்தணாளன் -
 அறிவின்கண் மாசற்ற அந்தணாளனாகிய கபிலன்; இரந்துசெல்
 மாக்கட்கு - இரந்து செல்லும் புலவர்க்கு; இனி இடன் இன்றி -
 இனிப் புகழ்தற்கு இடனில்லையாக; பரந்து இசை நிற்கப் பாடினன் -
 பரந்து புகழ் நிற்பப் பாடினான்; அதற்கொண்டு - அதனைக்
 கொண்டு; சினமிகு தானை வானவன் - சினமிக்க சேனையையுடைய
 சேரன்; குட கடல் பொலம் தரு நாவாய் ஒட்டிய அவ்வழி -
 மேல்கடலின்கண் பொன்னைத் தரும் நாவாய் செலுத்திய அவ்விடத்து;
 பிரர் கலம் செல்கலா தனையேம் - வேறு சிலர் மரக்கலம் போக
 மாட்டாத அத்தன்மையை யுடையேமாயும்; இன்மை துரப்ப - எமது
 மிடி துரக்க; இசைதர வந்து - நின் புகழ் கொடுவர வந்து; நின்
 வண்மையில் தொடுத்தனம் யாம் - நினது வண்மையிலே சில
 சொல்லத் தொடுத்தனம் யாங்கள்; முள் எயிற்று அரவு எறி உருமின்
 முரசு எழுந்தொலிப்ப - முட்போலும் பல்லினையுடைய பாம்பை
 யெறியும் இடியேறு போல முரசு கிளர்ந் தொலிப்ப; அண்ணல்
 யானையொடு - தலைமையையுடைய யானையுடனே; வேந்து களத்
 தொழிய - அரசு போர்க்களத்தின்கட்பட; அருஞ் சமம் ததையைத்
 தாக்கி - பொறுத்தற்கரிய பூசலைச் சிதற வெட்டி; நன்றும் நண்ணாத்
 தெவ்வர்த்தாங்கும் - பெரிதும்பொருந்தாத பகைவரைத்      தடுக்கும்;
 பெண்ணையம் படப்பை நாடு கிழவோய் - பெண்ணையாற்றுப்
 பக்கத்தை யுடைய நாட்டை யுடையோய் எ-று.
 
 உரவோன் மருக, பொருந, நாடு கிழவோய்; நின்வயிற்கிளக்குவமாயின்
 அந்தணாளன் கிளையொடும் பொலிய இசை நிற்பப்பாடினன்; அதற்கொண்டு
 பிறர் கலம் செல்லாத அனையேமாயும் இன்மை துரத்தலால் இசைதரவந்து
 நின் வண்மையிற் சில தொடுத்தேம் யாம் எனக் கூட்டி வினை முடிவு செய்க.
 
 மக்கட் கெல்லா மென்பது ஐந்தாவதன் மயக்கம்.மக்கட்கெல்லாம் ஒக்க
 வெனினு மமையும் வண்மையிற் றொடுத்தனம் என்பதற்குநின் வண்மையால்
 வளைப்புண்டன மெனினு மமையும்.
 
 விளக்கம் : பகைவருடைய யானைகளைக்         கொன்று அவற்றின்
 ஓடைப் பொன்னைக் கொண்டு தாமரைப் பூக்கள் செய்து பாணர்க்கு
 வழங்குவது பண்டையோர் மரபு. இதனை இவனுடைய முன்னோரும்
 செய்தனரென்றதற்கு, வாடாத் தாமரை சூட்டிய உரவோன் மருக என்றார்.
 கடல் மீதும் பொதுநீக்கி நிலவும் தமது அரசாணை (Maritime Supremacy)
 செலுத்திப் பண்டைத் தமிழ் வேந்தர் ஆட்சி புரிந்த திறம் தோன்ற,
 சினமிகு.......செல்கலாது என்றார். இஃது ஆங்கிலேயர் நாட்டு வரலாற்றினும்
 காணப்படும் அரசியற் பண்பென அறிக. வல்லே யென்பது விரைந்தென்னும்
 பொருளதாயினும் வல்லவாறே என்று பொருள் கூறிக்கொள்ளினும்
 பொருந்தும். மக்கட்கெல்லாம் என்பது மக்களெல்லாரினும் என ஐந்தாவதன்
 பொருள்படுதலின், உரைகாரர் ஐந்தாவதன் மயக்கம் என்றார்.
 மலையனையும் அவன் மலையையும் கபிலர் பாடிய செய்தியை மாறோக்கத்து
 நப்பசலையார், பிறாண்டும் பொய்யா நாவின் கபிலன் பாடிய, மையணி
 நெடுவரை (புறம். 174) என்று கூறியுள்ளார். மலையனுக்குரிய முள்ளூரில்
 முன்னொருகால் சோழ வேந்தனொருவன் புகலடைந்திருந்தா னென்பதையும்
 நப்பசலையாரே குறித்துள்ளார். ததைதல்-சிதறுதல். தாங்குதல்-தடுத்தல்.
 வருதார் தாங்கி (புறம்.52) என்றாற்போல. வண்மையில் தொடுத்தனம்
 என்றற்கு வண்மையிற் சிலவற்றைத் தொடுத்துக் கூறினேம் என்று உரை
 கூறினவர், வேறு பொருளும் கூற அமைதலின், நின் வண்மையால்
 வளைப்புண்டனம் என்று பொருள் உரைக்கினும் அமையும் என்றார்.
 |