76. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாண்டியன் நடுஞ்செழியன் தலையாலங்கானத்துச் செருவில் தன்னை யெதிர்த்த முடி வேந்தர் இருவரும் குறுநில மன்னர் ஐவருமாகிய எழுவரும் தோற்றோடுமாறு தான் ஒருவனே வென்ற சிறப்பை மதுரை நக்கீரர், ஆலம்பேரி சாத்தனார், கல்லாடனார் முதலிய சான்றோர் பலர் புகழ்ந்திருக்கின்றனர். அவருள், இடைக்குன்றூர்கிழார் என்னும் சான்றோர் இச் செழியன் வெற்றி பெற்ற காலத்தில் இருந்தவர். அவர் இச் செழியன் ஒருவனாய் இருந்து பொருது வென்றதை, ஒருவரை யொருவர் அடுதலும், ஒருவர்க் கொருவர் தொலைதலும் இவ்வுலகத்தே தொன்றுதொட்டு வருவன; அவ்வாறு அடுதலும் தொலைதலும் நிகழுமிடத்து வெற்றி பெற்றோர் பலரும் பலருடைய துணைபெற்று அதனைப் பெற்றது கேள்வி யுற்றுள்ளோமேயல்லது ஒருவனே தனித்து நின்று பலராய்க் கூடி யெதிர்ப்போரை வென்றது கேட்டிலம்; பாண்டியன் ஒருவனாய் நின்று தம் பீடும் செம்மலும் அறியாமல் எதிர்த்த எழுவர். நல்வலம் அடங்க வென்றது, இன்றுகாறும் யாம் கேட்டதன்று என இப்பாட்டின்கண் வியந்து கூறியுள்ளார். இடைக்குன்றூர் என்பது இவரதூர். இவர் வேளாளர். இவர் பாண்டியன் நெடுஞ்செழியன் ஒருவனால் எழுவரை வென்ற செய்தியை வியந்தும், போர் செய்த திறத்தைப் புகழ்ந்தும், பகைவர் கருத்தழிந்த வகையைக் கட்டுரைத்தும், அவன் போர்க்குச் சென்ற நலத்தைப் பாராட்டியும் பாடியுள்ளார். சுருங்கச் சொல்லின், தலையாலங்கானப் போர் நிகழ்ச்சியை நேரிற் கண்டுரைக்கும் சான்றோருள் இவர் சிறந்தவர் என்பது மிகையாகாது. | ஒருவனை யொருவ னடுதலுந் தொலைதலும் புதுவ தன்றிவ் வுலகத் தியற்கை இன்றி னூங்கோ கேளலந் திரளரை மன்ற வேம்பின் மாச்சினை யொண்டளிர் | 5. | நெடுங்கொடி யுழிஞைப் பவரொடு மிடைந்து | | செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி ஒலியன் மாலையொடு பொலியச் சூடிப் பாடின் றெண்கிணை கறங்கக் காண்டக நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன் | 10. | பீடுஞ் செம்மலு மறியார் கூடிப் | | பொருது மென்று தன்றலை வந்த புனைகழ லெழுவர் நல்வல மடங்க ஒருதா னாகிப் பொருதுகளத் தடலே. (76) |
திணை: வாகை. துறை: அரசவாகை. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை இடைக்குன்றூர் கிழார் பாடியது. உரை: ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்று - ஒருவனை யொருவன் கொல்லுதலும் ஒருவற்கொருவன் தோற்றலும் புதிதன்று; இவ்வுலகத்து இயற்கை - இந்த உலகத்தின்கண் முன்னே தொட்டு இயல்பு; இன்றின் ஊங்கு கேளலம் - இன்றையின் முன் கேட்டறியோம்; திரள் அரை மன்ற வேம்பின் - திரண்ட தாளையுடைய மன்றத்திடத்து வேம்பினது; மாச்சினை ஒண் தளிர் - பெரிய கொம்பின்கண் உண்டாகிய ஒள்ளிய தளிரை; நெடுங் கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து - நீண்ட கொடியாகிய உழிஞைக் கொடியுடனே விரவி; செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி - செறியத் தொடுக்கப்பட்ட தேன் மிக்க மாலையை; ஒலியல் மாலையொடு பொலியச் சூடி - வளைய மாலையுடனே சிறப்பச் சூடி; பாடின் தெண் கிணை கறங்க - ஓசையினிய தெளிந்த போர்ப்பறை யொலிப்ப; காண்தக - காட்சிதக; நாடு கெழு திருவின் பசும் பூண் செழியன் - நாடு பொருந்திய செல்வத்தினையுடைய பசும் பொன்னாற் செய்த பூணையணிந்த நெடுஞ் செழியனது; பீடும் செம்மலும் அறியார் - பெருமையையும் உயர்ந்த தலைமையையும் அறியாராய்; கூடிப் பொருதும் என்று தன் தலை வந்த - தம்மிற்கூடிப் பொருவேமென்று தன்னிடத்து வந்த; புனை கழல் எழுவர் நல் வலம் அடங்க - புனைந்த வீரக் கழலினையுடைய இரு பெரு வேந்தரும் ஐம் பெரு வேளிருமாகிய ஏழரசருடைய நல்ல வென்றி யடங்க; ஒரு தானாகிப் பொருது களத்து அடல் - தான் ஒருவனாய் நின்று பொருது களத்தின்கட் கொல்லுதல் எ-று.
ஒருவனை யொருவன் அடுதலும் தொலைதலும் புதுவ தன்று; இவ்வுலகத் தியற்கை; செழியன் பொருது மென்று வந்த எழுவர் நல்வல மடங்க ஒருவனாகித் தெரியலை மாலையொடு காண்டகச் சூடிக் கிணை கறங்கப் பொருது களத்து அடல் இன்றின் ஊங்கோ கேளலம் எனக் கூட்டி வினைமுடிவு செய்க.
விளக்கம்: வேம்பினது, அடிப்பகுதி பருத்துத் திரண்டிருத்தலின், திரளரை யென்றாராக, உரைகாரர், திரண்ட தாள் என்றார். பவர் - கொடி. வேம்பு, அடையாளப் பூ; உழிஞை - போர்த்துறைக்குரிய பூ. ஒலியல் மாலை - வளைய மாலை. செம்மல், செம்மையுடைமை அதனை யுடையார் தலைவராதலின், செம்மல் தலைமை யாயிற்று. புனை கழல் எழுவராவார். சேரன், சோழன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் என்ற எழுவர். பசும்பூண் பாண்டிய னென்னாது, செழியன் என்றார். பசும்பூண் பாண்டிய னென்ற பெயரே யுடைய பாண்டி வேந்தனொருவன் உளனாதலின். |